"பிரணாப் முகர்ஜியின் விஜயம் ஆர்.எஸ்.எஸ்-இன் வெற்றியாகப் பார்க்கப்படும்"
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டது, காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பட மூலாதாரம், SANJAY TIWARI
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமையன்று நாக்பூர் சென்ற பிரணாப் முகர்ஜி, அந்த அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவார் வீட்டிற்கும் சென்றார்.
அவரை அங்கு ஆர்.எஸ்.எஸின் தலைவரான மோகன் பகவத் வரவேற்றார். அதன் பிறகு, பயிற்சி முகாம் நிறைவுவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவின் பன்முகத் தன்மை குறித்தும் சகிப்புத் தன்மை குறித்தும் வலியுறுத்திப்பேசினார்.
இந்த நிலையில், அவர் கலந்துகொண்டதை தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது குறித்து தீவிரமான விமர்சனங்கள் உள்ளன. சிலர் இதனைக் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். வேறு சிலர், ஆர்.எஸ்.எஸின் கூட்டத்திற்குள்ளே சென்று, மதச்சார்பின்மை குறித்துப் பேசியிருப்பதை ஒரு வெற்றியாகப் பார்க்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம், போலி மதச்சார்பின்மையை பின்பற்றிவரும் காங்கிரஸ்காரர்களுக்கு பிரணாப் முகர்ஜி அறிவுரை சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார் பா.ஜ.கவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி.
"ஹெட்கேவார் நினைவிடத்திற்கு வந்ததற்கு பெருமைப்படுவதாக சொல்லியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. இதுவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று சொன்னவர்களுக்கு இது ஒரு சவுக்கடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி இந்தக் கூட்டத்திற்கு வந்ததை, காங்கிரஸ்காரர்கள் கேலி செய்வது கண்டிக்கத்தக்கது." என்கிறார் நாராயணன்.
ஒற்றுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டுமென பிரணாப் முகர்ஜி கூறியிருப்பது ஆர்.எஸ்.எஸ்.-க்கு அல்ல, காங்கிரசிற்குத்தான் என்கிறார் அவர்.

"நாட்டில் பல மதவாத சக்திகள் இருக்கின்றன. அதில் முதல் சக்தி காங்கிரஸ்தான். சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த நாட்டை மத, ஜாதி ரீதியாக அவர்கள்தான் பிரித்துவைத்திருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்துவதையே அவர்கள் தொழிலாக வைத்திருந்தார்கள். அப்படிப் பார்க்கும்போது, பிரணாப் காங்கிரஸ்காரர்களுக்கு அறிவுரை சொல்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்" என்கிறார் நாராயணன்.
பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு சென்றிருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ். திருநாவுக்கரசர்.
"பிரணாப் முகர்ஜி மூத்த தலைவர். கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இந்த நிலையில் அவர் அந்தக் கூட்டத்திற்கு சென்றதை தவிர்த்திருக்கலாம். அவர் அழைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது என்பது வெளிப்படையானது. ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கள் இடத்திற்கு வந்தார் என்பது பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் பெருமையாக இருக்கலாம். அதனால் எந்தப் பயனும் பிரணாப் முகர்ஜிக்கு கிடையாது" என்கிறார் திருநாவுக்கரசர்.

ஆனால், அவர் அங்கு பேசிய பேச்சு ஆறுதல் அளிக்கிறது என்கிறார் அவர். "ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்குச் சென்று அவர்களுக்கே புத்தி சொல்வதைப்போல பேசியிருக்கிறார். அவர் மத ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கிறார். அது ஆறுதலாக இருக்கிறது. ஆனால், இந்த ஒட்டுமொத்த நிகழ்வுமே தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்கிறார் திருநாவுக்கரசர்.
பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில்போய் என்ன பேசினாலும் அது அவர்களது பெருந்தன்மையாகத்தான் பார்க்கப்படுமே தவிர, பிரணாபின் துணிச்சலாகப் பார்க்கப்படாது. இப்படியான பின்னணியில் அவர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு சென்றிருக்கக்கூடாது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் து. ரவிக்குமார்.
"பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்குச் சென்று அவர்களை ஒரு வன்முறை கும்பல் என்றுகூடச் சொல்லலாம். அதனால் ஒன்றும் மாறிவிடாது. அது ஆர்.எஸ்.எஸ்.-க்குத்தான் வலுசேர்க்கும். அது பிரணாபின் துணிச்சலாகப் பார்க்கப்படாது. அவர்களுடைய பெருந்தன்மையாகத்தான் பார்க்கப்படும். மோகன் பகவத் காங்கிரஸ் கூட்டத்திற்கு அழைக்கப்படுவாரா என்று கேட்பார்கள்" என்கிறார் ரவிக்குமார்.

முரண்பாடான சித்தாந்தம் கொண்டவர்களுடன் பிரணாப் பேசியதாக இதைக் கொள்ள முடியாது என்கிறார் ரவிக்குமார்.
"எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்களோடு பேச்சு நடத்தமுடியாது. அது ஏமாற்று வேலையாகத்தான் பார்க்கப்படும். ஆர்.எஸ்.எஸ். பிரணாபைவிட பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் வெளிப்படையாக இருக்கிறார்கள். இது காங்கிரசின் தோல்வி அல்ல. பிரணாபின் தோல்வி. அவருக்கு பிரதமர் பதவி தரப்படவில்லை என்ற விவாதம் கட்சிக்குள் இருந்தது. இப்போது கட்சித் தலைமை எடுத்த முடிவு சரி என்றாகியிருக்கிறது" என்கிறார் ரவிக்குமார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு சகிப்புத்தன்மையற்ற அமைப்பாக பார்க்கப்படுகிறது. பிரணாபை அழைத்ததன் மூலம் தாங்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்று காட்டியிருக்கிறார்கள் என்கிறார் ரவிக்குமார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












