ஒரு கிலோ தங்கத்தை ஆசனவாயில் வைத்து கடத்திய நபர் இலங்கையில் கைது!

தங்கம் பாலீதீன் பையில் முறையாக கட்டப்பட்டு இருந்தது

பட மூலாதாரம், Sri Lanka customs

படக்குறிப்பு, தங்கம் பாலீதீன் பையில் முறையாக கட்டப்பட்டு இருந்தது

ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்த முயற்சி செய்ததாக கூறப்படும் ஒரு நபரை இலங்கை அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கை ரூபாய் மதிப்பில் 4.5 மில்லியன் (29,370 டாலர், 21,700 பவுண்ட்) மதிப்புடைய 904 கிராம் தங்கத்தை ஆசனவாயிலில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ஒரு நபரை இலங்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடத்தப்பட்ட தங்கத்தை காட்டும் சுங்கத்துறையினர்

பட மூலாதாரம், Sri Lanka customs

படக்குறிப்பு, கடத்தப்பட்ட தங்கத்தை காட்டும் சுங்கத்துறையினர்

இந்தியாவுக்கு செல்ல முயன்ற 45 வயதுடைய அந்த நபர், கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணையில் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளது கண்டறியப்பட்டது.

பிபிசி-யிடம் பேசிய சுங்க அதிகாரிகள், அந்த நபரின் நடை பாவனை சந்தேகிக்கத்தக்க வகையில் இருந்ததால், அவரை அழைத்து விசாரித்தோம். பின்பு அவரை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதித்ததில், மறைத்து வைக்கப்பட்ட ஒரு பையை கண்டுபிடித்தோம். அந்த பாலீதீன் பை, முறையாக கட்டப்பட்டு, அவரது ஆசனவாயில் சொருகப்பட்டிருந்தது என்றனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் நான்கு மஞ்சள் தங்க பிஸ்கெட்டுகளும், மூன்று மஞ்சள் தங்க துண்டுகளும், ஆறு மஞ்சள் தங்க ஆபரணங்களும், இரண்டு வெள்ளி முலாமிட்ட தங்க ஆபரணங்களும் அடக்கம் என்று சுங்கத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்துடன் சுங்கத்துறை அதிகாரிகள்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, கைப்பற்றப்பட்ட தங்கத்துடன் சுங்கத்துறை அதிகாரிகள்

கடந்த வாரம் இலங்கையில், இது போன்று ஆசனவாயில் மறைத்து வைத்து 314.5 கிராம் தங்கத் துண்டுகளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற ஒரு இலங்கை பெண்ணை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

பொதுவாக இந்தப் பகுதியில் இருக்கும் கடத்தல்காரர்கள், தங்க விலை குறைவாக இருக்கும் துபாய் மற்றும் சிங்கப்பூரில் தங்க நகைகளை வாங்கி, அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து நல்ல லாபத்தில் விற்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :