விடுதலைப் புலி அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பாதுகாப்பு படையினர் கொலை வழக்கிலிருந்து விடுதலை

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அஜந்தனை இன்று சனிக்கிழமை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி சோதனை சாவடியிலிருந்த இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பலர் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த இரண்டு தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என போலீஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு, அவர்களது உறவினர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும், அவர்களை விடுதலை செய்ய பாதுகாப்பு தரப்பினர் மறுத்து வந்தனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த சந்தேக நபர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மட்டக்களப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான அஜந்தன் என்றழைக்கப்படும் கதிர்காமத்தம்பி ராஜகுமார் இன்று, சனிக்கிழமை, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களினாலேயே வவுணதீவு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸார் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான அஜந்தனை விடுதலை செய்யுமாறு அமைச்சர் மனோ கணேஷன், ஜனாதிபதியிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியிலுள்ள சோதனை சாவடியொன்றில் கடமையாற்றிய இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கி சூட்டு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

அவர்களின் உடலில் வெட்டு காயங்களும் காணப்பட்டமை போலீஸார் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், அரச பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.
இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு வவுணதீவு போலீஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ததன் ஊடாகவே தமது பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸார் மத்தியில் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












