இலங்கை ஜனாதிபதி தேர்தல் வன்முறை: மலையகத் தமிழர்கள் மீது தாக்குதல்

தெரணியகல பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.
படக்குறிப்பு, தெரணியகல பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வன்முறையின்போது கேகாலை - தெரணியாகல பகுதியில் வாக்களித்த தமிழர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வாக்களிக்க சென்ற வாக்காளர்களை ஒரு தரப்பிற்கு வாக்களிக்க வேண்டுமென சில தரப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.

அதையும் மீறி தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீதே சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஆண் ஒருவரை கத்தியால் வெட்டியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வன்முறை
படக்குறிப்பு, கேகாலை - தெரணியாகல பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தினர்

வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நபர் தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது ஒரு வீட்டுக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை அடுத்து, தெரணியகல பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.

இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியில்லாத சூழ்நிலையை இயல்புக்கு கொண்டு வரும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் வழக்கம் போல வாக்களித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுவரை வாக்களிக்காத வாக்காளர்களுக்கு தாம் முழுமையான பாதுகாப்பை வழங்குவதாகவும், அச்சமின்றி வாக்களிக்க வருகைத் தருமாறும் போலீசார் வாக்காளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

பதுளையில் பெண்ணொருவர் மீது தாக்குதல்

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மதியம் 1 மணிவரை 139 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவிக்கிறது.

பதுளை - ஹப்புத்தளை பகுதியில் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக இந்த நிலையம் தெரிவிக்கின்றது.

presidential election

பட மூலாதாரம், Getty Images

அரசியல்வாதிகள் சிலர் எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவர் வெட்டி தாக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் பொரலந்த ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :