கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொங்கல் விடுமுறைக்கு பேருந்துகளில் அலைமோதிய பயணிகள்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பேருந்துகளில் கூட்ட நெரிசலில் சிக்கியவாறு பொதுமக்கள் பலர் இன்று பயணம் செய்தனர்.
தமிழ்நாட்டில் இன்று போகி பண்டிகையைத் தொடர்ந்து பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் பிறகு சனி, ஞாயிறுக்கிழமை என தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. இந்த விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாடும் நோக்கத்துடன் ஏராளமான பயணிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்டம், கூட்டமாக சென்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் நோக்கத்துடன் அரசு ஏற்கெனவே அதன் கட்டுப்பாடுகளை வரும் 31ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. இதையொட்டி அரசு சமீபத்தில் வெளயிட்ட கட்டுப்பாடுகளின்படி, மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும், பேருந்துகளில் 75 சதவீத பயணிகள் மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
இந்த விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகம், ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை எச்சரித்திருந்தது.
ஆனால் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்கவிட்டதைப் போல சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் சென்ற பேருந்துகளில் பயணிகள் சென்றதை பார்க்க முடிந்ததாக் கூறுகிறார், பிபிசி தமிழின் ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன்.
சென்னை கோயம்பேட்டில் பேருந்துகள் புறப்பட்ட இடத்தைத் தொடர்ந்து, அவர் சென்னை எல்லை பகுதியான பெருங்களத்தூர் நெடுஞ்சாலையில் பேருந்துகளின் நடமாட்டம் மற்றும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பேருந்து நிலையங்கள், சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வாகனங்களின் வரிசை ஆகியவற்றை பார்த்ததாக பிபிசி தமிழுக்கு வழங்கிய ஃபேஸ்புக் நேரலையில் குறிப்பிட்டார்.
சென்னை நகரில் வாகன போக்குவரத்தை சீர்படுத்த பல இடங்களில் பாதைகளை திருப்பி விட்டிருந்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், பேருந்துகளுக்குள் சமூக இடைவெளி, இருக்கைகள் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த பயணிகள், அதில் நின்று கொண்டு கூட்ட நெரிசலில் சென்றதை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் பிபிசி தமிழ் செய்தியாளர் கூறினார்.

இந்த நேரலையின்போது பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரிடம் நமது செய்தியாளர் பேசியபோது "கடந்த இரண்டு மணி நேரமாக இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன். முன் பதிவு செய்வதற்கான எந்த வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அரசாங்கம் பொங்கல் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகளை முன்னேற்பாடு செய்துள்ளதாக அறிவித்தது. ஆனால் தற்போது வரை பேருந்து எனக்கு பேருந்து கிடைக்கவில்லை" என்றார்.
மற்றொரு பயணி பேசுகையில் பேருந்துகள் கூட்ட நெரிசலுடன் செல்லக் கூடிய சூழலில் கொரானா நோய்தொற்று பரவிடும் என்ற அச்சத்தில் நாங்கள் ஊருக்கு போகாமல் இங்கேயே இருந்து விடலாம் என்றும் தோன்றுகிறது என்றார்.
அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் அவற்றை நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை என்பதை பார்க்க முடிவதாக ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன் குறிப்பிட்டார்.
கொரோனா பெருந்தொற்று இனி வரும் நாட்களில் பல மடங்காக அதிகரிக்கும் என மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே எச்சரித்துள்ளன. இந்த நிலையில், சொந்த ஊர் மற்றும் வெளியூர் செல்வதற்காக தற்போது எவ்வித சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் லட்சக்கணக்கில் மக்கள் மேற்கொண்டுள்ள இந்த பயணங்கள், அரசின் எச்சரிக்கையை உண்மையாக்குவது போல இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.
அரசு அறிவித்தபடி வழக்கமான வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாததால் பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகு கிடைத்த பேருந்தில் கூட்டத்தில் கூட்டமாக செல்ல முடிவு செய்ததாகவும் சில பயணிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு என்ன?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 911 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 20,911 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 25 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,930 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 12 பேரும் தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 241 ஆக உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
- சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












