இலங்கை ரோஹிஞ்சாக்கள் மீதான தாக்குதல்: பௌத்த துறவி பிணையில் விடுதலை

இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் மீதான முற்றுகையின்போது இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரத்ன தேரோவிற்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.

ரோஹிஞ்சாக்கள் தங்குமிடம் முற்றுகை
படக்குறிப்பு, ரோஹிஞ்சாக்கள் தங்குமிடம் முற்றுகை (கோப்பு படம்)

ஐ.நா அகதிகள் ஆணையத்தின் பொறுப்பில் கல்கிசை பகுதியில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு பௌத்த துறவிகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்களினால் கடந்த மாதம் 26 ம் திகதி முற்றுகையிடப்பட்டது. அவ்வேளை வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல்களும் நடந்தப்பட்டன.

சம்பவம் தொடர்பாக இம்மாதம் 2ம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரோ, வாக்கமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவரை பிணையில் விடுவிக்க அனுமதி கோரி அவரது சார்பு சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஓரு பெண் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பெண் காவலர் உட்பட ஏனைய 7 சந்தேக நபர்களும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் இவர்கள் மீதான அடையாள அணி வகுப்பும் நடைபெறவுள்ளது . 13 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

காணொளிக் குறிப்பு, பரந்து விரிந்த ரோஹிஞ்சாமுகாம்: ஆளில்லா விமானம் எடுத்த திகைக்கவைக்கும் படம்

மற்றுமோர் சந்தேக நபரான பௌத்த மதகுருவான அரேம்பபொல ரத்னசார தேரோ போலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார். தலைமறைவாகியுள்ள பௌத்த மதகுருவான அரேம்பபொல ரத்னசார தேரோவை கைது செய்ய முடியாதிருப்பதாக போலிஸாரால் நீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :