மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சூசன் நைனன்
- பதவி, விளையாட்டுத்துறை எழுத்தாளர்
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியான மாமல்லபுரம் (மகாபலிபுரம்), ஒரு வேறுபட்ட ரஷ்யா-யுக்ரேன் இடையிலான போட்டியைப் பார்க்கப் போகிறது.
இந்தியா நடத்தவிருக்கும் செஸ் ஒலிம்பியாடின் பின்னணியில், சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பான சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவரை தேர்வு செய்ய 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர்.
போட்டியில் முன்னணியில் இருப்பவர் ரஷ்யாவின் முன்னாள் துணைப் பிரதமரும், FIDE இன் தற்போதைய தலைவருமான ஆர்கடி ட்வோர்கோவிச். இவர் இரண்டாவது முறையாக இந்தப் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அவருக்கு எதிராக யுக்ரேனிய கிராண்ட் மாஸ்டர் ஆண்ட்ரி பாரிஷ்போல்ட்ஸ் மே மாத இறுதியில் தனது வேட்பு மனுவை அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த உயர் பதவிக்கான தேர்தலில் மேலும் இரு வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தற்போதைய துணைத் தலைவராக இருக்கும் பாக்கர் கெளட்லி மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த இனல்பெக் செரிபோஃப்.
ரஷ்யா, யுக்ரேன் மீது தாக்குதலை தொடங்கி நான்கு மாதங்களுக்கும் மேலாகிறது. அந்த நடவடிக்கை உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அப்போதிலிருந்து ரஷ்யா பல உலகளாவிய மன்றங்களால் ஓரங்கட்டப்பட்டது. ஆனால் ட்வோர்கோவிச்சின் முகாம், பெருந்தொற்று காலத்தில் செஸ் விளையாட்டில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் இந்த கடினமான மாதங்களில் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த FIDE மேற்கொண்ட முயற்சிகளால் இந்த ஆண்டின் ஒலிம்பியாட் வெற்றி பெறும் என்று நம்புகிறது.
மறுபுறம், ரஷ்யா நீண்ட காலமாக செஸ் நிர்வாகத்தை கட்டுப்படுத்தி வருவதாக போட்டியாளர்கள் வாதிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்வத்தைத் தூண்டும் மோதல்
இரண்டு போரிடும் நாடுகளுக்கு இடையேயான மோதல் ஒருபுறம் இருக்க, ஆகஸ்ட் 7 தேர்தல், ஒரு சுவாரஸ்யமான மோதலாக இருக்கும்.
ட்வோர்கோவிச் வெற்றி பெற்றால் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருக்க, சதுரங்கத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒருவரான, ஐந்து முறை உலக சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
யுக்ரேனிய கிராண்ட் மாஸ்டர் வெற்றிபெற்றால், ஆனந்தின் முன்னாள் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் நீல்சன் துணைத்தலைவராக இருப்பார்.
நீல்சன், தற்போது உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனுக்கு பயிற்சியாளராக உள்ளார் . 2007-2012 வரை ஆனந்த் பெற்ற ஐந்து உலக சாம்பியன் பட்ட வெற்றிகளில் நான்கின் போது ஆனந்தின் முக்கிய பயிற்சியாளர் குழுவில் ஒரு பகுதியாக நீல்சன் இருந்தார்.
நீல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு எதிராக அதிகம் குரல் கொடுக்கும் விமர்சகர்களில் ஒருவர். அதன் நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் அறங்காவலர் குழுவில் அரசு அதிகாரிகள் இருப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"எங்கள் போராட்டம் ட்வோர்கோவிச்சிற்கு எதிரானது அல்ல. இது சர்வதேச செஸ் கூட்டமைப்பு மீதான ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிரானது" என்று நீல்சன் பிபிசியிடம் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் 20 முக்கிய செஸ் போட்டிகளில் 11 போட்டிகள் ரஷ்யாவில் நடத்தப்பட்டன.
"ரஷ்யாவிலிருந்து தூர விலகவும், கிரெம்ளினின் செல்வாக்கிலிருந்து உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கவும் சதுரங்க சமூகத்தில் ஒரு வலுவான விருப்பம் உள்ளது. இந்தத் தேர்தல் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், ANDRII BARYSHPOLETS/FACEBOOK
விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை
ட்வோர்கோவிச் பதவியேற்பதற்கு முன், ரஷ்ய தொழிலதிபரும் அரசியல்வாதியுமான கிர்சான் லுயும்ஃஜினோஃப், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அதிபர் விளாதிமிர் புதினின் ஆதரவுடன் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக இருந்தார். அவரது குழப்பமான பதவிக்காலத்தின்போது இந்த அமைப்பின் செயல்பாடு பற்றிய பிம்பம், மிக மோசமாக இருந்தது.
ஆனால், ட்வோர்கோவிச்சின் கீழ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சிறப்பாக மாறிவிட்டது என்று ஆனந்த் நம்புகிறார்.
தனது மூன்று தசாப்த தொழில்முறை வாழ்க்கையில் ஆனந்த், சதுரங்க அரசியலில் இருந்து விலகியே இருந்தார். 1990களில் கேரி காஸ்பரோவ் மற்றும் நைகல் ஷார்ட் ஆகியோர் சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஒரு போட்டி அமைப்பை நிறுவிய கடினமான காலகட்டத்திலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
தான் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்று அவர் கருதியதே இதற்கு ஒரு காரணம். தரவரிசையில் ஏறி தனது தகுதியை நிரூபிக்க முயற்சிக்கும் நேரத்தில் , அரசியல் நுழைவால் தனது சதுரங்கம் பாதிக்கப்படக்கூடும் என்று அவர் அஞ்சினார். ரஷ்யர் அல்லாத, எந்த பெரிய நிறுவன ஆதரவும் இல்லாத ஒருவரான ஆனந்த் சதுரங்கத்தில் அப்போது ஆதிக்கம் செலுத்திவந்தார். இது முன்னெப்போதும் நடந்ததில்லை.
ஆனால் இன்று 52 வயதில், ஒரு சுறுசுறுப்பான வீரர் அந்தஸ்துடன் தனது முந்தைய நிலைப்பாட்டை பின்னுக்குத் தள்ளி ஆனந்த், ஒரு தரப்பை தேர்வு செய்துள்ளார்.

பட மூலாதாரம், PETER HEINE NIELSEN/FACEBOOK
செஸ் அமைப்பு அரசியலில் சேர விரும்பாத கிராண்ட் மாஸ்டர்
ஆனந்தை தனது முக்கிய உதவியாளராகத் தேர்ந்தெடுத்து அவர் ஒரு புத்திசாலித்தனமான தேர்வைச்செய்துள்ளார் என்பதை ட்வோர்கோவிச்சின் விமர்சகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள்.
விஸ்வநாதன் ஆனந்த், சதுரங்கத்தின் ஜாம்பவான். இந்த விளையாட்டின் மிகச்சிறந்தவர்களில் ஒருவர். இதற்கு முன் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர் மற்றும் பொது வாழ்வில் கறைபடாதவர்.
"விஷி (ஆனந்த்) சதுரங்க அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்டு செஸ் உலகம் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறது" என்று நீல்சன் தனது முன்னாள் மாணவர் பற்றி கூறுகிறார்.
"அவர் விளையாட்டை ஊக்குவிப்பது மிகவும் நல்லது. இருப்பினும், அவர் கிரெம்ளினுடன் தன்னை இணைத்துக் கொண்டது வருத்தம் அளிக்கிறது."என்றார் அவர்.
இருப்பினும், நன்மதிப்பைப் பெற்ற ஒரு தரப்புடன் தான் இணைந்திருப்பதாக ஆனந்த் உறுதியாக நம்புகிறார்.
ட்வோர்கோவிச் ஒரு நவீன தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் திறமையான நிர்வாகி என்ற நற்பெயரைக் கொண்டுள்ளார். பொருளாதார நிபுணராக ஆவதற்கு பயிற்சி பெற்ற இவர், 2018 FIFA உலகக் கோப்பை போட்டிகளை ரஷ்யா நடத்தியபோது, ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்தார்.
போரை மீறி நடக்கும் போட்டி
ஆனால் அவரது திறமைகள் ஒருபக்கம் இருக்க, சதுரங்க விளையாட்டின் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான கட்டுப்பாடுதான் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது குறிப்பாக போரின் பின்னணியில்.
போரின் காரணமாக "ரஷ்ய நலன்களைப் பாதுகாக்க" மாஸ்கோவிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொண்டதாக, சமீபத்தில் chess24 க்கு அளித்த பேட்டியில் ட்வோர்கோவிச் கூறினார்.
ரஷ்ய நிறுவனங்களுடனான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை நிறுத்துவது உட்பட சில கடினமான முடிவுகளை அவர் எடுக்க வேண்டியிருந்தது. அவர் தனது வேலையைச் செய்ய சொந்தநாட்டில் போராடவேண்டிய சிக்கலான நிலையை இது காட்டுகிறது.
"இந்த ஆண்டு டுவோர்கோவிச் பல முடிவுகளை எடுத்திருப்பதை மக்கள் பார்க்க முடியும். அது அவர் ரஷ்யாவிலிருந்து சுயாதீனமாக செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது" என்று ஆனந்த் கூறுகிறார்.
"அவர் ஒரு ரஷ்யராக அல்லாமல், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக செயல்பட்டார்."என்று அவர் கூறினார்.
தற்போது சதுரங்க விளையாட்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் லெவோன் அரோனியன், ட்வோர்கோவிச்சின் பதவிக்காலம் திறமையானதாக இருந்ததை ஒப்புக்கொள்கிறார்.
"முன்பு சர்வதேச செஸ் கூட்டமைப்பு, அலட்சியமான செயல்பாட்டாளர்களால் நடத்தப்பட்டது. அவர்கள் உண்மையில் வீரர்களைப் பற்றி கவலைப்படவில்லை. தற்போதைய நிர்வாகம் சரியாக செயல்படுகிறது. பெரும்பாலான வீரர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள். கோவிட் இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முக்கிய போட்டிகள் நடத்தப்பட்டன ," என்று அவர் கூறினார். இருப்பினும், நிதி ஒப்பந்தங்கள் குறித்து இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகம் இருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
முன்னதாக மாஸ்கோவில் ஒலிம்பியாட் மற்றும் FIDE காங்கிரஸ் நடத்த திட்டமிடப்பட்டது. யுக்ரேன் படையெடுப்பின் காரணமாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு, ரஷ்யாவின் எல்லா ஹோஸ்டிங் உரிமைகளையும் பறித்த பிறகு இந்தியா ஏலத்தில் வென்றது.

பட மூலாதாரம், Google
இந்தியாவின் நம்பிக்கை ஜோதி
தற்போது ஒலிம்பியாட் போட்டியை தனிச்சிறப்புடன் நடத்த இந்தியா கடுமையாக உழைத்து வருகிறது.
ட்வோர்கோவிச் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோதி, இந்த நிகழ்ச்சிக்கான ஒளிப்பந்த ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஜோதி, மாமல்லபுரத்துக்கு வருவதற்கு முன்பு 75 நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு பயணிக்கும்.
மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு ஒலிம்பியாட் ஆசியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் ஒலிம்பியாட் போட்டி மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் முறை.
அத்தகைய சூழ்நிலையில் இந்தப்பிராந்தியத்தைச்சேர்ந்த,விளையாட்டின் ஜாம்பவான் ஒருவரை தனது அணியில் இணைத்துக்கொண்டிருப்பது ட்வோர்கோவிச்சின் புத்திசாலித்தனமான காய் நகர்த்தலாக கருதப்படுகிறது.
சூசன் நைனன் பெங்களூரைச் சேர்ந்த சுயாதீன விளையாட்டுத்துறை எழுத்தாளர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












