"இலங்கைத் தமிழர்களை சிங்களத் திரைப்படங்கள் அடிமைகளாக சித்தரித்தன" - சிங்கள அரசியல்வாதிகள் கருத்து

பட மூலாதாரம், Getty Images
இலங்கையிலுள்ள தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக மாற்றியது சிங்களத் திரைப்படங்கள் என சிங்கள தரப்பினரே இன்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
1970 தொடக்கம் 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் வெளியான சிங்களத் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்கள் அடிமைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசியல்வாதிகள் சிலர் தற்போது தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஊடகவியலாளர்களை நேற்றிரவு (24) நட்பு ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
கூலித் தொழிலாளிகள், சமையல்காரர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதணி சுத்திகரிப்பவர்கள் போன்ற காட்சிகளுக்கு தமிழர்கள் அல்லது தமிழ் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு சிங்களத் திரைப்படங்கள் அப்போது வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய கதாபாத்திரங்களில் சிங்களவர்கள் நடித்துள்ளதாகவும், தமிழர்கள் சிங்கள திரைப்படங்களில் அடிமைகளை போன்று பிரதிபலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
இவ்வாறு சிங்களத் திரைப்படங்களில் தமிழர்கள் அடிமைகளை போன்ற செயற்படும் கதாபாத்திரங்கள் இடம்பெற்றமையினாலேயே தமிழர்கள் இன்றும் சிங்களவர்கள் மத்தியில் அடிமைகளை போன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக டலஸ் அழகபெரும சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மலையக பகுதிகளுக்கு செல்லும் சிங்களவர்கள், இன்றும் தமது வீட்டு வேலைகளுக்காக தமிழர்களை தேடி வருவதாகவும் அவர் நினைவூட்டினார்.
செய்திகளை பார்த்து தமது அறிவை வளர்த்துக் கொள்வோரைவிடவும், திரைப்படங்களை பார்த்து முன்னுதாரணமாக கொள்வோர் இன்றும் சமூகத்தில் உள்ளதாக கூறிய அவர், சிங்களத் திரைப்படங்களில் வெளியான இவ்வாறான காட்சிகளைக்கொண்டே தமிழர்களை அடிமைகள் போன்று சிங்களவர்கள் எண்ணி வருவதாகவும் கூறினார்.
இன்றைய சூழ்நிலையில் அந்த நிலைமை சற்று மாறியுள்ள போதிலும், முழுமையாக அந்த எண்ணப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும சுட்டிக்காட்டினார்.
'இன்றும் பதில் தெரியவில்லை'
தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கே, தமிழர்கள் இன்றும் வாக்களித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை ஏற்பட்ட காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்ததாகவும், யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும கூறினார்.
தமிழர்களை கொன்றதாக மஹிந்த ராஜபக்ஸ மீது தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற பின்னணியில், இறுதி யுத்தத்தில் களத்திலிருந்து ஆணை பிறப்பித்த அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்கள் ஏன் இவ்வளவு ஆதரவை வழங்குகின்றனர் என்ற கேள்விக்கு இன்றும் பதில் தெரியாத தாம் வியப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களுக்கு துரோகம் விளைவித்த ஐக்கிய தேசியக் கட்சியை தமிழர்கள் ஏற்றுக்கொள்கின்ற போதிலும், தமிழர்களுக்கு நன்மையை செய்த தமது தலைமைத்துவத்தை தமிழர்கள் துரோகிகளாகவே கருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
'ஜனநாயகத்தை ஏற்படுத்தியவர் மஹிந்த'

யுத்தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வடக்கிற்கு உடனடி தேர்தல் ஒன்றை நடத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்திய ஜனநாயகத்தை ஏற்படுத்தியது மாத்திரமன்றி, வடக்கில் அபிவிருத்தி ஏற்படுத்துவதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களுக்கான தேசிய தீர்வை வழங்கவில்லை என்பதற்காகவே தமிழர்கள் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்ப்பதாக கூறிய மஹிந்தானந்த அளுத்கமகே, தேசிய தீர்வை வழங்குவதாக கூறி ஆட்சி அமைத்த இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலம் நிறைவடையும் தருணம் வந்துள்ள போதிலும், தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












