சிங்கள குடியேற்றத்தை எதிர்த்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்

இலங்கை அரசினால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாபெரும் போராட்டமொன்று நடைபெற்றது.
வட மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தும், அபகரித்தும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு எதாரான போராட்டத்திற்கு மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.
இப்போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்திருந்தன. இதற்கமைய மேற்படி பேரவையின் ஏற்பாட்டில் பேரணியும் எதிர்ப்பு போராட்ட கூட்டமும் கரைத்துரைப்பற்று பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போராட்டத்தையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டி அங்குள்ள மக்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந் நகர வீதீயூடான பேரணியின் போது எமது நிலம் எமக்கு வேண்டும், மகாவலி திட்டமோ குடியேற்றமோ எமக்கு வேண்டாம். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்து, பறிக்காதே பறிக்காதே எமது நிலத்தை எம்மிடமிருந்து பறிக்காதே, நல்லாட்சியே நாசகார வேலை செய்யாதே போன்ற பல்வேறு கோசங்களை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பியிருந்தனர்.
இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மத தலைவர்கள் பொது மக்கள் எனப் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இவ்விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பி.பி.சி. தமிழுக்கு தெரிவிக்கையில்:- மகாவலி அதிகார சபையினூடாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதனையும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தியே வருகின்றோம்.
ஆனால் அதற்கு எத்தவிதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே மகாவலி அதிகார சபையினால் அண்மையில் சிங்கள மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் குறித்து நேற்று நடைபெற்ற ஐனாதிபதி செயலணியில் நாங்கள் கூறிய போது அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை என ஐனாதிபதி கூறியுள்ளார். ஆனாலும் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய நிலையிலையே தாம் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஐனாதிபதி கூறினார். ஆகவே மகாவலி அதிகார சபையினால் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












