உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் ஆடாமலேயே இந்தியா இறுதிச் சுற்றுக்கு செல்லலாம் - எப்படி?

பட மூலாதாரம், Christopher Lee-IDI
- எழுதியவர், நிதின் ஸ்ரீவத்ஸவா
- பதவி, பிபிசி, மான்செஸ்டரில் இருந்து
ஐசிசி உலகக்கோப்பை அரைஇறுதியின் முதல் ஆட்டத்தை விளையாட இந்திய அணி மான்செஸ்டர் வந்தடைந்துள்ளது.
அரைஇறுதியில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
எனினும், நாளை நடைபெற உள்ள இந்த விளையாட்டை ஆடாமலே, இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
எப்படி? மழைக்கடவுள் மனது வைத்தால் அப்படி நடக்கலாம்.
ஜூலை 9ஆம் தேதி, அதாவது நாளை மான்செஸ்டரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்படி அவ்வப்போது மழை பெய்யுமானால், அரையிறுதி ஆட்டம் தடைபட்டு, போட்டி நிறுத்தப்படலாம்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தப்பட்டது நினைவுக்கு வருகிறதா? அப்போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆனால், இப்போது அது போன்று நடக்காது.
ஏனென்றால், மற்ற ஆட்டங்களை போல அல்லாமல், அரைஇறுதி அல்லது இறுதி போட்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த விளையாட்டுக்காக மற்றொரு நாள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
ஜூலை 9 அன்று இந்தியா நியூசிலாந்து ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டால், இந்தப் போட்டிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நாள் ஜூலை 10.
எனினும், ஜூலை 10ஆம் தேதி வானிலை மேலும் மோசமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மதிய வேலையில் மழை பொழியும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அப்படி 10ஆம் தேதி அன்றும் மழை பெய்து போட்டி நிறுத்தப்பட்டால், அவர்களுக்கு வேறு வாய்ப்பு இருக்காது.
புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்தை விட இந்தியா நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 15 புள்ளிகளோடு இருப்பதால் லார்ட்ஸில் நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெறும்.
மழையும் உலகக் கோப்பையும்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 உலகக் கோப்பை போட்டியில்தான் வரலாற்றிலேயே, மழையால் அதிக ஆட்டங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Harry Trump-IDI
நடந்து முடிந்த 45 ஆட்டங்களில் ஏழு போட்டிகள் முன் கணிக்க முடியாத வானிலை காரணமாக பாதிக்கப்பட்டது.
மூன்று போட்டிகள் டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிக்கப்பட்டன.
மற்றொரு பக்கத்தில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் போட்டி மழையால் தடைபடாது என்ற நம்பிக்கையில் அந்த அணிகள் இருக்கும். பெர்மிங்காமில் உள்ள எட்கபாஸ்டனில் வியாழக்கிழமை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த நாளில் போட்டி நடக்கவில்லை என்றால், அதற்காக ஒதுக்கப்பட்ட வெள்ளிக்கிழமை அன்றும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இரு நாட்களும் மழை பெய்தால் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்தை விட முன்னனியில் உள்ள ஆஸ்திரேலிய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மான்செஸ்டருக்கு வரத்தொடங்கி உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.
துபாயில் இருந்து உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து வந்துள்ளது பிரமிளா மற்றும் குமார் தம்பதி. "மழை பெய்து, இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், சிறந்த ஆட்டம் என்பது விளையாடப்பட வேண்டும்" என்பது இந்த தம்பதியின் கருத்து.
அங்குள்ள உள்ளூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில இந்திய மாணவர்கள், தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் போட்டிக்கான டிக்கெட் வாங்கியிருப்பதையும் காண நேர்ந்தது.
அதில் ஒருவர் "மழை வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். 2015ஆம் ஆண்டைப்போல அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைவதை இன்னும் ஒரு முறை என்னால் காண முடியாது" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












