விக்னேஸ்வரன் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோருவார்

இலங்கையின் வட-மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலக்கும்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சரிடம் விரையில் கோரவிருப்பதாக வட-மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

சி வி விக்னேஸ்வரன்
படக்குறிப்பு, நெருக்கடியில் வட மாகாண அரசியல்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்திட்ட வட-மாகாண சபை உறுப்பினர்களின் கையெழுத்து பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அவை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் முதலமைச்சரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் கூறினார்.

ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வட-மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை பதவி விலகும்படி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் கோரியிருந்ததன் பின்னணியில், சபையின் மொத்த உறுப்பினர்களில் 21 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டு மாகாண ஆளுநரிடம் நேற்றைய தினம் கையளித்தனர்.

தொடர்பான செய்திகள்:

இது தொடர்பில் கேட்டபோது வட-மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதனிடையே, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து முதலமைச்சருக்கு ஆதரவாக மாகாண சபைக்கு முன்னால் கூடியவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை நேரடியாக சந்தித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஆயினும் மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து முதலமைச்சர் மற்றும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்று இருதரப்பிலும் விட்டுக்கொடுப்பை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் என்று எமது வவுனியா செய்தியாளர் கூறுகிறார்.

பிற இலங்கைச் செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்