தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக முன்னிலை, டிஎஸ்பி-க்கு அரிவாள் வெட்டு

உள்ளாட்சி தேர்தல்

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேரடியாக வாக்குப்பதிவு நடந்த பதவிகளுக்கான முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறைமுக தேர்தல் நடக்கும் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

நேரடித் தேர்தலில் வென்ற வேட்பாளர்கள் மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பார்கள். இன்று மாலைக்குள் முழு முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியான முடிவுகள் படி, நேரடி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் சிவகங்கை தவிர 26 மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அவற்றில் அதிமுக கூட்டணி 14 இடங்களையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே போல, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான இடங்களிலும் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

தேர்தல் நடத்தப்பட்ட 285 ஊராட்சி ஒன்றியங்களில் 150 இடங்களை அதிமுகவும், 135 இடங்களை திமுகவும் வென்றுள்ளன.

வன்முறை சம்பவங்கள்

வெற்றி பெற்ற எதிர் தரப்பு வேட்பாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சி உள்ளிட்ட காரணங்களால் சில மாவட்டங்களில் மோதல்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி எனும் ஊரில் நடந்த தேர்தல் வன்முறையில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் சமமான வாக்குகள் பெற்றதால் இரு கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்க தொடங்கியதும், மோதலை தடுக்க முயன்றுள்ளளார் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷை. அப்போது 4 பேர் அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்துக்கான மறைமுகத் தேர்தலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல இடங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், மறைமுகத் தேர்தலை முறையாக நடத்துமாறும் திமுக சார்பில் இன்று மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்கள் பல இடங்களில் வரவே இல்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலிலும் மோதல் வெடித்தது. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆளும் கட்சியினர் நாற்காலிகளை வீசி எரிந்தனர் என்று செய்திகள் வந்துள்ளன.

தருமபுரி, கடலூர் உட்பட பல மாவட்டங்களிலும், கடும் போட்டி நிலவிய ஒன்றியங்களில் திமுக உறுப்பினர்களை வாக்களிக்க விடாமல் அதிமுகவினர் தடுத்ததாக கூறப்படுகிறது.

சிவகங்கையில் நடைபெறாத தேர்தல்

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறவில்லை. மொத்தமுள்ள 16 உறுப்பினர்களில் காலை 11 மணி அளவில் திமுக தரப்பு உறுப்பினர்கள் எட்டு பேரும் ஆஜர் ஆனார்கள்.

ஆனால், அதிமுக உறுப்பினர்கள் ஒருவர் கூட மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஆஜர் ஆகவில்லை. இந்நிலையில் மாவட்ட கவுன்சிலர்கள் திமுக தரப்பு உறுப்பினர்கள் 8 பேர் திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனோடு ஆட்சியரை சந்திக்க வந்தனர்.

இதனை அறிந்த அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட அதிமுக செயலர் செந்தில்நாதனோடு முற்றுகையிட்டு ஆட்சியரை திமுக தரப்பில் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் 

மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டதால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

திமுக தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் 15 ஆவது வார்டில் வெற்றி பெற்ற ஆரோக்கிய சாந்தாராணியை காணவில்லை என அவரது மகன் அன்பரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார். இதையடுத்து, அவரை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்று மாவட்ட ஆட்சியர் விசாரனை செய்ய நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயக்காந்தனை 15வது வார்டு மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி சந்தித்தார். 3 மணிநேர ஆலோசனைக்கு பிறகு மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஆட்சியர் ஒத்திவைத்தார்.

கோவை தேர்தல்

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கோவையில் இன்று நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சாந்திமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட குழு துணைத் தலைவராக அமுல் கந்தசாமி (அதிமுக) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 12 இடங்களையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கான இடங்களில் 6 இடங்களை அதிமுகவும், மூன்று இடங்களை திமுகவும் மற்ற மூன்று இடங்களை சுயேட்சை வேட்பாளர்களும் வென்றுள்ளனர்.நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக பெரும்பாலான பதவிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் தோடர் இனத்தைச் சேர்ந்த திமுக வின் பான்தோஸ் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தேர்தல் பற்றி

இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு, ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தேர்வு செய்வார்கள்.

அதேபோல மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தேர்வு செய்வார்கள்.

உள்ளாட்சி தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஊரக பகுதிகள் இல்லாத சென்னை மாவட்டம், புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர பிற 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்தது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் மாவட்ட வார்டு கவுன்சிலர்களுக்கான பதவியிடங்களில் 242 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2195 இடங்களையும் பிடித்தன.

எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணி மாவட்ட வார்டு கவுன்சிலர் இடங்களில் 270 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2,362 இடங்களையும் அக்கட்சி கைப்பற்றியது. சதவீத அடிப்படையிலும் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது.

மாவட்ட வார்டு கவுன்சிலருக்கான வாக்குகளில் 47.18 சதவீத வாக்குகளை தி.மு.க பெற்றது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 41.55 சதவீத வாக்குகளையே பெற்றது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க. 34.99 சதவீத வாக்குகளையே பெற்ற நிலையில், தி.மு.க. 41.24 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: