ஊழல் குற்றச்சாட்டு: இரு வட மாகாண அமைச்சர்களை பதவி விலகக் கோருகிறார் விக்னேஸ்வரன்

வடமாகாண சபையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வட மாகாண சபை
படக்குறிப்பு, ஊழல் குற்றச்சாட்டில் வடமாகாண அமைச்சர்கள்

வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற சபையின் விசேட அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக நான்கு அமைச்சர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

இந்த நான்கு அமைச்சர்களுக்கும் எதிராக நிதி துஷ்பிரயோகம் அதிகாரத் துஷ்பிரயோகம் அடங்கலாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் சபையின் ஆளும் கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக பணிஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகள் உள்ளிட்ட மூவர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை முதலமைச்சர் நியமித்திருந்தார்.

இந்தக் குழு கடந்த வாரம் தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருந்தது.

குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது விசாரணைக்குழு

அந்த அறிக்கை சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்களுக்கும் முதலமைச்சரினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வேளை, அது ஊடகத்தில் கசிந்து அதுபற்றிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நான்கு அமைச்சர்களில் கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதனால் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று விசாரணைக்குழு தனது அறிக்கையில் முதலமைச்சருக்குப் பரிந்துரைத்திருந்தது.

ஏனைய அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சிகள் சாட்சியமளிக்காத காரணத்தினால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படுவதாக விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை அதிகாரபூர்வமற்ற முறையில் பகிரங்கமாகியதையடுத்து, கூடிய வடமாகாண சபையில் அந்த அறிக்கை அதிகாரபூர்வமாக சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சரினால் வழங்கப்பட்டு, அதுபற்றி 14 ஆம் திகதியன்று புதன்கிழமை சபையில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணை அறிக்கை குறித்து சபைக்கு வெளியில் காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருந்தன. அந்தப் பரிந்துரைக்கு அமைவாக சம்பந்தப்பட்டஇரண்டு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருந்தது.

அதேவேளை, அந்த விசாரணை குழுவுக்கு எதிராகவும், அதன் விசாரணை அறிக்கைக்கு எதிராகவும் பலத்த கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

சி வி விக்னேஸ்வரன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதவி விலக உத்தரவிட்டார் விக்னேஸ்வரன்

இந்த நிலையில் நடைபெற்ற சபையின் விசேட அமர்வில் விசாரணைகளை நடத்திய குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவாறு கல்வி அமைச்சரும், விவசாய அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் தமது முடிவை அறிவித்தார்.

அமைச்சர்கள் தன்னிலை விளக்கம்

அத்துடன் ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அந்த விசாரணைகள் முடியும் வரையில் அவர்கள் இருவரும் விடுமுறையில் பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளை தான் தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதாகவும் விக்னேஸ்வரன் அறிவித்தார்.

இந்த விசேட அமர்வின்போது தன்னிலை விளக்கமளித்த கல்வி அமைச்சர் குருகுலராஜா தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு உரியவை என தெரிவித்தார்.

அவர் தமது விளக்கத்தை எழுத்து வடிவில் முதலமைச்சரிடம் சமர்ப்பித்திருப்பதனால், அதனை சபையில் வெளியிடவில்லை என கூறினார்..

விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் தமது தன்னிலை விளக்கத்தை சபையில் வெளிப்படுத்தினார்.

தன்மீதான ,குற்றச்சாட்டுக்கள் ஆதாரம் இல்லாத அபாண்டமான திட்டமிட்ட குற்றச்சாட்டுக்கள் என தெரிவித்து அவற்றை நிராகரித்தார்.

``ஆயினும் பணி செய்வதற்குப் பதவி அவசியமில்லை. கௌரவ முதலமைச்சர் அவர்கள் இடும் உத்தரவு எதுவோ அதனை நான் சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்வேன். ஆனால், பொய்யான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுடன் செல்வதற்கு மனம் ஒப்பவில்லை. அவ்வாறு செய்தால் செய்யாத குற்றங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டதாகிவிடும். அதனால் ஏற்படும் அவப்பெயர் தலைமுறைகளுக்கும் நீளும். அந்தவகையில் எனது தன்னிலை விளக்கத்தைக் கருத்தூன்றிக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்``, என அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்