“உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம்” - இரான் ராணுவம் ஒப்புதல்

பட மூலாதாரம், GEOFF ROBINS via Getty images
உக்ரைன் பயணிகள் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், AFP
தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
மேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன?
தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில்தான் இந்த விமானம் சிக்கியதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்ததை தொடர்ந்து மறுத்து வந்த இரான் தற்போது முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று இரான் உறுதியளித்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலுள்ள குப்பைகள் இயந்திரத்தை கொண்டு அகற்றப்படுவது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானது.

பட மூலாதாரம், EPA
இதன் மூலமாக, விமான விபத்து குறித்த முக்கிய ஆதாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
விழுந்து நொறுங்கிய விமானம்
உக்ரைன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஜனவரி 8ஆம் தேதி டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனீ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே விபத்துக்கு உள்ளானது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பெரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது.
உயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள் ஆவர்.
பத்து சுவீடன் நாட்டவர்கள், நான்கு ஆப்கானியர்கள், மூன்று பிரிட்டானியர்கள் மற்றும் மூன்று ஜெர்மானியர்களும் இறந்தவர்களில் அடக்கம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












