இலங்கை ஜனாதிபதி தேர்தல்: துப்பாக்கிச்சூடு, மழையை மீறி வாக்களிக்கும் மக்கள்

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

மன்னார் - தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பேருந்தில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த பேருந்து
படக்குறிப்பு, துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த பேருந்து

யுத்தக் காலத்தில் வவுனியாவிலிருந்து புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சிலரே இந்த பேருந்தில் பயணித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

செட்டிக்குளத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

"முதலில் கல்வீச்சு தாக்குதல் நடத்திய பிறகு துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியால் வாக்காளர்களை ஏற்றிச்சென்ற குறைந்தது இரண்டு பேருந்துகள் சேதமடைந்ததன" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த பேருந்து

அதுமட்டுமின்றி, பேருந்துகள் சென்றுகொண்டிருந்த சாலையில் டயர்களை எரித்து தாக்குதலாளிகள் இடையூறு ஏற்படுத்தியதாகவும், பின்பு சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சாலையை சரிசெய்து, வாக்காளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு வாக்குச்சாவடி வரை பாதுகாப்பு அளித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமையின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்த விசாரணையை தந்திரிமலை மற்றும் செட்டிக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

காலை 7 மணி முதல் 10 மணி வரை 69 தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

Presidential Elections

வாக்களிப்பு வீதம் (காலை 1 மணி வரை) மாவட்ட வாரியாக பதிவான வாக்களிப்பு விகிதம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
  • கொழும்பு - 40 வீதம்
  • மாத்தறை - 50 வீதம்
  • ஹம்பாந்தோட்டை - 55 வீதம்
  • திருகோணமலை - 52 வீதம்
  • இரத்தினபுரி - 44 வீதம்
  • வவுனியா - 25 வீதம்
  • மன்னார் - 47 வீதம்
  • யாழ்ப்பாணம் - 50 வீதம்
  • மட்டக்களப்பு - 55 வீதம்
  • இரத்தினபுரி - 40 வீதம்
  • நுவரெலியா - 50 வீதம்
  • களுத்துறை - 20 வீதம்
  • குருநாகல் - 40 வீதம்
  • காலி - 50 வீதம்
  • கேகாலை - 37 வீதம்
  • மொனராகலை - 55 வீதம்
  • கிளிநொச்சி - 50 வீதம்
  • புத்தளம் - 50 வீதம்
  • அநுராதபுரம் - 40 வீதம்
  • கண்டி - 55 வீதம்
  • பொலன்னறுவை - 60 வீதம்
  • கம்பஹா - 40 வீதம்
  • மாத்தளை - 65 வீதம்
  • திகாமடுல்ல (அம்பாறை) - 55 வீதம்
  • பதுளை - 60 வீதம்

கிழக்கு மாகாணத்தின் நிலவரம் என்ன?

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களில் மிகவும் அமைதியாக நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பல இடங்களில் அவதானிக்க முடிகிறது.

கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்த போதும், மக்கள் தொடர்ந்து வாக்களித்த வண்ணம் இருந்தனர்.

காலை 10.00 மணிக்கு முன்னதாகவே பல இடங்களில் கணிசமான அளவு மக்கள் வாக்களித்திருந்தனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

முறைப்பாடு

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழர் பகுதிகளில் அமைந்துள்ள கணிசமான வாக்களிப்பு நிலையங்களில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் சார்பான வாக்களிப்பு நிலைய முகவர்கள் மட்டுமே கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

சில இடங்களில் மற்றொரு பிரதான வேட்பாளர் சார்பில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாக்களிப்பு நிலைய முகவர்கள் சிலர், எதிரணியைச் சேர்ந்த பிரதான வேட்பாளரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக, குறித்த முகவர்கள் - கடமையாற்றிய வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான முறைப்பாடுகள் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தில் பதிவாகியுள்ளன.

முரண்பாடு

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

வாக்களிக்கச் செல்வோர் தமது வாக்காளர் அட்டையினைக் கொண்டு செல்லவில்லை என்கிற காரணத்தினால், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், ஒருவர் தனது வாக்கினை அளிப்பதற்கு வாக்காளர் அட்டையை காண்பித்தல் அவசியமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்த போதிலும், அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் வாக்காளர் அட்டையை கொண்டு செல்லாத சிலர், வாக்களிப்பு நிலைய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மூன்று வகைப் பெட்டிகள்

இதேவேளை, இன்றைய தேர்தலில் மூன்று வகையான வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த காலங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த மரப் பலகையிலான வாக்குச் சீட்டுப் பெட்டிகள், அண்மைய தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாக்குச் சீட்டுப் பெட்டிகள் என்பவற்றுக்கு மேலதிகமாக இன்று கார்டு போர்டுகளினாலான ஆன வாக்குச் சீட்டுப் பெட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

வாக்குச் சீட்டு அதிக நீளமானதாக உள்ளதால், அதிக வாக்குப் பெட்டிகள் இம்முறை தேவைப்பட்டது. அதனால், செலவைக் குறைக்கும் வகையில் கார்டு போர்டுகளினாலான வாக்குச் சீட்டுப் பெட்டிகளை இம்முறை தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் காவல்துறையினர் மட்டுமன்றி விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

சில வாக்களிப்பு நிலையங்களில், வாக்காளர்களின் அடையாள அட்டைகளைப் காவல்துறையினர் பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :