rcb vs srh: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை

Bcci / ipl

பட மூலாதாரம், Bcci / ipl

இது 2020-ம் ஆண்டு. இப்போதும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றான பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் இந்த இரு அணிகளும் முதல் பாதியில் காட்டிய உத்வேகத்தை இரண்டாம் பாதியில் காட்டவில்லை.

முதல் 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே தோல்வியடைந்த பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. 

இதனால் 13வது முறையாக அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பை கனவு கானல் நீராகியிருக்கிறது. உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் இருந்தும் ஏன் தோல்வியை தழுவியது.

ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு காரணம் என்ன?

பெங்களூரு அணியின் வீழ்ச்சியையும் ஹைதரபாத் அணியின் எழுச்சியையும் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

ஹைதரபாத் அணி பிளே ஆஃப் தகுதிபெற்ற கதையே சற்று வித்தியாசமானது. புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருந்த அணிகளை வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில் அதிரடியாக வென்று முடித்து பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றது. வார்னர் - சாகா இணை இதற்கு பெரும் அடித்தளமிட்டது. 

இப்போது மீண்டும் பெங்களூரு அணியை வென்று முடித்திருக்கிறது. ஞாயிற்று கிழமையன்று தொடர் தோல்விகளால் உத்வேகம் இழந்திருக்கும் டெல்லி அணியை குவாலிஃபையர் - 2 போட்டியில் எதிர்கொள்கிறது. 

இதில் வென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப்போட்டியில் ஹைதரபாத் அணி சந்திக்கும். சரி, நேற்றைய போட்டியில் என்ன நடந்தது?

வலுவான பந்து வீச்சுப் படையை கொண்டிருக்கும் ஹைதரபாத் அணி, ஃபின்ச், கோலி, டி வில்லியர்ஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்த பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்று சேசிங்கைத் தேர்ந்தெடுத்தது.

rcb vs srh

பட மூலாதாரம், Bcci / ipl

அந்த அணியில் சாகாவுக்கு பதிலாக ஸ்ரீவத்ஸ் கோசுவாமி சேர்க்கப்பட்டிருந்தார். பெங்களூரு அணி நிறைய மாற்றங்களை மேற்கொண்டது. ஆடம் ஜாம்பா, ஃபின்ச், மொயின் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். 

தொடக்க வீரராக விராட் கோலி களமிறங்கினார். ஏற்கனவே அவர் தொடக்க வீரராக களமிறங்கிய போட்டிகளில் இதுவரை ஐந்து போட்டிகளில் சதம் விளாசியவர் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.

அவருடன் படிக்கல் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் பெங்களூரு அணியின் எதிர்ப்பார்ப்பு எல்லாம் இரண்டாவது ஓவரிலேயே தவிடுபொடியானது. 

ஜேசன் ஹோல்டர் பந்தில் கோலி வீழ்ந்தார். அங்கிருந்து பெங்களூரு அணியின் சரிவு துவங்கியது. நதீம் வீசிய 11வது ஓவரில் ஃபின்ச், மொயின் அலி இருவரின் விக்கெட்டையும் இழந்தது பெங்களூரு அணி. தனி ஒருவனாக டிவில்லியர்ஸ் மட்டும் போராடினார். அவருக்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் துணை நிற்கவில்லை. 

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

18வது ஓவரில் நடராஜன் பந்தில் கிளீன் போல்டானார் ஏபி டிவில்லியர்ஸ். அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். நடராஜன் அந்த பந்தில் மட்டும் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியிருக்காவிட்டால் கடைசி இரண்டு ஓவர்களில் பெங்களூரு அணியின் ரன் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கக் கூடும்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி. ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 நடராஜனின் அந்த துல்லியமான பந்தால் 150 ரன்கள் எனும் உயரத்தை கூட பெங்களூரு அணியால் எட்ட முடியவில்லை. 

ஹைதரபாத் அணிக்கும் சேசிங் ஒன்றும் அற்புதமாக அமைந்துவிடவில்லை. இங்கே டி வில்லியர்ஸ் என்றால் அங்கே கேன் வில்லியம்சன் அவ்வளவுதான் வித்தியாசம்.

வார்னர், மணீஷ் பாண்டே உள்ளிட்டோர் நிலைத்து நின்று விளையாடவில்லை. பெங்களூரு அணிக்கு இன்று ஆடம் ஜாம்பா மிகப்பெரிய நம்பிக்கை தந்தார். அவரது நான்கு ஓவர்களில் ஹைதரபாத் பேட்ஸ்மேன்கள் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஹைதரபாத். நம்பகமான பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் மற்றும் ஹிட்டர் ஹோல்டர் மட்டுமே களத்தில் இருந்தனர். 

IPL 2020

பட மூலாதாரம், Twitter

30 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. ஆறு பந்தில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் வில்லியம்சன். அடுத்த பந்தில் ரன் இல்லை. ஆட்டத்தில் பதற்றம் கூடியது.

சைனி வீசிய மூன்றாவது மற்றும் நான்காவது பந்து இரண்டையும் பௌண்டரிக்கு விளாசினார் ஹோல்டர். அத்தோடு பெங்களூரு அணியின் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது. 

வில்லியம்சன் 44 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் விளாசி 50 ரன்கள் எடுத்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். டிவில்லியர்ஸின் அரை சதம் மீண்டுமொரு முறை வீணானது. 

முந்தைய சீசன்களில் பந்துவீச்சில் சொதப்பிய பெங்களூரு அணி இம்முறை மோசமான மிடில் ஆர்டர் காரணமாக தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. கோலி, டிவில்லியர்ஸ் என இருவரை மட்டுமே பெரிதும் நம்பி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு மீண்டும் மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. 

போட்டி முடிந்தபிறகு பேசிய ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனை வெகுமாவாக புகழ்ந்தார். மேலும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: