முகிலன் மனைவி: 'பாலியல் வல்லுறவு புகார் ஒரு பொய்' மற்றும் பிற செய்திகள்

முகிலன்

பட மூலாதாரம், FACEBOOK

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் வல்லுறவு புகாரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு முகிலன் அனுப்பப்பட்டார் என்று சிபிசிஐடி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது.

இந்நிலையில், இது ஒரு பொய் குற்றச்சாட்டு என முகிலனின் மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2019ல் காணாமல் போன முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கபட்டதை அடுத்து, அவரை சென்னைக்கு கொண்டுவந்த தமிழக குற்றபிரிவு குற்றபுலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து முகிலனை தமிழக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், அவர் மீது பாலியல் வல்லுறவு வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் கூறபட்டது.

Presentational grey line

கிரேக்க பொதுத் தேர்தல் - மைய வலதுசாரி வென்றது

கிர்ரியாக்கொஸ் மீட்சோடாக்கிஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிர்ரியாக்கொஸ் மீட்சோடாக்கிஸ்

கிரேக்கத்தில் நடந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டின் மைய வலதுசாரி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி வென்றுள்ளது.

பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்ததையடுத்து, பிரதமர் ஆலெக்சிஸ் சீப்ரெஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

கிர்ரியாக்கொஸ் மீட்சோடாக்கிஸின் புதிய ஜனநாயக கட்சி இதுவரை 39.8 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. இடதுசாரி கட்சியான சீப்ரெஸின் சிரிசா கட்சி 31.6 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

Presentational grey line

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய இரான்

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய இரான்

பட மூலாதாரம், EPA

அணு ஆற்றல் உற்பத்தியை குறைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் 2015இல் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இரான் அறிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து ஒப்பந்த விதிமுறைகளை மீறிவிட்டதாக அந்நாடு கூறியுள்ளது.

இன்னும் ஒப்பந்தத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் இரானுக்கு உள்ளதாக குறிப்பிட்ட அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் கடைமைகளை சரியாக செய்ய தவறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Presentational grey line

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க மறுப்பு

போயிங் 737

பட மூலாதாரம், Getty Images

சவுதி அரேபியாவின் விலைகுறைந்த விமான சேவை நிறுவனமான ஃப்ளையடீல், 30 போயிங் 737 ரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

இந்த முடிவு போயிங் 737 ரக விமானங்களுக்கு ஏற்பட்ட விபத்துகளால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியாவில் கடந்த அக்டோபர் மாதமும், எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் மாதமும் விபத்துக்கள் ஏற்பட்டன. எத்தியோப்பியாவில் நடைபெற்ற விபத்தில் 346 பேர் உயிரிழந்தனர்.

அந்த விபத்திலிருந்து 737 ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் தவறுகளை சரி செய்து வருவதாக போயிங் நிறுவனம் தெரிவித்தது.

Presentational grey line

கருப்பையை நீக்கும் பெண்கள்

கருப்பையை நீக்கும் பெண்கள்

பட மூலாதாரம், AFP

இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷயமாகவே உள்ளது. மாதவிடாய் காலப் பெண்கள் அழுக்கானவர்களாகவே கருதப்படுகின்றனர். மேலும் சமூக மற்றும் சமய நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகின்றனர்.

சமீப வருடங்களில் இந்த நடைமுறைகள் நகர்ப்புற படித்த பெண்களால் சற்று தளர்த்தப்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் கருப்பைகளை அகற்றுகின்றனர் என்று செய்தி வெளியானது.

அதில் பெரும்பாலானோர்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அவ்வாறான அறுவை சிகிச்சைகளை செய்திருக்கின்றனர்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :