"பாகிஸ்தானுக்கு எதிராக போராடுங்கள்; மத்திய அரசுக்கு எதிராக அல்ல" - நரேந்திர மோதி
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: "பாகிஸ்தானுக்கு எதிராக போராடுங்கள்… மத்திய அரசுக்கு எதிராக அல்ல"

பட மூலாதாரம், Hindustan Times / Getty
'குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள்' என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: மதத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது; இந்தியா பிரிக்கப்பட்டது. இந்து, கிறிஸ்துவர், சீக்கியர், ஜெயின்களுக்கு எதிரான வன்முறை, பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்துள்ளனர். பாகிஸ்தானை உலக நாடுகள் மத்தியில் குற்றவாளியாக நிறுத்த வேண்டும்.
நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், 70 ஆண்டுகளாக அராஜகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தானை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் கீழ்த்தட்டு மக்களுக்காக பேரணி நடத்துங்கள்.
இந்தியாவிடம் தஞ்மடைந்திருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் போராடி வருகின்றன. இவர்களின் செயலால் சர்வதேச அளவில் இந்தியாவுக்குதான் அவமானம் ஏற்படும். குடியுரிமை திருத்த சட்டம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை திட்டுங்கள். இவ்வாறு அவர் பேசியதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன முதியவர்

பட மூலாதாரம், Muralinath / Getty
மேற்கு வங்கத்தின் தென் புர்ட்வான் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதாகும் இந்திர நாராயண் சென், ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் லாட்டரியில் வெற்றி பெற்றதே இதற்கு காரணம்.
தற்போது தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனதால், தமக்கு வீட்டை விட்டு வெளியே பயமாக உள்ளதாகவும், தனக்கு போதிய பாதுகாப்பு வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"மூன்று மாதங்களுக்குள் எனக்கு பணம் வந்துவிடும். ஆனால், தற்போது என் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதால், என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதனால்தான் பாதுகாப்புக் கோரி காவல்துறையை அணுகினேன்" என்று இந்திர நாராயண் சென் தெரிவித்ததாக கூறுகிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி.

தினமணி: தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருது
எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை பெற்ற தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகள், மாநில அரசுகளைக் கௌரவிப்பதற்காக, மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ஆண்டுதோறும் வேளாண் தொழிலாளர் விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட தும்கூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை அடைந்ததால் சிறந்த வேளாண் தொழிலாளர் விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டது.

எதிர்கால விவசாயம் இப்படித்தான் இருக்குமா? | Future Farming in India

தமிழக அரசின் சார்பில் இந்த விருதை பிரதமர் நரேந்திர மோதியிடமிருந்து அமைச்சா் டி.ஜெயக்குமார் பெற்றார். வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழகத்துக்கு 5-ஆவது முறையாக இந்த விருது அளிக்கப்படுகிறது.
2017- 18-ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ உற்பத்தி திறனுடன் 10.382 லட்சம் டன் எண்ணெய் வித்துகளை தமிழகம் உற்பத்தி செய்தது.
அகில இந்திய அளவில் உற்பத்தித்திறன் ஹெக்டேருக்கு 1,284 ஆக உள்ளது. 2011- 12ஆம் ஆண்டு முதல் வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக, உணவு தானிய உற்பத்தி, பயறுவகை உற்பத்தி, தானிய உற்பத்திக்கு தமிழக அரசுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. எண்ணெய் வித்து உற்பத்தியில் அதிக மகசூலை தந்த தமிழகத்தைச் சோ்ந்த 2 விவசாயிகளுக்கும் வளா்ச்சிசார் விவசாயிகள் விருது அளிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












