இலங்கையின் முதல் தேசிய மும்மொழிப் பள்ளிக்கூடப் பணிகள் ஆரம்பம்
இலங்கையில் முதலாவது மும்மொழி தேசிய பள்ளிக்கூட நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ரூபாய் 1200 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பள்ளிக் கூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவ மாவட்டத்தின் பிரதான நகரமான கதுறுவெல என்னுமிடத்தில் அமைக்கப்படவுள்ளது.
பள்ளிக்கூட நிர்மாண பணிகளின் ஆரம்ப நிகழ்வில் வெளி விவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கா, இலங்கைக்கான இந்தியத தூதர் தரஞ்ஜித் சிங் சந்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிங்களம் , தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மும்மொழி கொள்கை பேணப்படுகின்றது. தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புகளை கொண்ட இப்பள்ளிக்கூடம் அனைத்து வசதிகளையும் கொண்டாக அமைக்கப்படவுள்ளது. 2019ம் ஆண்டு முதற்கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்கப்படுகின்றது.
இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் எண்ணக் கருவில் பல்லின, மும்மொழி பள்ளிக் கூடமாக இந்த பள்ளிக் கூடம் விளங்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகின்றது.

பொலநறுவ மாவட்டத்திற்கு அண்மித்த அனுராதபுரம், திருகோணமலை, அம்பாரை மற்றும் மட்டக்களப்பு உட்பட அண்மையிலுள்ள மாவட்டங்களின் பல்லின மும்மொழி தேவையை நிறைவு செய்தல் , ஆங்கில மொழி மூலம் கல்வியை பரவலாக்குதல், போட்டித் தன்மையுடைய சமூக பொருளாதார உலகுக்கு பொருத்தமான நல்லிணக்கம், சமூக ஓருமைப்பாடு, உயர்ந்த அறிவுடைய பூரணமான மாணவத் தலைமையை உருவாக்குதல் ஆகிய அடிப்படை இலக்குகளை கொண்டதாக இந்தப் பள்ளிக் கூடம் அமையும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












