தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 10 வாக்குகளே பெற்று வென்ற தலித் பெண் பதவியில் நீடிப்பாரா?

ராஜேஸ்வரி
படக்குறிப்பு, ராஜேஸ்வரி
    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சியில் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற தலித் பெண் ஊராட்சி மன்றத்தின் தலைவரானது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

பிச்சிவிளை கிராம ஊராட்சியின் தலைவராக, ராஜேஸ்வரி எனும் தலித் பெண்ணுக்கு வெறும் 10 வாக்குகளால் கிடைத்த வெற்றி என்பது மட்டும் இதற்கு காரணமல்ல.

தங்கள் ஊராட்சியின் தலைவர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து ஊரில் உள்ள பெரும்பான்மை சாதியினர் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர் என்பதே இந்த விவகாரம் பேசப்பட முக்கியக் காரணம்.

கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பையும் மீறி ராஜேஸ்வரி வென்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சாதியினர் கூறியதால்தான் தேர்தலில் போட்டியிட்டதாக ராஜேஸ்வரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேஸ்வரி தேர்தலில் போட்டியிட்டது ஏன்?

தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்று ஊரே முடிவு செய்திருந்த நிலையில் ராஜேஸ்வரி மட்டுமல்லாது சுந்தராச்சி என்னும் தலித் பெண்ணும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

"அந்தப்பெண் (சுந்தராச்சி) வெற்றி பெறக்கூடாது என்பதால் ராஜேஸ்வரியிடம் தேர்தலில் போட்டியிடுமாறு நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள் கேட்டுக்கொண்டோம். அவர் வீட்டில் வெறும் நான்கு வாக்குகள்தான். அவர் வெற்றியை உறுதி செய்ய எங்கள் ஆட்கள் சிலரையும் வாக்களிக்க வைத்தோம். அதனால்தான் அவருக்கு 10 வாக்குகள் கிடைத்தன," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பிச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் கிராம ஊராட்சி உறுப்பினருமான அருணகிரி.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெரும் ராஜேஸ்வரி
படக்குறிப்பு, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெறும் ராஜேஸ்வரி

"எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் எதுவும் இல்லை. முன்னாள் ஊராட்சித் தலைவர் முடிசூடிப் பெருமாள் வந்து என்னை தேர்தலில் போட்டியிடச் சொன்னபோது, இதெல்லாம் வேண்டாம் என்று அழக்கூடச் செய்தேன். காரணம் எனக்கு எதுவும் தெரியாது. பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உனக்கு உதவி செய்கிறேன் என்று அவர் கூறியதால் நான் ஒப்புக்கொண்டேன்," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராஜேஸ்வரி.

நூறு நாள் வேலை என்று பரவலாக அறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும் நாட்கள் போக, மீதமுள்ள நாட்களில், 'கல்யாண வீடுகளுக்கும் இழவு வீடுகளுக்கும் சுத்தம் செய்யவும் இலை எடுக்கவும் போவேன்,' என்று கூறினார் 33 வயதாகும் இந்த புதிய ஊராட்சித் தலைவர்.

போட்டியிட மறுத்தபோது முதல் ஒரு மாதத்தில் பதவியில் இருந்து விலகி விடலாம் என்று கூறியே பிறர் தம்மை சம்மதிக்க வைத்ததாகவும், ஊராட்சித் தலைவர் பதவியேற்றபின் தொடரலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ள இருப்பதாவதும் அவர் கூறினார்.

"குடும்பத்தினரான நாங்கள் என் மருமகள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றுதான் சொன்னோம். அதையும் மீறி அவள் போட்டியிட்டாள். கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் என் மருமகளை தேர்தலில் போட்டியிட வைத்தனர். இதுவரை எங்களுக்கு சாதி ரீதியான பிரச்சையையோ, பதவி விலக வேண்டும் என்ற அழுத்தமோ இல்லை. அவர்கள் அவ்வாறு அழுத்தம் கொடுத்தாலும் பதவி விலகும் எண்ணம் இல்லை ," என பிபிசி தமிழிடம் ராஜேஸ்வரியின் மாமியார் மாரியம்மாள் கூறினார்.

பிச்சிவிளையில் என்ன பிரச்சனை?

2016ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிச்சிவிளை கிராம ஊராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போதே அதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. அதற்கு காரணம் அந்த ஊராட்சியில் உள்ள ஒட்டுமொத்த வாக்குகளில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை வெறும் ஆறு.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிச்சிவிளை கிராம ஊராட்சியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 785.

ரத்து செய்யப்பட்ட 2016 தேர்தல், தற்போது நடந்து முடிந்துள்ள 2020 தேர்தல் ஆகிய இரு சமயங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தங்கள் ஊராட்சியின் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து அந்த ஊர் மக்களின் சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு மனுவாக அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களின் கடிதத்தை பெற்றதற்கான ஒப்புகை மட்டுமே அவர்களுக்கு பதிலாகக் கிடைத்துள்ளது.

இதனால் தேர்தலைப் புறக்கணிப்பதுடன் மட்டுமல்லாது, ஆறு ஊராட்சி வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் யாரையும் போட்டியிட வைப்பதில்லை என்று ஊரில் உள்ளவர்கள் முடிவு செய்தனர். தேர்தலில் வாக்களிக்காமல் வாக்குப்பதிவு நாளன்று வீடுகளில் கறுப்புக் கொடியும் ஏற்றியுள்ளனர்.

வார்டு உறுப்பினர் பதவிக்கு இந்தத் தேர்தலில் ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி ஆகிய இரண்டு தலித் பெண்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 13 வாக்குகள் பதிவாகிய நிலையில், 10 வாக்குகள் மட்டுமே பெற்ற ராஜேஸ்வரி வெற்றி பெற்றார்.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

பட மூலாதாரம், Getty Images

இரண்டு வாக்குகள் மட்டும் பெற்ற சுந்தராச்சி தோல்வியடைந்தார். ஒரு வாக்கு செல்லாத வாக்கு.

பெரும்பான்மை சாதியான நாடார்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி வைத்திருந்ததால் சாதி ரீதியான பிரச்சனை உண்டாகலாம் என்பதால் தாங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவே இல்லை என்று இரு தலித் பெண் வேட்பாளர்களும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

அடுத்தது என்ன?

தலித் பெண்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்வரை தேர்தலில் வேட்பாளராகவோ வாக்காளராகவோ பங்கேற்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றார் அருணகிரி.

தற்போது தேர்வாகியுள்ள ராஜேஸ்வரி பதவியில் நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அவர் முடிவு செய்துகொள்ளட்டும். ஆனால், தலித் பெண்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, எங்கள் சாதியினரும் போட்டியிட வழிவகை செய்யப்படும்வரை ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் விரும்பவில்லை என்கிறார் அவர்.

இதனால் கிராம மக்கள் அரசின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதே என்ற கேள்விக்கு, அவற்றையும் அறிந்துதான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம் என்றார் அவர்.

ராஜேஸ்வரி கிராம ஊராட்சியின் தலைவராக இன்று பதவியேற்றுள்ளார். அவர் முழு ஐந்து ஆண்டுகளும் பதவியில் நீடிப்பாரா, அவ்வாறு நீடித்தாலும் அந்த ஐந்து ஆண்டுகளில் அவர் சுதந்திரமான மற்றும் வெற்றிகரமான ஊராட்சித் தலைவராக இருப்பாரா என்பது இனிவரும் காலங்களில் தெரியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: