அரசுப் பேருந்தில் இந்தி வாசகம் - போக்குவரத்துத் துறை விளக்கம்

பட மூலாதாரம், FACEBOOK / Kanimozhi
சில இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: அரசுப் பேருந்தில் இந்தி வாசகம் - போக்குவரத்துத்துறை விளக்கம்
தமிழகத்தில் அரசுப் பேருந்தில் இடம்பெற்ற இந்தி வாசகங்கள் குறித்து போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக, ரூ.158 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமைத் தொடக்கி வைத்தார்.
இந்த பேருந்துகளில் அவசரகால வழி, தீயணைப்புக் கருவி உள்ளிட்டவற்றை குறிப்பிடும் வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்று இருந்தன. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்தி வாசகங்கள் இடம்பெற்றதற்கான காரணம் குறித்து போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தேசிய அளவிலான நிறுவனங்களான 'ASRTU' and 'ARAI' ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படியே புதிய பேருந்துகளின் கட்டுமானங்களும், கூண்டுகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில், பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதுவாக இரு புறங்களிலும் அவசரகால வழிகள் (Emergency Exits) அமைக்கப்பட்டுள்ளன. இதனை, பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வகையான அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படுவதோடு, பார்த்தவுடன் எளிதில் அறிந்து கொள்கின்ற வகையில் வழிகாட்டி ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்காக அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரே ஒரு பேருந்தில், இந்த அவசரகால வழிக்காக (Emergency Exits) ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் ஆங்கிலத்தோடு, இந்தி மொழியிலும் எழுதப்பட்டு இருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு, அது உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.


தி நியூ இந்தியன் எக்ஸிபிரஸ் : மாணவியை கர்ப்பமாக்கிய உதவித் தலைமை ஆசிரியர்

பட மூலாதாரம், Jean-Francois DEROUBAIX
12ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக சேலத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றின் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸிபிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த மாணவி கர்ப்பமாக உள்ளது தெரிய வந்ததை தொடர்ந்து, அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் பிற ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர்.
அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர், வேதியியல் பாடமும் நடத்தி வந்தார். ஒருநாள் அந்தப் பெண் லேபில் தனியாக இருக்கும் போது, அவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பயத்தின் காரணமாக முதலில் இந்த சம்பவத்தை அப்பெண் யாரிடமும் சொல்லவில்லை. சில வாரங்களுக்கு முன்புதான் கர்ப்பமானது தெரிய வந்ததும், அவரது தோழியிடம் சொல்லியிருக்கிறார்.
அத்தோழி, பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் தெரிவிக்க, மற்ற ஆசிரியர்களுக்கும் இது தெரிய வந்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த உதவித் தலைமை ஆசிரியருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியில் மற்றொரு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரும் இது போன்ற பாலியல் பிரச்சனையை சந்தித்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினமலர்- கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்குமா பாஜக?

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகாவில் கவிழும் நிலையில் உள்ள கூட்டணி அரசை காப்பாற்ற காங்கிரஸ் - ம.ஜ.த. தலைவர்கள் போராடி வருகின்றனர். மேலும் பல அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக உள்ளனர். ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பா.ஜ.வும் இறங்கியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அரசின் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சி கவிழும் நிலை உள்ளது. அவர்களை திரும்ப இழுக்கும் முயற்சியில் காங். கூட்டணி தலைவர்கள் இறங்கியுள்ளனர். ராஜினாமா செய்தவர்களில் பலர் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்கள்.
சித்தராமையா, 'ம.ஜ.த.வுடனான சகவாசம் போதும். இதனால் காங்கிரசின் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை சந்தித்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரலாம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனதை மாற்ற வேண்டிய அவசியமில்லை' என கூறியுள்ளார். முதல்வரை மாற்ற வேண்டிய சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. க்கள் ராஜினாமா பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை பா.ஜ.க தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
அதே நேரம், ''நாங்கள் யாரும் சன்னியாசிகள் அல்ல; ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால் முயற்சியில் ஈடுபடுவோம்'' என மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா கூறினார். 'ஆட்சி கவிழுமா?' என்ற கேள்விக்கு ''பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார்.
இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












