MI vs DC: பும்ரா, போல்ட் அசத்தல், ஐபிஎல் 2020 இறுதியாட்டத்தில் நுழைந்தது மும்பை - டெல்லி கேபிட்டல்ஸ் வீழ்ந்தது எப்படி?

பும்ரா

பட மூலாதாரம், BCCI / IPL

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

எல்லாமே நன்றாக போய் கொண்டிருக்கும்போது, திடீரென என்ன நடந்தது? நம்மை தாக்கியது எது என்று தெரியாமல் சில தோல்விகள், அதிர்ச்சிகள் ஏற்படும்.

அப்படிப்பட்ட அதிர்ச்சி தோல்வியை துபையில் நடந்த 2020 ஐபிஎல் இறுதியாட்டத்துக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சந்தித்தது.

அதேவேளையில், சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த லீக் போட்டிகள் முடிந்து தொடங்கிய முதல் பிளே ஆஃப் சுற்று போட்டியில் , மும்பை இந்தியன்ஸ் அணி, தான் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது எப்படி என்பதை நிரூபித்துக் காட்டியது.

மும்பை வலுவான அணி தான், உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், அதிவேக பந்துவீச்சாளர்கள் என படைபலமுள்ள அணி என்ற போதிலும், டெல்லி அணியை முற்றிலும் வேரோடு சாய்க்கும் அளவு வெற்றி பெற முடிந்தது எப்படி ?

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது சாதித்து கொண்டிருக்கும் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என வலுவான பட்டாளத்தை கொண்ட டெல்லி அணியும் சிறந்த அணிகளில் ஒன்றுதான்.

ஆனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வி என்ற முடிவு பல அம்சங்களை அலச வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

'தடையற தாக்க' பாணியை கையாண்ட மும்பை பேட்ஸ்மேன்கள்

டாஸில் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காத சூழலில், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மும்பை பேட்ஸ்மேன்கள்

பட மூலாதாரம், BCCI / IPL

ஆனால், தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டை இழந்த போதிலும், சாம்பியன் அணியான மும்பை சற்றும் தளராமல் ஆடிய பாணி டெல்லி அணியை அதிர்ச்சியடைய செய்தது.

இரண்டாவது விக்கெட்டை எட்டாவது ஓவரில் மும்பை இழந்தபோதிலும், அதற்குள் அந்த அணி 78 ரன்கள் சேர்த்துவிட்டது. இப்படித்தான் தனது இன்னிங்ஸ் முழுவதும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது.

ஒருபுறம் விக்கெட் விழுந்து கொண்டிருக்கையில், களத்தில் இருந்த மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடினர். 12.2 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் பெற்ற மும்பை, 7.4 ஓவரில் 99 ரன்கள் விளாசியது ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றியது.

சாதித்த அஸ்வின்; ஏமாற்றிய ரபாடா

டெல்லி அணியின் பந்துவீச்சில் சாதித்தது அஸ்வின் மட்டுமே. மும்பை அணியின் கடும் விளாசலில் ஈடுபட்ட சமயத்திலும் குறைந்த ரன்களே தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அதேவேளையில் ரபாடாவின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை.

சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் மிக சிறப்பாக விளையாடி குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்தனர்.. 14 பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா 37 ரன்கள் எடுத்தது, 200 ரன்களை மும்பை எட்ட காரணமாக அமைந்தது.

201 என்ற இலக்கு சவால் அளிக்கக்கூடியது தான். ஆனால் சவாலை சந்திப்பதற்குள், டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

முதல் ஓவரை வீசிய டிரண்ட் போல்ட் மிக துல்லியமாகவும், வேகமாகவும் வீசிய நிலையில், அந்த ஓவரில் இரண்டு விக்கட்டுகளை டெல்லி இழந்தது. போல்டின் பந்துவீச்சை கணிக்கமுடியாமல் பிரித்வி ஷா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்கமலே ஆட்டமிழந்தனர்.

புயல்வேக பும்ரா - சாய்ந்த டெல்லி

புயல்வேக பும்ரா - சாய்ந்த டெல்லி

பட மூலாதாரம், BCCI / IPL

தவான் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் இணை சேர்ந்து அதிக ரன்கள் குவிப்பார்கள் என்று டெல்லி அணியின் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.

ஆனால், டெல்லி அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது பும்ராவின் வடிவில். இந்த ஐபிஎல் தொடரில் பும்ராவின் மிக சிறந்த பந்துவீச்சு நேற்றைய போட்டியில் வெளிப்பட்டது.

ரன் எதுவும் எடுக்காத நிலையில் தவானை போல்டாக்கிய பும்ரா அடுத்து ஷ்ரேயாஸ் அய்யரை ஆட்டமிழக்க செய்தார். முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், 8 ஓவர்களில் 5 விக்கெட்களை டெல்லி இழந்தது.

இதற்கு பிறகு நடந்தது பெரும்பாலும் சம்பிரதாய போட்டி போல் ஆகிவிட்டது. சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்டாய்னிஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில், அக்ஷர் பட்டேல் 42 ரன்கள் எடுத்தார்.

14 ரன்கள் மட்டுமே தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

புயல்வேக பும்ரா - சாய்ந்த டெல்லி

பட மூலாதாரம், BCCI / IPL

விக்கெட்கள் விழுந்த போதிலும் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்வது, களத்தில் அற்புதமாக ஃபீல்டிங் செய்வது, பந்துவீச்சில் எதிரணியை துவம்சம் செய்வது என சாம்பியன் அணி பாணியில் விளையாடிய மும்பை இறுதியாட்டத்தில் நுழைந்து, ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ள டெல்லி, இறுதியாட்டத்துக்கான அடுத்த தகுதி சுற்றுப்போட்டியில், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் அணியை சந்திக்கும்.

சில தோல்விகளை மறக்க வேண்டும். அதில் கிடைக்கும் பாடங்களை மட்டும் மறக்கக்கூடாது. தற்போதைய சூழலில், டெல்லி அணிக்கு இது பொருந்தும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: