இலங்கையில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எம்.பி பதவி: அமைச்சரே எதிர்ப்பு

தனது பதவிக் காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளது ஆச்சரியமளிப்பதாக, இலங்கையின் உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ
படக்குறிப்பு, அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராகச் பதவியேற்றுள்ளதால் ஆச்சரியமடைந்தேன் - விஜேதாஸ ராஜபக்ஷ

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், இலங்கை நாடாளுமன்றத்தின் தேசியப்பட்டியல் உறுப்பினராக வெள்ளிக்கிழமை காலை, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

அன்றைய தினம் பிற்பகல் உயர் கல்வியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றில் உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

உயர் கல்வியமைச்சர் மேலும் கூறுகையில்; "தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இஸ்மாயில் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 'கோப்' குழு (பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்றக் குழு) உறுப்பினர்கள் இங்கிருந்தால், அவர்கள் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருப்பார்கள்."

"பல்கலைக்கழகத்தின் நிதியில் முன்னாள் துணை வேந்தரின் வீட்டுக்கான நீர்க் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் போன்றவை செலுத்தப்பட்டன."

"இவ்வாறு குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள ஒருவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். இது தொடர்பாக நான் ஆச்சரியமடைந்தேன். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதற்கிடையில்தான், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து. அவர் பதவியேற்றுள்ளார்," என்றார்.

2015 நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை இழந்தார்
படக்குறிப்பு, 2015 நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை இழந்தார்

இலங்கையின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி பதவி விலகியதால் முன்னாள் துணை வேந்தர் இஸ்மாயில் - நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, ஐக்கிய தேசியக் கட்சியானது, தனக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை, தனது பங்காளிக் கட்சியான, அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கியது.

அந்தப் பதவிக்கு ஆரம்பத்தில் எம்.எச்.எம். நவவி என்பவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நியமித்தது. அவர் சுமார் மூன்று ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க, எம்.எச்.எம். நவவி தனது பதவியில் இருந்து மே மாதம் 23ஆம் தேதி விலகினார்.

இதனையடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தற்போது முன்னாள் துணை வேந்தர் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட முன்னாள் துணை வேந்தர் இஸ்மாயில், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை இழந்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

இந்த நிலையிலே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவியேற்றுள்ளார்.

இலங்கை தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் மேற்படி இஸ்மாயில் துணை வேந்தராகப் பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையிலேயே, அவர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இவர்களில் 196 பேர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார்.

அறிவாளிகளையும், சமூகப்பணியாளர்களையும் தேர்தல்களில் போட்டியிடாமலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கும் நோக்குடன், தேசியப்பட்டியல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: