இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச காப்புறுதி திட்டம் அமல்

திட்டம் துவக்கி வைக்கப்பட்டபோது

பட மூலாதாரம், BBC Tamil

படக்குறிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மாணவர்களுக்கான காப்புறுதி பத்திரத்தை வழங்கி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூட மாணவர்களுக்கு இலவச காப்புறுதி திட்டமொன்று அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மாணவர்கள் காப்புறுதி திட்டத்திற்கு 2700 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் நேற்று திங்கட்கிழமை இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மாணவர்களுக்கான காப்புறுதி பத்திரத்தை வழங்கி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையில் பள்ளிக் கூடங்களில் தரம் 01 -13 வரையில் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகின்றது. இலவச கல்வியுடன் மேலதிகமாக சீருடை, பாட நூல்கள் மற்றும் சத்துணவு போன்றனவும் இலவசமாக கிடைக்கின்றன.

"இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்படும் மாணவர் ஒருவர் வருடாந்தம் ரூபாய் 5 லட்சம் பெறுமதியான காப்புறுதி நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்." என கல்வி அமைச்சு கூறுகின்றது.

"நாடு தழுவியதாக 5 -19 வயது வரையிலான சுமார் 45 லட்சம் மாணவர்கள் நன்மை பெறுவார்கள் " என்றும் கல்வி அமைச்சகம் தெரிவிக்கின்றது.

"மாணவர்கள் பல்வேறு நோய்களுக்குள்ளாகுகின்றனர். அதற்கான செலவீனங்களை பெற்றோரால் சுமக்க முடியாத நிலையில் சில மாணவர்கள் உரிய சிகிச்சையை பெற முடியாதவர்களாக காணப்படுகின்றார்கள். அரசு நடைமுறைப்படுத்துகின்ற காப்புறுதி திட்டத்தின் மூலம் பெற்றோரால் அதிலிருந்து விடபடக் கூடியதாக இருக்கும் " என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் தெற்காசியாவில் பள்ளிக் கூட மாணவர்களுக்கு இலவச காப்புறுதி வசதிகளை நடைமுறைப்படுத்துகின்ற முதலாவது நாடு என்ற அடையாளத்தை இலங்கை பெறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவரொருவர் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் நாளொன்றுக்கு 1000,00 ரூபாய் காப்புறுதி கொடுப்பனவை பெற முடியம். (வருடத்திற்கு 30 நாட்கள் )

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் வருடமொன்றுக்கு ரூபாய் 200,000 என காப்புறுதி கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு மேலதிக வைத்தியசாலை அறைக்கட்டணமாக நாளொன்றுக்கு ரூபா 5,000 என வருடத்திற்கு ரூபாய் 60,000 வரை பெற்றுக் கொள்ள முடியும்

புற்று நோய், இறுதிகட்ட சிறுநீரக செயலிழப்பு, பாரிச வாதம் உட்பட 7 வகையான நோய்களுக்கான பரிசோதனைக்கு சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் அதற்கான செலவாக ரூபா 10,000 வரை காப்புறுதி கொடுப்பணவை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

மாணவரொருவர் விபத்து காரணமாக அங்கவீனமடைந்தால் 50 ,000 ரூபாய் தொடக்கம் 100,000 ரூபாய் வரையும் முழுமையான அங்கவீனமடைந்தால் ரூபாய் 100,000 என மாணவர்களுக்கு காப்புறுதி இழப்பீட்டு தொகை கிடைக்கும்.

விழாவில் பங்கேற்ற மாணவர்கள்

பட மூலாதாரம், BBC Tamil

படக்குறிப்பு, இத்திட்டத்தால் 45 இலட்சம் மாணவர்கள் நன்மை பெறுவதாக கல்வி அமைச்சு கூறுகின்றது

விபத்து காரணமாக மாணவரொருவரின் மரணம் பெற்றோருக்கு ரூபாய் 100,000 காப்புறுதி இழப்பீடு கிடைக்கின்றது. தாய் அல்லது தந்தைக்கு விபத்து மரணம் நிகழ்தால் ரூ 75 ,000 மாணவனுக்கு காப்புறுதி இழப்பீடு கிடைக்கும்.

பள்ளிக் கூட மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தை குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் வரவேற்கின்றனர்.

"இந்த திட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்ம்பத்திற்கும் வரப் பிரசாதமாக அமையும் " என்கின்றார் கல்வி அதிகாரியான அ.சுகுமாரன்.

இலங்கையில் ஏற்கனவே அரச பணியாளர்களுக்கு என காப்புறுதி திட்டம் நடைமுறையிலுள்ளது. அதன் மூலம் குறித்த அரச பணியாளரும் அவரது குடும்பத்தினரும் காப்புறுதி நன்மைகளை பெற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.

தன்னைப் போன்ற நாளாந்த உழைப்பாளிகள் தமது பிள்ளையின் மருத்துவ செலவுகள் தொடர்பாக எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக கூறுகின்றார் ஆட்டோ சாரதியான எஸ். திருநாவுக்கரசு.

ஏற்கனவே அநேகமானோர் எதிர்பாரத வகையில் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்காக அறிமுகமானவர்களிடம் கடன் பட அல்லது தங்கள் நகைகளை அடகு வைக்க நேரிடுகின்றது.

இதனை கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்து காப்புறுதி தொகை மாதக் கணக்கில் இழுபறி இன்றி விரைவாக தங்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்