ஒலிம்பிக் கனவு: கைகள் செயலிழந்த பின்னும் மல்யுத்தக் களத்தில் சாதித்த சோனம் மாலிக்

பட மூலாதாரம், Sat Singh
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை 18 வயது மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக் அண்மையில் தோற்கடித்து அவருக்கு ஒரு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தினார். இதற்குப் பிறகு, அவர் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் பங்கேற்பார். வெற்றியின் இந்த மைல்கல்லை எட்டும் பயணம் சுலபமானதோ அல்லது எந்தவொரு சாதனைக்கும் குறைவானதோ அல்ல.
ஹரியாணா மாநிலம் சோனிபத்தில் மதீனா கிராமத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ராஜேந்தர் மாலிக் என்ற ராஜ் பயில்வான், தனது மகள் சோனமுக்கு பொருத்தமான விளையாட்டு எது என்று தேடிக்கொண்டிருந்தார், பொருத்தமான ஒரு விளையாட்டில் தனது மகளை ஈடுபட வைக்க அவர் விரும்பினார்.
விளையாட்டு எதுவாக இருந்தாலும் சரி, ஆனால் அது மல்யுத்தமாக இருக்கக்கூடாது என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார். அவரே ஒரு மல்யுத்த வீரர் என்பதும், டெல்லியைச் சேர்ந்த புகழ்பெற்ற மல்யுத்த வீரர் மாஸ்டர் சாந்த்கி ராமின் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றவர் ராஜேந்தர் மாலிக் என்பது ஆச்சர்யமான விஷயம்.
"தேசிய விளையாட்டுகளுக்கு முன்பே எனக்கு காயம் ஏற்பட்டதால் நான் ஒருபோதும் நாட்டுக்காக விளையாடியதில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. எனது கடின உழைப்பு அனைத்தும் வீணாய்ப்போனது. இதனால் பொன்னான வாழ்க்கையை இழந்துவிட்டேன். மிகச் சிறந்த வீரர்களாக இருந்த எனது நண்பர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதேபோல் என் மகளுக்கும் நடக்கக்கூடாது என்று நினைத்தேன்," என்கிறார் ராஜேந்தர்.
ராணுவத்தில் பணிபுரிந்த சோனமின் மாமாவும், அவரது தந்தையின் குழந்தை பருவ நண்பருமான அஜ்மீர் மாலிக் தனது பண்ணையில் ஒரு பயிற்சியரங்கைத் திறந்து 2011 முதல் பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
சோனமின் மல்யுத்த பயணம் இப்படித்தான் தொடங்கியது.

பட மூலாதாரம், Sat Singh
தினமும் காலையில் தனது நண்பரை சந்திப்பதற்கும் சோனமை விளையாடுவதற்கு அழைத்துப் போகும்போதும் ராஜேந்தர், அஜ்மீர் மாலிக்கின் பயிற்சி அரங்கிற்குச் செல்வார். படிப்படியாக, அஜ்மீர் மாலிக்கின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சி மீண்டும் ராஜேந்தர் மாலிக்கை மல்யுத்தத்துடன் இணைத்தது. அவர் தனது மகளின் எதிர்காலம் மல்யுத்தமாக இருந்தால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினார். அஜ்மீர் மாலிக்கின் இந்த அரங்கில் ஆண் குழந்தைகள் மட்டுமே பயிற்சி பெற்றனர். எனவே சோனம் ஆரம்பத்தில் இருந்தே ஆண் குழந்தைகளுடன் கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.
"பயிற்சியாளர் அஜ்மீர் எனது பயிற்சியை முற்றிலும் ராணுவ ஒழுங்கு முறையில் பயிற்றுவித்தார். எனக்கும் ஆண் குழந்தைகளைப் போலவே பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சிக்கு வந்துவிட்டால், எந்த கவனக்குறைவையும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்பதில் பயிற்சியாளர் ஐயா உறுதியாக இருந்தார்," என்று சோனம் கூறுகிறார்.
பலனளித்த உழைப்பு
குழந்தை பருவத்தில் ஒரு முறை பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த சோனம், தனது தந்தையுடன் ஐ.பி.எஸ் சுமன் மஞ்சரியிடம் பரிசு பெற்றிருக்கிறார்.
"ஐபிஎஸ் சுமன் மஞ்சரி போன்ற அந்தஸ்தை அடைய வேண்டும் என்று அந்த நாளில் முடிவு செய்தேன், அதன் பிறகு, பள்ளி நிலையிலும், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலான விளையாட்டுகளிலும் பங்கேற்றுக் கொண்டேன்," என்கிறார் சோனம்.
வெற்றிப் படியில் ஏறத் தொடங்கிய பிறகு, சோனம், மல்யுத்தப் போட்டிகளில் ஐந்து முறை பாரத் கேசரி பட்டம் வென்றுள்ளார். சோனம், தன்னைவிட, அனுபவத்திலும், வயதிலும் பெரிய மல்யுத்த வீரர்களை தோற்கடித்ததாக ராணுவத்தில் இருந்து சுபேதராக ஓய்வு பெற்ற அஜ்மீர் கேசரி கூறுகிறார்.
எந்தவித அழுத்தமும் இல்லாமல் உருவத்தில் பெரிய மற்றும் சக்திவாய்ந்த மல்யுத்த வீரர்களை எதிர்கொள்வது சோனமின் சிறப்பு என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு போட்டிகளிலும் தனது நூறு சதவீத உழைப்பை கொடுக்க முயற்சிப்பதக சொல்கிறார் சோனம்.

பட மூலாதாரம், Sat Singh
கடினமான நேரங்கள்
2013ஆம் ஆண்டில், மாநில அளவிலான போட்டியின் போது, சோனமின் வலது கையை இயக்கவும் அசைக்கவும் முடியவில்லை. இது ஒரு சிறிய காயம் என்று அவரது தந்தையும் பயிற்சியாளரும் முதலில் நினைத்தார்கள். சோனமின் கூற்றுப்படி, "நாங்கள் சில நாட்டு மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டோம், ஆனால் கை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்துப் போய்க்கொண்டிருந்தது, ஒரு நாள் முற்றிலுமாக அசைக்க முடியாமல் போனது."
ரோஹ்தக்கில் ஒரு மருத்துவ நிபுணரிடம் சோனத்தை அழைத்துச் சென்று கையை காட்டியபோது, இனிமெல் சோனம் மல்யுத்தத்தை மறந்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டார். தனது மகள் மல்யுத்தம் விளையாடுவது அவசியம் இல்லை என்றும் தான் தவறு செய்துவிட்டதாகவும் தந்தை ராஜேந்தர் உணர்ந்த நேரம் இது. இப்போது சோனத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்று அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் கேலி செய்யத் தொடங்கினர்.
"ஆனால் சுமார் பத்து மாத சிகிச்சையின் போதும், நாங்கள் பயிற்சியை விட்டு வெளியேறவில்லை. சோனம் கைகளுக்கு பதிலாக கால்களால் பயிற்சி செய்து கொண்டே இருந்தார், ஏனெனில் மல்யுத்தத்தில் காலின் பங்கும் மிகப் பெரியது. அவள் எந்தவொரு நிலையிலும், களத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. பத்து மாத சிகிச்சைக்கு பிறகு, மீண்டும் சோனம் பழைய நிலைக்கு திரும்பிவிட்டார். அதன் பிறகு சோனம் மீண்டும் திரும்பிப் பார்க்கவில்லை," என்று ராஜேந்தர் கூறினார்.
காயங்கள் என்பது மல்யுத்த வீரர்களுக்கு அணிகலன் என்றும், அதை பார்த்து பயப்படக்கூடாது என்றும் தனது பயிற்சியாளர் அஜ்மீர் மாலிக் சொன்னதை சோனம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.

பட மூலாதாரம், Sat Singh
சோனமின் கனவு என்ன?
62 கிலோ எடைப் பிரிவுக்குச் செல்லும்போது, இந்த பிரிவில் முன்னேறுவது கடினம் என்று அனைவரும் கருதினார்கள். ஏனெனில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் அவர்களும் இந்த பிரிவில் விளையாடுபவர்.
"ஆனால் சாக்ஷி மாலிக் முன்னால் இருப்பதாலேயே இந்த பிரிவில் நான் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். சாக்ஷியை தோற்கடித்துவிட்டால், ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துவிடும் என்று நம்பலாம் என்று மிகவும் உறுதியாகக் கருதினேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது," என்று சோனம் நினைவு கூர்கிறார். தற்போது சோனம் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
"நான் சாக்ஷியை தோற்கடித்திருக்கிறேன் 2020 ஒலிம்பிக்கில். குறைந்தபட்சம் தங்கப் பதக்கத்துடன் வருவேன்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சோனம் மாலிக்.

பிற செய்திகள்:
- "மலேசிய அரசும் எனது அரசும் ஒரே மாதிரியான சிக்கலை சந்திக்கிறது" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
- ஆஸ்திரேலியாவில் புயல் மழை - இருப்பினும் தீ அணையவில்லை
- மசூதியில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் - 10 சவரன் நகை மற்றும் பணமும் பரிசு
- சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகள்: அதிகாரிகளை திசை திருப்ப மணல் மூட்டைகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












