முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் - மதகுருமார்கள், அதிகாரிகளை சந்தித்த ரணில்

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேற்று சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம் மற்றும் ரவிகருணாநாயக்க உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குளியாப்பிட்டி உதவி போலீஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், மதகுருமார் மற்றும் முக்கியஸ்தர்களுடன், நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது, பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியமை தொடர்பில் முதலாவதாகக் கவனம் செலுத்தப்பட்டதாகவும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரயோகிப்பதில் ஏற்பட்ட பலவீனமே வன்செயல்கள் உக்கிரமடைவதற்கு காரணமாக அமைந்ததென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அமைச்சர் ஹக்கீமுடைய ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்ட பிரதமர் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கூட, தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியதோடு, வன்செயல்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தால் இந்தளவு நிலைமை மோசமடைந்திருக்காது என்பதையும் ஏற்றுக்கொண்டதாகவும், அமைச்சர் ஹக்கீமுடைய ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பஸ் மற்றும் மோட்டார் வண்டிகளில் வந்து உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தியதாக பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் இதன்போது கூறப்பட்டது. இந்த விடயத்தை அங்கு சமூகமளித்திருந்த பௌத்த மதகுருமார்களும் உறுதிப்படுத்தினர்.
இதேவேளை, அசம்பாவிதத்தின் பின்னணியில் ஹெட்டிபொல போலீசார் கைது செய்த 06 பேரை, குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வந்து விடுவித்துச் சென்றதாகவும் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
தமது பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களுக்குரிய 'ஹார்ட் டிஸ்க்'-ஐ, அங்கு படையினரின் சீருடையில் வந்தவர்கள் எடுத்துச் சென்றதாக, குளியாப்பிட்டி பிரதேசத்துக்கு நேற்று, செவ்வாய்கிழமை, சென்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம், சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












