மகேந்திர சிங் தோனி: இனி ரசிகர்கள் தோனியை நீல நிற ஜெர்சியில் பார்க்க முடியாதா?

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
2019 ஜூலை 9: மான்செஸ்டரில் அன்று நல்ல மழை.
புகழ்பெற்ற லார்ட்ஸ் மண்ணில் கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டுமெனில் அதற்கு முதல்படி இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என்பதே.
ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து. இவ்விரண்டில் ஏதாவதொரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது உறுதியாகிவிட்டது.
இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழையப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியைக் காண மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அன்றைய தினம் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.

பட மூலாதாரம், Nathan Stirk
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தோனி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். ஹர்திக் பாண்ட்யா அப்போது இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவு எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
தோனியுடன் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது போன்ற ஒரு காணொளியை பதிவிட்டு '' உங்களுடன் செலவிடும் ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்றுக்கொள்ளவும் மென்மேலும் வளரவும் உதவும் வாய்ப்பாக உள்ளது. என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ரோல் மாடல்களில் ஒருவர் நீங்கள். அதற்கு நன்றி'' என பதிவிட்டிருந்தார். 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் விரும்பப்பட்ட பதிவாக அது இருந்தது.
முதல் டி20 உலகக்கோப்பை(2007), ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) என மூன்று ஐசிசி கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா குறுகிய காலகட்டத்தில் வென்று சர்வதேச அரங்கில் சாதித்தது. 2023-ல் நடக்கும் உலகக்கோப்பையில் நிச்சயம் தோனிக்கு இடமிருக்காது என்பதால், விராட் கோலி 2019 உலகக்கோப்பையை வென்று லார்ட்ஸ் மைதானத்தில் தோனியுடன் வலம் வர வேண்டும் என தங்களது விருப்பங்களை பல்வேறு வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் இந்திய அணியின் ரசிகர்கள்.
ஆகவே ஜூலை 9 தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானதொரு நாளாகவே இருந்தது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிதானமாக விளையாடியது. ஆட்டத்தின் 45-வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார் கோலின் டி கிரந்தோம். அதற்கு அடுத்து ஒன்பது பந்துகள் வீசப்பட்டிருந்த நிலையில் மான்செஸ்டரில் பெய்த மழை அன்றைய ஆட்டத்தையே முழுமையாக பாதித்தது. வலுவான பேட்டிங் படையை வைத்திருந்த இந்திய அணிக்கு எதிராக அப்போது 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது நியூசிலாந்து.

பட மூலாதாரம், PAUL ELLIS
ஜூலை 10 அன்று, முந்தைய நாளில் தடைபட்ட ஓவரிலிருந்து ஆட்டம் துவங்கியது. இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு வைத்தது நியூசிலாந்து. முதல் 10 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. அப்போது இந்தியா எடுத்திருந்த ரன்கள் வெறும் 24.
அதன்பின்னர் ரிஷப் பந்த் அவுட் ஆக, 23-வது ஓவரில் தோனி களத்தில் நுழைந்தார். அப்போது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் 169 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற நிலை. கைவசம் 5 விக்கெட்டுகள்தான் இருந்தது. ஹர்டிக் பாண்ட்யாவும் தோனியும் இணைந்தனர். 62 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் எடுத்திருந்த ஹர்டிக்கும் அவுட் ஆனார்.
19 ஓவரில் 146 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பௌலர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் தோனி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனக்கான சிக்கலான அத்தியாயத்தில் நின்றுகொண்டிருந்தார். ஜடேஜாவின் அபாரமான ஆட்டமும் விக்கெட்டை இழந்து விடாமல் தோனி விளையாடிய மெதுவான இன்னிங்சும் மெல்ல மெல்ல இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தன.
ஆனால் 48-வது ஓவரில் ஜடேஜா அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஜடேஜா விக்கெட்டை இழந்ததும் 48-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து மீண்டும் பேட்ஸ்மேன் முனைக்கு வந்தார் தோனி.
ஃபெர்குசன் வீசிய 49-வது ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் விளாசினார். இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை.மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களை எடுக்க முயன்ற தோனி, கப்டிலின் துல்லியமான த்ரோவில் கிட்டத்தட்ட ஒரு இன்ச் இடைவெளியில் ரன் அவுட் ஆனார். அதோடு இந்திய அணியின் கதையும் முடிந்தது. 72 பந்தில் 50 ரன்கள் எடுத்த தோனி மிகவும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். 2015 உலகக்கோப்பை அரை இறுதியில் தோனி ரன் அவுட் ஆனார், அதன் பின்னர் 14 பந்துகளில் இந்தியாவின் கனவு தகர்ந்தது. அதே நிலைமை நான்கு ஆண்டுகளில் மான்செஸ்டரிலும் இந்திய அணிக்கு நடந்தது.

பட மூலாதாரம், Stu Forster-ICC
கப்டிலின் அந்த துல்லியமான த்ரோவில் தோனி ஆட்டமிழந்து ஆறு மாதங்களாகிவிட்டது. இன்னமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு அவர் திரும்பவில்லை. இப்படியொரு சூழலில்தான் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய அணிக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனி நீக்கப்பட்டிருக்கிறார்.
இது மீண்டும் கிரிக்கெட் அரங்கில் தோனி குறித்த விவாதத்தை எழுப்பியிருக்கிறது. தோனியின் கிரிக்கெட் அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதியதா பிசிசிஐ என விவாதங்கள் எழுந்துள்ளன.
தோனி இல்லாமல் 5 டி20 தொடர்களை விளையாடிவிட்டது இந்திய அணி. இதில் ஒரு தொடர் மட்டும் டிரா ஆனது. மற்ற மூன்று தொடர்களில் வென்றுவிட்டது இந்திய அணி. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த இரு ஒருநாள் தொடரிலும் தோனி இடம்பெறாத நிலையில் வெற்றியைச் சுவைத்து விட்டது இந்திய அணி.
இன்னும் சில மாதங்களில் டி20 உலகக் கோப்பை வரவுள்ள நிலையில், தோனியிடமிருந்து ஓய்வு குறித்து நேரடியாக எந்த சிக்னலும் வரவில்லை என்றாலும், தோனி இல்லாமல் இந்திய அணி பயணிக்கத் தயாராகிவிட்டது என்பதை பிசிசிஐ பல்வேறு சிகனல்களில் தெரிவித்துவிட்டது.

பட மூலாதாரம், Hindustan Times
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தோனி குறித்த தொடர் கேள்விகளுக்கு பதிலளித்த பிசிசிஐயின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், ''நாங்கள் தோனியை விட்டு நகர்ந்துவிட்டோம், எங்களுடைய தேவை குறித்து தெளிவாக இருக்கிறோம். நாங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறோம். ரிஷப் பந்த் நன்றாக செயல்படுகிறார்.விக்கெட் கீப்பர் இடத்துக்கு இரண்டாவது தேர்வாக சஞ்சு சாம்சனும் இருக்கிறார். எங்களது யோசனைகள், திட்ட செயல்முறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன் என கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
கடந்த நவம்பர் மாதம் ஐஏஎன்எஸ்-க்கு பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ''டி20 உலகக் கோப்பையில் தோனி இடம்பெறுவாரா இல்லையா இப்போது உடனடியாக சொல்லமுடியாது. அவர் எப்போது மீண்டும் கிரிக்கெட் விளையாடத் துவங்குகிறார், ஐபிஎல்லில் எப்படி விளையாடவுள்ளார், மற்ற விக்கெட் கீப்பர்கள் எப்படி விளையாடுகிறார்கள், தோனியின் ஃபார்ம் உடன் ஒப்பிடும்போது அவர்களின் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் 'கணக்கில் கொண்டுதான் முடிவு செய்யப்படும்'' என்றார்.
''தோனியின் எதிர்காலம் தெளிவாக இருக்கிறது. அணி நிர்வாகம், கிரிக்கெட் வாரியம், தோனி என மூன்று தரப்பும் வெளிப்படையாக பேசி முடிவுகள் எடுத்துள்ளன. தோனி மாதிரி ஒரு மிகப்பெரிய விளையாட்டு வீரர் தொடர்பான விஷயங்களை அறைக்கு வெளியே பொதுவில் பேசமுடியாது,'' என பிசிசிஐ தலைவர் கங்குலி கடந்த ஆண்டு இறுதியில் ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Hindustan Times
''என்ன செய்ய வேண்டும் என்பதை தோனிதான் முடிவு செய்வார். அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து நான் இன்னமும் அவரிடம் பேசவில்லை. ஆனால் அவர் இது குறித்து விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவுடன் நிச்சயம் பேசியிருக்கிறார். அவர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு மிகச்சிறந்த வீரர்'' என கங்குலி தெரிவித்திருந்தார்.
2019 உலகக்கோப்பையில் தோனியின் ஸ்ட்ரைக்ரேட் மிகவும் விமர்சனத்துக்குள்ளானது. கடைசிகட்ட ஓவர்களில் சிக்ஸர்கள், பௌண்டரிகள் விளாசினாலும் அவரது ரன் குவிப்பு வேகம் மந்தமாகிவிட்டது என தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அடுத்து நியூசிலாந்து மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட பெரிய டி20 தொடரிலும் தோனி சேர்க்கப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி, தோனி குறித்து பேசும்போது ''இந்த வயதில் அவர் இனிமேல் டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாட விரும்புவார் என நினைக்கிறேன். ஐபிஎல்லில் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்குவார், அப்போது தனது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என அவர் பரிசோதிக்கக்கூடும். அவர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடும்'' என தெரிவித்திருந்தார். மகேந்திர சிங் தோனி கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் டி20 போட்டியில் அரை சதம் விளாசினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்கள்தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச டி20 தொடர்கள். இவ்விரு தொடர்களிலும் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. சரி, ரிஷப் பந்த்எப்படி விளையாடுகிறார்?
கடந்த ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின்னர் ஆறு ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாடிவிட்டார். இதில் இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார். சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மட்டும் அரை சதம் விளாசினார். விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் 16 பந்துகளில் மூன்று பௌண்டரி, நான்கு சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் விளாசினார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
கடைசியாக விளையாடிய 11 டி20 போட்டிகளில் ஓர் அரை சதம் மட்டும் விளாசினார் பந்த். 5 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்.
சர்வதேச அரங்கில் 28 டி20 போட்டிகளில் விளையாடிவிட்டபோதும் இன்னமும் நம்பகமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் முத்திரை பதிக்கவில்லை.
இருப்பினும் 22 வயதே ஆன ரிஷப் பந்த் மீது இந்திய அணி நிர்வாகம் நல்ல அபிப்ராயம் கொண்டிருக்கிறது. மேலும் வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது.
தோனியின் இடத்தை நிரப்புவதற்கு ரிஷப் பந்த்துக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதில் பிசிசிஐ தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது.
ஆகவே தோனி இனி அவ்வளவுதானா?
வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்படாவிட்டாலும் ஒரு வீரர் இந்திய அணியில் விளையாடமுடியும் .

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
ஆனால் அதற்கு முன்னர் இந்திய அணிக்கு விளையாட தான் தகுதியான நபர் என்பதை உள்ளூர் போட்டிகள் அல்லது பயிற்சி போட்டிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். உடல் தகுதியையும் நிரூபித்தாக வேண்டும்.
தோனி ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக்கோப்பைக்குத் பரீசீலிக்கப்படலாம் என்பதே ரவிசாஸ்திரி கூறியுள்ள சாராம்சம்.
இது தோனி மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கினாலும் சரி இல்லாமல் போனாலும் சரி இந்திய அணி தோனியைச் சார்ந்து இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துவிட்டது.
அதே சமயம் தோனிக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தியிருக்கிறது. குறிப்பாக கங்குலி ''நான் இருக்கும்வரை அனைவரும் உரிய முறையில் மதிக்கப்படுவர்'' எனத் தெரிவித்திருந்தார்.
தன்னை விட்டு நகர்ந்துச் செல்ல அணி தயாராக இருக்கும்போது, கிரிக்கெட் உலகில் தன்னை மீண்டும் நிரூபித்து அணிக்குள் வருவாரா அல்லது சர்வதேச கிரிக்கெட் அத்தியாயத்துக்கு ஏற்கனவே முடிவுரை எழுதிவிட்டாரா என்பதை தோனி மட்டும்தான் வெளிப்படையாக சொல்ல முடியும்.
கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனியை நீல நிற ஜெர்சியில் இனி கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்க முடியுமா இல்லையா எனும் கேள்விக்கான பதிலும் அவரது முடிவில்தான் அடங்கியிருக்கிறது. பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












