இலங்கையில் 'பெளத்த சின்னம் பொறித்த ஆடை' அணிந்ததாக பெண் கைது - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பெளத்த சின்னம் பொறித்த ஆடை - இலங்கையில் பெண் கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

தான் அணிந்திருந்த ஆடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை போலீஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, இலங்கை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட எனும் பிரதேசத்தை சேர்ந்த, 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண் ஒருவரே இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோரின் ஆலோசனைக்கிணங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, இந்த வழக்கை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் சார்பாக தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பெண் அணிந்திருந்த ஆடையொன்றில் பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, மஹியங்கணை போலீஸார் கடந்த மே மாதம் 17ம் தேதி, அவரைக் கைது செய்து, 18ம் தேதி மஹியங்கணை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

தனது சட்டத்தரணிகள் மற்றும் கணவருடன் மஸாஹிமா
படக்குறிப்பு, தனது சட்டத்தரணிகள் மற்றும் கணவருடன் மஸாஹிமா

இதன்போது, குறித்த பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜுன் மாதம் 03ம் தேதி, சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதங்களைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியது.

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் ஆடையில் காணப்பட்ட வடிவம், தர்மச் சக்கரம்தானா என்பதை அடையாளம் காண்பதற்காக, அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபைக்கும் தாம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால், அதனை ஒப்பீடு செய்வதற்குரிய சரியான தர்மச் சக்கர வடிவம் தம்மிடம் இல்லை என, அவர்கள் தெரிவித்து விட்டதாகவும், மஸாஹிமாவுக்கு பிணை வழங்கிய அன்று, நீதிமன்றில் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, தனது ஆடையில் இருந்த வடிவத்தை காரணம் காட்டி, தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தமையின் மூலம், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :