மலேசிய பிரதமர் மகாதீர் இந்தியாவுக்கு பதிலடி: 'தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக்காட்டுவோம்'

தவறை சுட்டிக்காட்டுவோம் : மலேசிய பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மீதான மலேசிய பிரதமர் மகாதீர் மொகமதின் விமர்சனங்களுக்கு பதிலடியாகவே, பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கருதப்படும் நிலையில், தங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், தொடர்ந்து தவறுகளை சுட்டிக்கோட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம் என மலேசிய பிரதமர் மகாதீர் தொடர்ந்து இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இது மலேசியாவின் விமர்சனங்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று இந்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ''இந்தியாவிற்கு அதிக பாமாயில் விற்கிறோம். இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் குறித்த கவலை எங்களுக்கு உள்ளது. ஆனால், அதே நேரம் எங்கு தவறு நடந்தாலும் வெளிப்படையாக அதை சுட்டிக்காட்டவேண்டும். அதை நாங்கள் தொடந்து செய்வோம்,'' என மலேசிய பிரதமர் மகாதீர் மொகமத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் ''பணத்துக்காக தொடர்ந்து நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறிவிட்டால், பல தவறுகள் நடக்கும். அவை நாம் செய்யும் தவறாகவோ, பிறரின் தவறாகவோ இருக்கலாம்,'' என்று கூறினார் மகாதீர்.

தவறை சுட்டிக்காட்டுவோம் : மலேசிய பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

"உண்மை நிலை என்னவெனில், தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பாரபட்சம் காட்டப்படுவது தவறு என ஒட்டுமொத்த உலகமும் கருதுகிறது," என்றார் மகாதீர்.

மலேசிய பாமாயிலை இந்தியா புறக்கணிக்கும் விவகாரத்துக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியா - மலேசியா இடையேயான பாமாயில் வர்த்தகம்

உலகளவில் இந்தோனேசீயாவிற்கு பிறகு பாமாயில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடக மலேசியா விளங்குகிறது.

இந்தோனீசியா இந்தியாவின் பாமாயில் இறக்குமதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மலேசியாவின் குறைவான வரிகளால் 2019இல் இந்தோனீசியாவைவிட அதிக அளவிலான பாமயிலை இந்தியா மலேசியாவிடம் இறக்குமதி செய்தது.

இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசிய பாமாயிலை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ஒரு டன் பாமாயிலுக்கு 10 டாலர்கள் என்ற விலையில் இந்தோனீசியாவில் இருந்து சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

தவறை சுட்டிக்காட்டுவோம் : மலேசிய பிரதமர்

பட மூலாதாரம், TWITTER/NARENDRA MODI

மலேசியாவுக்கு பாதிப்பு உண்டாகுமா?

இந்தியா கைவிட்டாலும், மலேசியாவால் பாமாயிலுக்கான புதிய சந்தையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும், பாமாயில் விலையேற்றத்தால் இந்தியாவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்றும் ஒரு பரவலான கருத்து நிலவுகிறது.

இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பாகிஸ்தான், மியான்மர், வியட்நாம், எத்தியோப்பியா, எகிப்து, அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிடம் அதிக பாமாயில் விற்க முடிவுசெய்துள்ளதாக மலேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான வர்த்தகம் மேற்கொள்வதற்கான முயற்சியை மலேசியாவின் முதன்மை தொழில் அமைச்சகம் விரும்புவதாக பெயர் குறிப்பிடப்படாத மலேசிய அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

"இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு மிகவும் முக்கியமானது. கடந்த தேசிய முன்னணி அரசு இருதரப்பு உறவை நல்ல முறையில் பேணி வந்தது. ஆனால் இன்றைய மலேசிய அரசு எந்த அடிப்படையில் செயல்படுகிறது என்பது தெரியவில்லை. இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக மலேசியாவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்,’’ என்கிறார் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் செனட்டருமான டி. மோகன்.

என்ன சொல்லியிருந்தார் மகாதீர் மொகமத்?

காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியா கவலை கொண்டுள்ளது என்றும் டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டின் முடிவில் மலேசிய பிரதமர் கூறியிருந்தார்.

முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்திலும் இதே கருத்தை அவர் கூறியிருந்தார்.

"இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாக ஆவதில் இருந்து தவிர்க்கப்பட்டால் அது நியாயமல்ல," என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அவர் விமர்சித்திருந்தார்.

'இரான் மீது தடையால் மலேசியாவும் பாதிக்கப்படுகிறது.'

இரான் மீதான தடை அந்நாட்டை மட்டுமல்லாமல், பிற பொருளாதாரங்களையும் பாதிப்பதாக மகாதீர் கூறுகிறார்.

ஒரு நாட்டின் மீது தடை விதிப்பதை தாம் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகைய தடைகளால் ஏராளமான மக்களின் மனம் காயப்படும் என்றார் மகாதீர்.

"தடைகள் விதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இரான் மீது தடை விதிக்கப்பட்டால், மலேசியாவும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் எங்களுக்குரிய சந்தையை இழக்கிறோம்," என்றார் மகாதீர்.

எனவே இரானும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாறாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது சரியல்ல என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: