நோவாக் ஜோகோவிட்ச்: ஆஸ்திரேலியாவால் மீண்டும் ரத்து செய்யப்பட்ட விசா - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters
ஆஸ்திரேலியா டென்னிஸ் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிட்ச்சின் விசாவை ரத்து மீண்டும் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் பிற நாடுகளில் தங்கும் உரிமையை வைத்திருக்கும் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசாங்கம் செய்துள்ளது.
இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா குடியுரிமைத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கின் எடுத்துள்ளார்.
"ஆரோக்கியம் மற்றும் நல்லொழுக்க" அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து நோவாக் ஜோகோவிட்ச் எந்நேரத்திலும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் அங்கு நுழைவதற்கு மூன்று ஆண்டுகள் வரை அவருக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
இருப்பினும், 34 வயதான செர்பியா நாட்டை சேர்ந்த நோவாக் ஜோகோவிட்ச் சட்ட ரீதியாக இந்த பிரச்னையில் இருந்து வெளிவருவதற்கு சாத்தியம் உள்ளது.
முன்பாக வருகிற திங்கட்கிழமை ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் டென்னிஸ் விளையாட்டு திட்டமிடப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக ஆஸ்திரேலிய குடியுரிமைத்துறை அமைச்சர், "இன்று நான் எனது அதிகாரத்தை பயன்படுத்தினேன். நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிட்ச்சின் விசா பொது நலன் கருதி, உடல்நலம் மற்றும் நல்-ஒழுங்கு அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "கவனமாக பரிசீலிக்கப்பட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் அவர், "தடுப்பூசி போடப்படாத வீரரை ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதித்ததற்காக தனது அரசாங்கம் எதிர்கொண்டுள்ள கடுமையான விமர்சனங்கள் பற்றி பேசிய மோரிசன், "இந்த பெருந்தொற்று காலத்தில் ஆஸ்திரேலியர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர், அந்த தியாகங்களின் விளைவு பாதுகாக்கப்படும் என்று அவர்கள் சரியாக எதிர்பார்க்கிறார்கள்," என்று கூறினார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜோக்கோவிக் சனிக்கிழமை காலையில் மெல்போர்னில் ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அதிகாரிகளை சந்திப்பார், மேலும் வெள்ளிக்கிழமை இரவு அவரது தற்போதைய வசிப்பிடத்திலேயே தங்க அனுமதிக்கப்படுவார் என தெரிகிறது.
எனினும், அவர் குடியேற்ற தடுப்பு விடுதிக்கு மாற்றப்படலாம் என்று சில ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒன்பது முறை ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியனான ஜோக்கோவிக் அடுத்த வாரம் விளையாடி வென்றால் ஆடவர் டென்னிஸ் போட்டியில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் மிகவும் வெற்றிகரமான ஆண் டென்னிஸ் வீரராக புதிய சாதனை படைப்பார்.
முன்னதாக கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னுக்கு வந்த ஜோகோவிட்ச்சின் விசா, அந்நாட்டு அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போடாமலேயே அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான உரிமத்தை அவர் காண்பிக்கவில்லை என்று அப்போது அதிகாரிகள் தரப்பில் காரணம் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மறுபக்கம் ஆஸ்திரேலியா மக்களில் பலர், தங்களுடைய தாயகத்தில் கடுமையான நோய் பரவல் கட்டுப்பாடு மற்றும் பொது முடக்கம் இருந்தபோதிலும் தடுப்பூசி போடாத ஒருவர் எப்படி நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார் என்று கேள்வி எழுப்பினர்.
முதல் முறையாக ஆஸ்திரேலிய குடியுரிமைத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் ஜோகோவிட்ச் தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அந்தத் துறையினர் ஒதுக்கிய விடுதியில் தங்க அவர் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு இந்த பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட போது, விசா ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையில் முறையான நடைமுறை குடி வரவு அதிகாரிகளால் பின்பற்றப்படவில்லை என்று கூறி விசா வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் இன்று வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கின் எடுத்த நடவடிக்கை, ஆஸ்திரேலியாவின் இடம்பெயர்வு சட்டத்தில் தனி அதிகாரத்தின் கீழ் விசாவை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தனிச் சட்ட அதிகாரத்தின் மூலம் ஆஸ்திரேலிய மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்லொழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றலாம்.
விசா ஆரம்பத்தில் மறுக்கப்பட்டது ஏன்?
இந்த நடவடிக்கைக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஜோகோவிட்ச் தனது பயணப் படிவத்தில் தவறான தகவலை பூர்த்தி செய்து உள்ளார் என்பதே.
அந்த படிவத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முந்தைய 14 நாட்களில் அவர் எங்கும் பயணம் செய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையிலேயே அவர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று வந்தார்.
இந்த விவகாரம் சம்பந்தமாக ஜோகோவிட்ச் விளக்கம் அளிக்கையில்,, "இந்த தவறை தனது ஏஜென்ட் செய்ததாகவும் அவர் தவறாக அதை பூர்த்தி செய்து விட்டார்," என்று கூறினார்.
பிற செய்திகள்:
- மனித உடலில் பன்றியின் இதயம்: 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறை சென்ற இந்திய மருத்துவர்
- நரேந்திர மோதி: "கொரோனா தடுப்பூசி வதந்திகளை தடுக்க ஒத்துழையுங்கள்"
- மனிதருக்கு பன்றி இதய மாற்று சிகிச்சை: முஸ்லிம், யூத மதத்தினர் ஏற்பார்களா?
- கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொங்கல் விடுமுறைக்கு பேருந்துகளில் அலைமோதிய பயணிகள்
- டெஸ்லா இந்தியாவில் தொழில் தொடங்குமா? ஈலோன் மஸ்க் ட்வீட்டால் குழப்பம்
- எத்தியோப்பியா டீக்ரே நெருக்கடி: உதவிப் பொருட்கள் பயனர்களை அடைவதில் என்ன சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












