கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் புதிய திருப்பம்

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பகுத்தறிவாளரும் கல்வியாளருமான டாக்டர் எம்.எம் கல்புர்கி கொலைக்கும், பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கெளரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்துவரும் சிறப்பு போலீஸ் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கௌரி லங்கேஷ்

பட மூலாதாரம், Getty Images

லங்கெஷ் மற்றும் கல்புர்கி இருவருமே 7.65 மிமீ அளவு கொண்ட நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பெங்களூரு நீதிமன்றம் ஒன்றில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) சமர்ப்பித்த 660 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையின் ஒரு பகுதியான தடயவியல் அறிக்கை கூறுகிறது.

இந்து சமய சடங்குகள் மற்றும் பாரம்பரியங்கள் பற்றி தீவிரமாக பிரசாரம் செய்த டாக்டர் கல்புர்கி, வடக்கு கர்நாடகாவில் உள்ள தார்வாட்டில், அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டு வாசலில் வைத்து 2015 ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.

2017 செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று பெங்களூரில் தனது வீட்டின் அருகே தலைக்கவசம் அணிந்த ஒருவரால் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டார்.

இருவருமே, தங்களது இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளுக்காக கொல்லப்பட்டவர்கள்.

கல்புர்கி கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆனபோதிலும், இதுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்ற நிலையில், தற்போது லங்கேஷ் வழக்கில் காவல்துறை தெரிவித்திருப்பது முக்கியமான தகவல் என்று இந்த வழக்குடன் தொடர்பில்லாத ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பிரேத பரிசோதனையில் லங்கேஷின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு போன்ற ஒன்று அவரது வீட்டு கதவுக்கு மேல் இருந்த சுவரிலும் இருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது. அதேபோல,கல்புர்கி கொலையில் தொடர்புடைய துப்பாக்கிக் குண்டுகளையும் லங்கேஷ் கொலை விசாரணைக் குழுவினர் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

மலேசப்பா கல்புர்கி

பட மூலாதாரம், BANGALORE NEWS PHOTO

படக்குறிப்பு, மலேசப்பா கல்புர்கி

இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை சுஜீத் குமார் என்னும் பிரவீணுக்கு சப்ளை செய்ததாக, கே.டி நவீன் குமார் என்பவரை போலிசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை போலிசார் வெளியிட்டனர். அதன் ஒரு பிரதி பிபிசியிக்கும் கிடைத்தது.

அதன்படி, இந்து மதம் ஆயுதங்களால் பாதுகாக்கப்படவேண்டும் என கோவாவின் போண்டாவில் நடைபெற்ற மத கருத்தரங்கு ஒன்றில் நவீன் கூறியிருக்கிறார்.

அதன்பிறகு, இதேபோன்ற மனநிலை கொண்ட ஒருவர் விரைவில் நவீனை தொடர்பு கொள்வார் என கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் பிரவீணுக்கும் நவீனுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது.

"இது சட்டவிரோதம் என்று எனக்கு தெரியும். ஆனால் கெளரி லங்கேஷின் இந்து விரோத கருத்துக்கு எதிராக நான் இருந்ததால், அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன்" என நவீன் கூறியதாக போலிசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கே.எஸ். பகவான் என்ற கன்னட எழுத்தாளரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதற்காக முதலில் கைது செய்யப்பட்ட பிரவீண், பின்னர் கெளரி லங்கேஷ் வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்து கடவுளர்கள் மற்றும் சின்னங்களுக்கும் எதிராக அவதூறாக பேசியதான சர்ச்சையில் சிக்கியவர் பகவான்.

நரேந்திர தபோல்கர்

பட மூலாதாரம், FACEBOOK NARENDRA DABHOLKAR

படக்குறிப்பு, நரேந்திர தபோல்கர்

மகாராஷ்டிரா மாநிலம் புணேயை சேர்ந்த ஹெச்.ஜே.எஸ். அமோல் காலே, கோவாவின் போண்டாவை சேர்ந்த அமீத் டெஹ்வீகர் கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்த மனோஹர் எடாவே என, சனாதன் சன்ஸ்தா மற்றும் அதனுடன் இணைந்த இந்து ஜனாஜாக்ருதி சமிதியை சேர்ந்த மூவரை போலிசார் கைது செய்திருக்கின்றனர்.

ஆனால் இதுவரை கல்புர்கி கொலை தொடர்பாக ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

கல்புர்கி கொலைக்கு முன்னதாக கோலாபூரில் தங்கள் குடியிருப்புக்கு அருகே காலை நேர நடைபயிற்சி மேற்கொண்டிருந்த சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் பன்சாரேவும் அவரது மனைவியும், சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2013 ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் 7.65 மி.மீ அளவுள்ள நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்து எதிர்ப்பு கொள்கை என்பதே இந்த நான்கு கொலைச் சம்பவங்களின் மையப்புள்ளியாக இருக்கிறது.

வெடிபொருட்களை சப்ளை செய்தவர்கள் மற்றும் சாத்தியமான சதிகாரர்கள் யார் என்பதை மட்டுமே இதுவரை நடைபெற்ற விசாரணைகள் காட்டுகின்றன. ஆனால் இந்த கொலைகளுக்கு காரணகர்த்தா யார், திட்டமிட்டு செயல்படுத்தியவர்கள் யார் என்பது போன்ற முக்கியமான முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :