மணல் லாரி நிறுத்தாததால் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, பருத்தித்துறையில் பதட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிக்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு பதட்ட ம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் விடுத்த உத்தரவை மீறியும் அந்த லாரி சென்றபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறந்தவருடைய சடலம் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, ஆத்திரம் கொண்ட அவ்வூர்வாசிகள் காவல்துறையினரின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் பருத்தித்துறை காவல் நிலையத்தின் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும், ஆத்திரம் கொண்ட பொது மக்கள் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.

வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதையும், அதனால், ஒருவர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, ஊர் மக்கள் பருத்தித்துறை காவல் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பருத்தித்துறை நகரில் பதட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ் நகரில் இருந்து மேலதிகமாகக் காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினருடைய உத்தரவை மீறிச் சென்றதற்காகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முறைகேடாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிககை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :