"கோமாளி கிங்ஸ்": இலங்கையில் மீண்டும் உயிர்த்தெழுந்த தமிழ் சினிமா
கிங் ரத்தினம் என்ற இளைஞரின் இயக்கத்தில் "கோமாளி கிங்ஸ்' என்ற பெயரில் ஒரு தமிழ் திரைப்படம் இலங்கையில் தயாராகி கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Komaali Kings
திரையரங்குகளின் தகவல்படி படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவருகின்றது. குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பு, வடக்கு கிழக்கு நகரங்கள், மலையகம் என தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல திரையரங்குகளில் இது ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
இலங்கை தமிழ் சினிமா
இலங்கையில் தமிழ் திரைப்படத் தயாரிப்புத்துறையை பொறுத்தவரை இங்கு ஆரம்பத்தில் ஓரளவுக்கு தயாரிப்புகள் வெளிவந்தாலும், இந்திய தமிழ் சினிமாவின் பிரபல்யமும், இடையில் வந்த உள்நாட்டுப் போரும் இலங்கை தமிழ் திரையுலகை சோபிக்கவிடவில்லை என்கிறார் இங்குள்ள தமிழ் சினிமா ஆய்வாளரான தம்பியையா தேவதாஸ்.
கடந்தகால இலங்கை படங்களுடன் ஒப்பிடும் போது கோமாளி கிங்ஸ், நல்ல தொழில்நுட்ப விசயங்களில் முன்னேறி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Youtube/Komaali Kings
இலங்கைப்பணம் மூன்று கோடி ரூபாய்கள் ( இந்தியப் பணம் ஒன்றரைக்கோடி ரூபாய்கள்) செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 50 திரைகளில் இலங்கையெங்கும் திரையிடப்பட்டதாக கூறுகிறார் படத்தின் இயக்குனரான கிங் ரட்ணம்.
மூன்று நாட்களை கடந்து ஓடும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இங்கு நல்ல வரவேற்பிருப்பதாகவும், ஒரு சாதாரண இந்திய தமிழ் சினிமாவுக்கு இங்கு திரையரங்குகளில் இருக்கும் ஆரம்ப ஆதரவுக்கு இணையாக இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கிங் ரட்ணம் கூறுகிறார்.
பிற செய்திகள்:
இலங்கையில் பல பகுதிகளிலும் இருக்கும் தமிழ் மொழி வட்டார வழக்குகளும் சிங்கள மொழியும் இந்தப் படத்தில் பேசப்படுவதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Youtube/Komaali Kings
உண்மையில் கடந்த காலங்களில் இலங்கையில் வந்த பன்மொழி பேசும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக தம்பியையா தேவதாஸும் கூறுகிறார்.
கோமாளி கிங்ஸ் ஒரு நகைச்சுவை படம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கு தயாரிக்கப்பட்ட "கோமாளிகள்" என்ற திரைப்படத்தினை இது நினைவூட்டுவதாக பலரும் பேசுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இதனை அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், இரண்டும் நகைச்சுவைப் படங்கள் என்பதைவிட இதற்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இலங்கையை பொறுத்தவரை இங்கு தயாரிக்கப்பட்ட நகைச்சுவைப் படங்கள் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
புதிய வடிவிலான சினிமா தேவை
இளைஞர்களால் இந்தப்படம் மிகவும் நன்றாக ரசிக்கப்படுவதாக கூறும் குறுந்திரைப்பட இயக்குனரும், சினிமா ஆர்வலருமான ஞானதாஸ் காசிநாதர், வீழ்ந்துபோயிருக்கும் இலங்கை சினிமாவை கட்டியெழுப்புவதற்கான ஒரு சிறு முயற்சியாக இதனைப் பார்க்கிறார். வர்த்தக ரீதியில் இதற்கு ஒரு எழுச்சியும், ரசிகர்கள் மத்தியில் ஒரு குதூகலமும் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Youtube/Komaali Kings
இந்திய தமிழ் சினிமாவுடன் போட்டி போட்டு எழுந்து நிற்பது என்பது, இலங்கை தமிழ் சினிமாவுக்கு பெரும் சிரமமாகவே இன்னும் இருக்கிறது. ஆகவே இலங்கையில் எடுக்கப்படும் தமிழ் சினிமாக்கள் இன்னுமொரு தமிழக சினிமாவாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஞானதாஸ் காசிநாதர் கூறுகிறார். உண்மையில் அதற்கான முயற்சியை சிங்கள சினிமா துறையில் ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும், அது பின்தொடரப் பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Youtube/Komaali Kings
ஒருபுறம் நகைச்சுவை சினிமா என்பதாலும், பலவிதமான இலங்கை தமிழ் வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுவதாலும், தமது ஊர் சினிமாவும் மிளிர வேண்டும் என்ற இலங்கை இளைஞர்களின் உந்துதலாலும் கோமாளி கிங்ஸ் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமா தயாரிப்புத்துறை இலங்கையில் வளர இன்னும் நிறைய செய்யப்பட வேண்டியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












