Ind Vs Aus: இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Ind Vs Aus

பட மூலாதாரம், NurPhoto / getty images

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.1 ஓவர்களில் 255 ரன்களை எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து பேட் செய்து ஆஸ்திரேலிய அணியின் வார்னர், அவுட் ஆகாமல் 112 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸருடன் 128 ரன்களை எடுத்தார். ஃபிஞ்ச் 114 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 110 ரன்களை எடுத்தார்.

கோலி

பட மூலாதாரம், Getty Images

258 ரன்கள் எடுத்து 37.4 ஓவரில் வெற்றி இலக்கை கடந்தது ஆஸ்திரேலியா. கடைசி வரை விக்கெட் ஏதும் எடுக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணிக்கு வார்னரும், ஃபிஞ்சும் பெரும் சவலாக இருந்தனர்.

சோபிக்காத இந்திய அணி

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த ஷிகர் தவன் 91 பந்துகளில் 74 ரன்கள் எடுக்க, கே.எல்.ராகுல் 61 பந்துகளில் 47 ரன்களை எடுத்தார்.

ஆனால், அவரை தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்திய அணியில், ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராத் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ரவிந்திர ஜடஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், ஸ்டீவன் ஸ்மித், மார்நஸ், ஆஷ்டன் டன்னர், அலெக்ஸ் காரே, ஆஷ்டன் அகர், பேட் க்யூமின்ஸ், மிஷெல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஆடம் சாம்பா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: