ஜி7: தலைவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை தீர்ப்பதில் தோல்வி

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிற முக்கிய தொழில்துறை நாட்டு தலைவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தீர்த்து வைக்க கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாடு தவறிவிட்டது.
டிரம்ப் மற்றும் பிற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் உள்ள பிரிவினையை, கனடாவில் நடைபெற்று வரும் உச்சிமாநாடு வெளிபடுத்தியுள்ளது.
முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.
உக்ரைனின் தன்னாட்சி பிரதேசமாக இருந்த க்ரைமியாவை 2014ம் ஆண்டு ரஷ்யா இணைத்துக்கொண்டதை தொடர்ந்து, ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அந்நாடு இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், ஜி7 நாடுகளின் மற்ற தலைவர்கள், ரஷ்யா இதில் பங்கேற்கக் கூடாது என்ற கருத்தினை ஒப்புக் கொண்டுள்ளதாக ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளால் ஏற்பட்டுள்ள விரிசல்களும் இந்த உச்சிமாநாட்டில் தெரிகிறது.
டிரம்ப் விதித்த இந்த வரிகள் "சட்டவிரோதமானது" என்று கனடா கூறியிருந்தது.
ஜி7 மாநாடு
கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமாவ்பே நகரில் நடைபெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உலக அளவிலான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டாலும், பொருளாதாரம்தான் நிகழ்ச்சிநிரலில் முதன்மை பெறுகிறது.
ரஷ்யா குறித்து கூறப்பட்டது என்ன?
"உங்களுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ - இது அரசியல் ரீதியாக தவறாகக்கூட இருக்கலாம் - ஆனால், நாம் இயக்குவதற்கு ஒரு உலகம் உள்ளது, ஜி-8 நாடுகள் என இருந்ததில் இருந்து வெளியேற்றிய ரஷ்யாவை மீண்டும் இதில் சேர அனுமதிக்க வேண்டும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் முன்னேற்றம் இல்லாதவரை, ரஷ்யாவை இதில் மீண்டும் இணைத்துக் கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
ஜி7-ஐ தவிர "மற்ற விவகாரங்களை" பேச ரஷ்யா ஆர்வமுடன் இருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












