இலங்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்துவந்த முக்கிய அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2005 - 2015 காலகட்டத்தில், நடந்ததாக கூறப்படும் பல்வேறு கொலை, கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் தாக்குதல் போன்ற சம்பவங்களை விசாரணை செய்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் தலைமையகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷான் அபேசேகர தலைமையில் அந்த திணைக்களத்தின் மூத்த அதிகாரி நிஷாந்த சில்வா இந்த விவகாரத்தில் முக்கிய விசாரணைகளை மேற்கொண்டுவந்தார்.
இலங்கையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் இந்த விசாரணைகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக போலியாக விசாரணை நடத்தப்பட்டதாக பலர் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.
விசாரணைகளும், வழக்குகளும்
இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பல விசாரணைகளை ஷான் அபேசேகர மற்றும் நிஷாந்த சில்வா ஆகியோரே முன்னெடுத்திருந்தனர்.

ரக்பீ வீரர் வசிம் தாஜுதீன் கொலை, கொழும்பு மற்றும் இவற்றை அண்டிய பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, ரத்துபஸ்வெல துப்பாக்கி பிரயோகம் ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை இந்த இரண்டு அதிகாரிகளே முன்னெடுத்திருந்தனர்.
அதுமட்டுமன்றி, பல முக்கிய நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இந்த இரண்டு அதிகாரிகளே விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
நிஷாந்த சில்வா தப்பியோட்டம்
இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒன்றிணைந்த கொள்ளை விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா தனது குடும்பத்தாருடன் கடந்த 24ம் தேதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக நிஷாந்த சில்வா வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதை போலீஸ் தலைமையகம் உறுதி செய்தது.
பல சர்ச்சைக்குரிய விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நிஷாந்த சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து நீர்க்கொழும்பு போலீஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டு, பின்னர் அவர் சில நாட்களில் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தோடு இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இதையடுத்து, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழு, நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தது.
இதன்படி, நிஷாந்த சில்வாவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்ததென போலீஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் மாஅதிபர் விசாரணைகளை நடத்திய நிலையிலேயே நிஷாந்த சில்வாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக போலீஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA / GETTY IMAGES
எனினும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி போலீஸ் மாஅதிபர் ஆர்.பி.செனவிரத்ன இந்த விடயம் தொடர்பாக போலீஸ் மாஅதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்த அதிகாரி தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலி என அவர் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்தே, நிஷாந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதாக போலீஸார் அப்போது கூறியிருந்தனர்.
இலங்கையில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஷான் அபேசேகர, காலி மாவட்ட பிரதி போலீஸ் மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த இடமாற்றத்திற்கு அனுமதியை போலீஸ் ஆணைக்குழு வழங்கியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே ஷான் அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்ட பின்னணியில், நிஷாந்த சில்வா நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
போலீஸ் தலைமையகத்தின் அறிக்கை
இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒன்றிணைந்த கொள்ளை விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக கடந்த 24ம் தேதி வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
போலீஸ் அதிகாரியொருவர் கடமை நிமித்தமோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ வெளிநாடு செல்ல வேண்டும் என்றால்,பொறுப்பான அமைச்சின் செயலாளரது அனுமதி அவசியம் என தலைமையகம் குறிப்பிடுகின்றது.
எனினும், இந்த அதிகாரி எந்தவித அனுமதியும் பெறாத நிலையிலேயே வெளிநாடு சென்றுள்ளதாக போலீஸ் தலைமையகம் கூறுகின்றது.
கடந்த நான்கு வருட காலமாக குறித்த அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பக்கச்சார்பாகவும், சாட்சியங்கள் இன்றியும் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிகாரியின் விசாரணைகள் தொடர்பாக மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்த நிலையிலேயே, நிஷாந்த சில்வா அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரி தொடர்பாக எந்தவித விசாரணைகளோ அல்லது ஒழுக்காற்று நடடிவக்கைகளோ ஆரம்பிக்கப்படாத பின்னணியில் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிறப்பு பிரிவால் சிறப்பு விசாரணைகளை நடத்திய அதிகாரியொருவர் அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளமை சர்ச்சையாக விடயமென போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பாக, உடனடி விசாரணைகளை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு போலீஸ் தலைமையகம் உத்தவிட்டுள்ளது.
நிஷாந்த சில்வா அனுமதியின்றி வெளிநாடு சென்றது, ஒழுக்கமற்ற செயல்பாடு என்பதுடன், அது தொடர்பாக ஒழுங்காற்று விசாரணைகளை நடத்தப்போவதாகவும் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் 704 அதிகாரிகளின் பெயர்ப் பட்டியல் விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பட்டியலில் உள்ள எவரேனும் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் போலீஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












