இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தானால் சமரசம் செய்ய முடியுமா?

அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கிறதா பாகிஸ்தான்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கிறதா பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையில் சமாதானம் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கும் என்று கூறினார்.

சௌதி அரேபியா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி பயணம் மேற்கொள்வதாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சமாதானத்தை ஏற்படுத்தும் நிலையில் பாகிஸ்தான் இருக்கிறதா என்று பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி விளக்குகிறார்.

இரானில் சக்தி வாய்ந்த நபராக விளங்கிய ஜெனரல் காசெம் சுலேமானீ பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் ஜனவரி-3ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, 24 மணி நேரத்துக்குள், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோவிடம் இருந்து பாகிஸ்தானின் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

இதை பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் செய்தித் தொடர்புப் பிரிவான ஐ.எஸ்.பி.ஆர். ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

''பிராந்தியத்தில் உள்ள சூழ்நிலை, சமீபத்தில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன,'' என்று ஐ.எஸ்.பி.ஆர். தெரிவித்துள்ளது.

''அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்கும் பரந்த நோக்கத்தை மனதில் கொண்டு, பதற்றத்தைத் தணிப்பதற்கு, தொடர்புடைய அனைவரும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்று தலைமைத் தளபதி வலியுறுத்தினார்.''

''ஆஃப்கன் அமைதித் திட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்குவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் தலைமைத் தளபதி வலியுறுத்தினார்,'' என்று ட்விட்டர் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பாம்பேயோவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தானால் சமரசம் செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

''பாகிஸ்தானின் ராணுவ தலைமைத் தளபதி பாஜ்வாவும் நானும் இன்று பேசினோம். அந்தப் பிராந்தியத்தில் இரானின் செயல்பாடுகள் அமைதியைக் குலைப்பதாக உள்ளன. அமெரிக்க நலன்களை, அலுவலர்களை, அமெரிக்காவின் பொறுப்பில் உள்ள இடங்களை, கூட்டாளிகளைப் பாதுகாக்கும் முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்கிவிட முடியாது,'' என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவருடைய பதிவுகளைப் பார்க்கும்போது, ''கூட்டாளிகள்'' அமெரிக்காவுக்கு ஆதரவாக நிற்பார்கள் என்பது உறுதி அளித்திருப்பதைப் போல தெரிந்தது. சிலர் சொல்வது போல, இந்த மோதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நிற்கும் என்று தெரிகிறது.

இந்தக் கலந்துரையாடல் பல கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தலைமைத் தளபதிக்கு அமெரிக்காவிடம் இருந்து அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்தது கிடையாது. பிரதமருடன் பேசாமல், ராணுவ தலைமைத் தளபதியுடன் அவர் ஏன் பேசினார்?

சில மணி நேரங்கள் கழித்து இன்னொரு ட்விட்டர் பதிவு பாகிஸ்தானில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. இந்த முறை தென் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுப் பிரிவின் அதிகாரப்பூர்வ கணக்கின் மூலம் பதிவிடப்பட்டிருந்தது. முதன்மை துணை உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் பெயரில் அது வெளியானது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பாகிஸ்தானுக்கு சர்வதேச ராணுவ கல்வி மற்றும் பயிற்சியை #IMET அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது என்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரான் - அமெரிக்கா மோதல் சூழ்நிலையில் இந்தப் பயிற்சித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அந்த அனுமானங்களை ராணுவ செய்தித் தொடர்பாளர்கள் மறுக்கின்றனர்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் சில அறிக்கைகள் வெளியிட்டது. இந்த மோதலின் பதற்றம் உள்ள நிலையில், அந்த அறிக்கைகளில் வார்த்தைகள் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருந்தன.

பாகிஸ்தானை ஒட்டியிருக்கும் பக்கத்து நாடு இரான்; காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் பிறகு, காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்த மிகவும் சில நாடுகளில் இரானும் ஒன்று. ஆனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவுடன் ராணுவ மற்றும் பொருளாதார உறவுகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. சௌதி அரேபியாவின் முதல்நிலை நட்பு நாடுகளின் பட்டியலிலும் உள்ளது. உறுதியற்ற பொருளாதார சூழ்நிலையில், இன்னும் அவர்களை நம்பித்தான் இருக்கிறது. அதன்விளைவாக, இராக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தானால் வலுவான நிலைப்பாடு எதுவும் எடுக்க முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவ ஆய்வுகள் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி உதவியாளர் அர்ஹமா சித்திக்குவா, மத்திய கிழக்கு, வளைகுடா, துருக்கி மற்றும் இரான் பகுதி விஷயங்களை கவனித்து வருகிறார். பதற்றம் அதிகரித்த சமயத்தில் அவர் தெஹ்ரானில் ஒரு மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.

பாகிஸ்தானின் எதிர்வினையைப் பார்த்து இரான் மக்களும், அரசு நிர்வாகத்தினரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று அந்தப் பெண்மணி கூறுகிறார்.

''சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் ஏன் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று அவர்கள் தொடர்ந்து கேட்டனர். சௌதி அரேபியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.'' என அவர் தெரிவிக்கிறார்.

இருந்தபோதிலும், இதில் தன்னால் ஒரு பங்காற்ற முடியும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. இம்ரான் கான் அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்காவையும் இரானையும் நெருங்கச் செய்வதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஏதாவது முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாக முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சல்மான் பாஷீர் தெரிவித்தார். அதுதான் இந்தச் சூழ்நிலையின் பின்னணி.

''வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர்கள் ராணுவ ஜெனரல் பாஜ்வாவுடன் தொலைபேசியில் பேசியது, இரான் தூதர்களுடன் எங்கள் வெளியுறவு அமைச்சர் சந்தித்தது ஆகியவற்றைப் பார்த்தால், பதற்றத்தைத் தணிக்க திரைமறைவில் ஏதோ முயற்சிகள் நடக்கிறது என்றும், அதில் பாகிஸ்தானும் பங்கேற்றுள்ளது என்றும் தெரிகிறது.

''ஆனால் அது கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில் நிலைமை சிக்கலாகிவிட்டது. இந்த மோதலில் தலையிட விரும்பவில்லை என நாங்கள் (பாகிஸ்தான்) தெளிவுபடுத்தி விட்டோம். ஒரு வகையில் அமெரிக்கா மற்றும் இரானுக்கு உதவியாக இருக்க அது வழி ஏற்படுத்தியுள்ளது'' என்று அவர் கூறினார்.

இரான் பிரதமருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் பிரதமருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

வியாழக்கிழமை இஸ்லாமாபாத் நகரில் மாபெரும் கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மண்ணில் இடம் தர மாட்டேன் என்று உறுதிபட தெரிவித்தார்.

''மற்றவர்களின் போர்களில் பாகிஸ்தான் பங்கேற்காது. மாறாக, மோதலில் உள்ளவர்களுக்கு இடையில் சமரசம் செய்யும் நாடாக இருக்கும். சௌதி அரேபியா மற்றும் இரான் இடையே சமாதானத்தை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம்'' என்று அவர் அறிவித்தார்.

டாக்டர் நாசிர் ஹுசேன், இஸ்லாமாபாத்தில் உள்ள காயிதே ஆசாம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் பேராசிரியராக உள்ளார். இந்த நிலைப்பாட்டை பாகிஸ்தான் விரும்பி ஏற்கவில்லை என்றும், கட்டாயத்தின்பேரில் எடுத்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

''இரானுக்கு அடுத்துள்ள நாடாக நாங்கள் (பாகிஸ்தான்) இருக்கிறோம், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையில் ராணுவ மோதல் ஏதும் ஏற்படுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆப்கன் அமைதி திட்டத்தில் எங்களுக்கும் பங்குள்ளது, அமெரிக்காவுக்கும் பங்கு உள்ளது.

எனவே இந்த சமயத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்துவது ஒன்றுதான் பாகிஸ்தானால் செய்யக் கூடிய விஷயமாக இருக்கும். முழு அளவிலான ராணுவ மோதலாக மாறுவதை தடுக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுவதை பாகிஸ்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது'' என்று அவர் கூறினார்.

சமரசம் ஏற்படுத்தும் நாடாக இருக்கும் அளவுக்குப் பாகிஸ்தானுக்கு செல்வாக்கு உள்ளதா?

பாகிஸ்தானால் அது முடியும் என்று டாக்டர் நாசிர் ஹுசேன் நம்புகிறார்.

''மைக் பாம்பேயோவும்,பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் டி. எஸ்பரும் பாகிஸ்தானின் ராணுவ தலைமைத் தளபதியுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஏன் இந்தியாவுடன் தொடர்பு கொள்ளவில்லை? ஏனெனில் பூகோள ரீதியில் பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை, முஸ்லிம் உலகில் அதன் நிலையை அமெரிக்கா அறிந்துள்ளது.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தானால் சமரசம் செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அரசுகளுக்கு இடையில் என்ற நிலையில் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். ஆனால் அவர்கள் சார்பில் எந்த உத்தரவாதங்களையும் அளிக்க முடியாது'' என்கிறார் அவர்.

குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று சலாம் பாஷிர் கூறுகிறார்.

''கடந்த காலத்தில் இன்னும் செல்வாக்கு மிக்க பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவையும், இரானையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்ய முயற்சிகள் செய்தன. ஆனால் பலன் கிடைக்கவில்லை. எனவே, மோதலில் உள்ளவர்கள் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள ,எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து தான் அமையும்'' என்று அவர் கூறினார்.

இருந்தபோதிலும், இரு தரப்பிலும் தொடர்பு இருந்தாலும், சௌதி அரேபியாவையும் இரானையும் அல்லது அமெரிக்காவையும் இரானையும் நெருக்கமாகக் கொண்டு வர பாகிஸ்தானால் முடியாது என்று அர்ஹமா சித்திக்குவா நம்புகிறார்.

''பதற்றம் இதற்கு மேல் அதிகரிக்காது. ஆனால், அப்படி நடந்தால், பாகிஸ்தான் நடுநிலையாக இருக்க முடியாது. ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும். இரான் பக்கத்து நாடாக இருந்தாலும், பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு சௌதி அரேபியா மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுப்பதற்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது.''

செளதி மன்னருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செளதி மன்னருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

ஆனால், பாகிஸ்தானுக்கு அது மிகுந்த சிரமமானதாக இருக்கும். ஏற்கெனவே ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் ஆயுதப் போரில் இரான் இறங்கினால், நிச்சயமாக பாகிஸ்தானும் பாதிக்கப்படும்.

அது பாகிஸ்தானின் தூக்கத்தைத் தொலைப்பதாக ஆகிவிடும் .``என்று அர்ஹமா கூறுகிறார்.

''பாகிஸ்தானின் அதரவைப் பெறுவதற்கும், எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் தள்ளி வைக்கவும் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியுடன் அமெரிக்க அதிகாரிகள் பேசியுள்ளனர். ஆனால் பாகிஸ்தானுக்கு அதிக தாக்கமும், பூகோள ரீதியிலான நிலைப்பாடும் முக்கியமானதாக இருக்கும் என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது.

''அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே முஸ்லிம் நாடு பாகிஸ்தான். சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்ல உறவு வைத்துக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. இவ்வளவு சாதகமான விஷயங்கள் இருந்தாலும், அமெரிக்காவும் இரானும் சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லாமல் போனால், கடைசியில் அந்த நாடுகளுக்கு இடையில் போர் ஏற்படத்தான் செய்யும்.'' என அவர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது, அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா தரப்பில் இருந்து இம்ரான் கானை அணுகி, இரானுடன் சமரசம் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டனர். அக்டோபர் மாதம் இம்ரான் கான் டெஹ்ரான் சென்றார். ஆனால், பயனுள்ள எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையில் சமமான ஒரு நிலையை ஏற்படுத்துவதும் பாகிஸ்தானுக்கு கடினமானது. கடந்த பல தசாப்தங்களில், சௌதி அரேபியாவுக்கு பல முறைகள் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியுள்ளது. பயிற்சிக்காக அனுப்பியதாக எப்போதும் பாகிஸ்தான் கூறி வந்துள்ளது.

ஆனால் 2015-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் ராணுவ கூட்டாளியான சௌதி அரேபியாவின் கோரிக்கை பற்றி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஏமனில் இரானியர்கள் ஆதரவுடன் செயல்படும் ஹூத்தி கலகக்காரர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான ராணுவ வீரர்களுடன் சேர்ந்து போரிட தங்கள் நாட்டில் இருந்து யாரையும் அனுப்ப வேண்டாம் என்று அந்த விவாதத்தின் இறுதியில் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டுக்குள் அது இன அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று அப்போது அச்சம் தெரிவிக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்து, சுன்னி அரசுகளின் பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ கூட்டமைப்பை உருவாக்குவதாக ரியாத் அறிவித்தபோது, பாகிஸ்தான் முன்னாள் தலைமை தளபதி ரஷீல் ஷரீப் அதன் முதலாவது கமாண்டராக நியமிக்கப்பட்டார்.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தானால் சமரசம் செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் தலைமை தளபதி ரஷீல் ஷரீப்

மத்திய கிழக்கில் முன்னணி பங்காற்றுவதற்கு, சௌதி அரேபியாவின் தலைமையில் கூட்டுப் படை உருவாக்குவது என்பது இரானுக்கு எதிரானது என்று கருத்தாளர்கள் பலரும் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு.சௌதி அரேபியாவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்று. இருந்தபோதிலும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் ஷியா பிரிவினர். இரானுடன் மத மற்றும் தத்துவ சார்பு கொண்டவர்கள். எனவே இரானுக்கு எதிரான எந்த மோதலிலும், அதற்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுத்தால், தென்மேற்கு எல்லையில் இருந்து மட்டுமின்றி, நாட்டுக்குள்ளேயே ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று இஸ்லாமாபாத் அஞ்சுகிறது.

கடந்த காலங்களில் ஐ.எஸ். குழுவினருக்கு எதிராகப் போரிடுவதற்கு பாகிஸ்தானியர்கள் சிரியாவுக்குப் பயணமானதாக வெளியான தகவல்களில் இருந்தே, பாகிஸ்தானில் இன வாத அடிப்படையில் எப்படி பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் சமநிலையை பராமரித்து வருவதாக இதுவரை வெளிநாட்டு அறிஞர்கள் நம்புகின்றனர். சௌதி அரேபியாவுடன் அது சுமுக உறவு வைத்துள்ளது. ஆனால், ஒருபோதும் டெஹரானுக்கு எதிராகப் போனதில்லை.

கடந்த காலத்தில் எல்லையில் குறைந்த அளவில் தான் மோதல்கள் இருந்துள்ளன. ஆனால், இரு நாடுகளும் அந்தப் பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொண்டுள்ளன.

எனவே, இரான், அமெரிக்கா, சௌதி அரேபியாவை நெருக்கமாகக் கொண்டு வரக் கூடிய செல்வாக்கு பாகிஸ்தானுக்கு நிச்சயமாக உள்ளது. ஆனால், உலகில் வேறு எந்த மோதலின் போதும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எந்த அளவுக்கு உண்மையிலேயே சம்பந்தப்பட்ட நாடுகள் விரும்புகின்றன என்பதைப் பொருத்துதான் முடிவு அமையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: