இலங்கை: தப்பி ஓடிய ராணுவ வீரர்களை கைது செய்யும் பணி ஆரம்பம்

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA
இலங்கை ராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ள ராணுவ வீரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்றவர்கள் சட்ட ரீதியாக விலகிக்கொள்ள வழங்கப்பட்டிருந்த ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தில் சுமார் 11 ஆயிரம் ராணுவ வீரர்கள் சட்டரீதியாக விலகிக் கொள்ள முன்வந்துள்ளனர்.
இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பி சென்றவர்களுக்கு சட்ட ரீதியாக விலகிக் கொள்ள வழங்கப்பட்டிருந்த ஒரு மாத பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் றொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 22ஆம் தேதிவரை ஒருமாத காலத்திற்கு ராணுவ தலைமையகத்தினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Buddhika Weerasinghe
இலங்கை ராணுவத்திலிருந்து சுமார் 26,000 பேர் வரை முறையாக கடமைகளை செய்யாமல் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
பொது மன்னிப்பு காலத்தில் 15 அதிகாரிகள், 9 பயிலுநர் அதிகாரிகள் உட்பட 11,232 ராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக சேவை விலக்கு பெறுவதற்கு படைத் தலைமையகங்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகின்றது.
பொது மன்னிப்பு காலப் பகுதியை பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச் செல்லாதவர்களை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சட்ட விரோதமாக தப்பிச் சென்ற படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், அவர்களை மறைத்து வைத்திருத்தல் போன்றன குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இரண்டு முறை வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி முப்படைகளையும் சேர்ந்த 34 அதிகாரிகள் உட்பட 8,843 பேர் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகிக்கொண்டனர். சட்டரீதியாக விலகிக்கொள்ளாத 99 அதிகாரிகள் உட்பட 5,841 படை வீரர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













