நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? இறுதிச்சுற்று எப்படி நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தனது சிறப்பான திறமையைக் காட்டி நீண்டகாலமாக நம்மைக் கவர்ந்து வருகிறார். அதைப் போலவே இந்த முறையும் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் இருபது ஆண்டுக்கால ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தேர்வானார். இந்தப் போட்டிகளில், தங்கத்தின் மீது தனது கவனத்தைக் குவித்திருந்த அவர், வியாழக்கிழமை அன்று 88.39மீட்டர் தொலைவுக்கு ஈட்டியெறிந்து இறுதிச்சுற்றுக்குள் நுழைந்ததோடு, இப்போது வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அமெரிக்காவின் ஒரேகானிலுள்ள யூஜீனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஈட்டியெறிதல் பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் இருவருமே தகுதிச்சுற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள்.
இந்தியாவின் 19 ஆண்டுக்கால ஏக்கம்
பத்தொன்பது ஆண்டுக்காலமாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற இந்தியாவின் ஏக்கத்தைத் தீர்க்கும் வாய்ப்பு இந்த முறை கிட்டியது. உலக சாம்பியன்ஷிப் தொடரில் இதற்கு முன்பு இந்தியா சார்பாக 2003-ஆம் ஆண்டில் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மட்டுமே பதக்கம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த போட்டிகளின்போது அவர் வெண்கல பதக்கத்தை வென்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா 19 ஆண்டுகளாக இந்தியாவுக்கு இருக்கும் ஏக்கத்தைத் தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தகுதிச் சுற்றில் 83.50 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம். நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தகுதி பெற்றார்.
அதேவேளையில், குறிப்பிட்ட இலக்கை எட்டாமல் 80.42 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ஈட்டியை எறிந்திருந்தாலும் கூட, சிறந்த தரவரிசையின் அடிப்படையில் 11வது இடத்தைப் பெற்று ரோஹித் யாதவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் ஈட்டியெறிந்தார். இந்த முறை தகுதிச் சுற்றிலேயே 88.39 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார்.
ஆனால், ரோஹித் யாதவின் தனிப்பட்ட சிறப்பான தூரமே 82.54 மீட்டர் தான். ஆகவே அமெரிக்காவில் நடக்கின்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு ரோஹித் யாதவை விட நீரஜ் சோப்ராவுக்கு அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு பிறகு, பாவோ நுர்மி போட்டிகள் (89.30மீட்டர்), குவோர்டானே போட்டிகள் (86.69மீட்டர்), டைமண்ட் லீக் (89.94மீட்டர்) ஆகிய மூன்று தொடரிலுமே நீரஜ் சிறப்பாகச் செயல்பட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அமெரிக்காவில் நடக்கும் தொடர் தொடங்குவதற்கும் முன்னமே அவருடைய தேசியளவிலான ரெக்கார்டுகளை அவரே முறியடித்தார். குறிப்பாக 89.94 மீட்டர் என்பது அவருடைய தனிப்பட்ட சிறப்பான தொலைவாகப் பதிவானது.
போட்டி எப்படி நடந்தது?
இறுதிச்சுற்றில் 6 வாய்ப்புகள் ஒரு வீரருக்கு வழங்கப்பட்டன. முதல் மூன்று வாய்ப்புகளின் இறுதியில் கடைசி நான்கு இடங்களில் இருக்கும் வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அடுத்த மூன்று வாய்ப்புகள், முதல் 8 இடங்களில் இருப்போருக்குத்தான் வழங்கப்பட்டன. வழக்கமாக முதல் இரண்டு வாய்ப்புகளிலேயே தனது சிறப்பான திறனை நீரஜ் வெளிப்படுத்துவார். ஆனால், இந்த முறை அவர் முதல் மூன்று வாய்ப்புகளில், முதல் வாய்ப்பு ஃபவுலாகவே, அடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் நீரஜ், 82.39 மீட்டர், 86.37 மீட்டர் என்ற வகையிலேயே தனது ஈட்டியை எறிந்தார்.
தகுதிச் சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்ஸின் தகுதிச்சுற்றைப் போல முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், இறுதிப்போட்டியின் முதல் மூன்று வாய்ப்புகளில் அவர் எட்டிய தொலைவு பதக்கத்திற்கான வாய்ப்பையும் தொலைவுக்குக் கொண்டு சென்றதைப் போன்ற தோற்றம் உருவானது.
ஆனால், கிரனாடாவை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாவது வாய்ப்பில் 90.46 மீட்டருக்கு ஈட்டியெறிந்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதைத் தொடர்ந்து, மூன்று சுற்றுகளின் இறுதியில் வேளியேற்றம் முடிந்த பிறகு, இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டும் வண்ணமாக, தனது நான்காவது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்தார்.
வெளியேற்றப்பட்ட ரோஹித் யாதவ்
முதல் மூன்று வாய்ப்புகளைத் தொடர்ந்து, நீரஜ் சோப்ரா நான்காவது இடத்தில், ரோஹித் யாதவ் 10வது இடத்திலும் இருந்தனர்.
அதற்குப் பிறகு நான்காவது வாய்ப்பின் இறுதியில் முதல் 8 இடங்களில் ஆண்டர்சன் பீட்டர்ஸ், நீரஜ் சோப்ரா, யகோப் வாட்லேஜ், ஜூலியன் வீபர், அர்ஷாத் நதீம், லாஸி எடல்டாலோ, ஆண்ட்ரியன் மார்டேர், ஆலிவர் ஹெலாண்டர் ஆகியோர் இருந்தனர்.

பட மூலாதாரம், Worldathletics.org
சவாலான சக போட்டியாளர்கள்
இறுதிச்சுற்றின் தொடக்கத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டியெறிந்தபோது 82.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். மூன்றாவது சுற்றில் 86.37 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார்.
இறுதிச்சுற்றில் ஈட்டியெறிந்த போட்டியாளர்களில் நடப்பு சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ், தொடக்கத்திலேயே 90.21 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியெறிந்து முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆண்டர்சன், 2019-ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 86.69 மீட்டருக்கு ஈட்டியெறிந்து தங்கம் வென்றவர். இந்த சீசனில் மூன்று முறை 90 மீட்டருக்கும் மேல் ஈட்டியெறிந்துள்ளார். செக் குடியரசை சேர்ந்த யாகோப் வாட்லேஜ், முதல் முறை ஈட்டியெறிந்தபோது 85.52 மீட்டரில் தொடங்கியவர், மூன்றாவது முறையில் 88 மீட்டருக்கும் மேலாக ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ராவை விட முன்னிலையில் இருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜுக்கு அருகில் வெள்ளிப் பதக்கத்தோடு நின்ற இவர், இந்த சீசனில் 90.88 மீட்டர் வரை ஈட்டியை எறிந்திருந்தார். ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வீபரும் தொடக்கத்திலேயே 86.86 மீட்டருக்கு ஈட்டியை எறிந்தார்.
இப்படியாக, ஆண்டர்சன், வீபர், வாட்லேஜ் ஆகியோர் முதல் மூன்று வாய்ப்புகளிலேயே நீரஜ் சோப்ராவுக்கு பெரும் சவால் விடுத்தனர். ஆனால் அந்த சவால்களை நான்காவது வாய்ப்பில் கடந்து வந்த நீரஜ், வெள்ளிப் பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில், 87.58 மீட்டரே தங்கப் பதக்கம் வெல்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் அதைவிட மிகவும் கடினமானது. ஆகையால், டைமண்ட் லீகில் 89.94 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியெறிந்த சோப்ரா, அடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் அதைத் தக்க வைத்தாக வேண்டியிருந்தது. ஆனால், அவருடைய ஐந்தாவது வாய்ப்பு ஃபவுலானது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், ஐந்தாவது வாய்ப்பின் இறுதியில் அவர் வெள்ளிப் பதக்கத்திற்கான தனது இடத்தைத் தக்க வைத்திருந்தார்.
"போட்டி சவால் நிறைந்திருந்தது"
நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள பிரதமர் மோதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரால் ஒரு பெரிய சாதனை நிகழ்ந்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள் நீரஜ் சோப்ரா. இந்திய விளையாட்டுத் துறைக்கு இதுவொரு சிறப்புத் தருணம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்துப் பேசிய நீரஜ் சோப்ரா, காமன்வெல்த் போட்டிகளில் நான் எனது சிறப்பான திறனை வெளிப்படுத்துவேன் என்று ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசியபோது குறிப்பிட்டார். மேலும், "போட்டி சவால் நிறைந்ததாக இருந்தது. இன்று நான் கற்றுக்கொண்டேன். தங்கத்திற்கான முயற்சி தொடரும். ஆனால், அனைத்து நேரங்களிலும் தங்கத்தை வெல்ல முடியாது என்பதையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்ததைச் செய்வேன், பயிற்சிகளில் அதிகக் கவனம் செலுத்துவேன்," என்று தெரிவித்துள்ளார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற பதக்கம்
இறுதிச் சுற்றின் 6 வாய்ப்புகளும் முடிந்தபோது, ஆண்டர்சன் தங்கப் பதக்கத்தையும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் யாகோப் வாட்லேஜ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற தனிப்பட்ட இந்திய வீரராக முன்பு வரை இருந்த அபினவ் பிந்த்ரா, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது, "தேசத்தின் கனவை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள். மிகவும் பெருமையாக உள்ளது," என்று பாராட்டினார்.
இந்தமுறையும், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டியெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியர்களின் 19 ஆண்டுக்கால ஏக்கத்தை நீரஜ் சோப்ரா பூர்த்தி செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












