ஆபாசம் படம் பார்த்தாலே நடவடிக்கையா? - டி.ஜி.பி. ரவி கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை'
வியாபார நோக்கத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. எம்.ரவி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம், "'போக்சோ' சட்டம் குறித்து 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஒரு கூட்டம் நடந்தது. நீதிபதி கிருபாகரன், 'குழந்தை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிறப்பான செயல்' என்று பாராட்டினார். இன்னும் விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது கோவையில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக போலீஸ் சூப்பிரண்டுகள், காவல்துறை தலைவர்களுக்கு பட்டியல் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதனை சரியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். இப்போது ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்யப்படுவது முற்றிலுமாக குறைந்துவிட்டது.
பட்டியலில் இருப்பவர்களின் சிலருடைய ஐ.பி. முகவரி மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று காட்டுவதாக கூறி இருக்கிறார்கள். அதனால்தான் கைது நடவடிக்கையில் சற்று காலதாமதம் ஆகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற குழந்தை ஆபாச படங்கள், வீடியோக்களை எங்கு எடுத்தார்கள்? யார்? யாரெல்லாம்? இதில் தொடர்புள்ளவர்கள் என்பது குறித்து அந்த வீடியோவை கொண்டு விசாரணை நடத்த இருக்கிறோம். தமிழக குழந்தைகளின் வீடியோக்களும் அதில் வருகிறது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இதில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்பவர்கள் பொழுதுபோக்குக்காகத்தான் செய்கிறார்கள். விசாரணையில் வியாபார நோக்கத்தில் அதை செய்திருப்பதாக கண்டறியப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
இப்போது வரை 200-க்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மற்றவர்களை குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த வாரத்தில் (இன்று முதல்) அடுத்த பட்டியலை மாவட்டங்களுக்கு அனுப்ப உள்ளோம்.
சிலர் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். அதில், 'நான் தெரியாமல் குழந்தைகள் அல்லாத பெரியவர்களின் ஆபாச வீடியோவை (அடல்ட் ஸ்டப் வீடியோ) பார்த்துவிட்டேன். என்மீது நடவடிக்கை எடுத்துவிடாதீர்கள். சமுதாயத்தில் அவமானம் ஆகிவிடும்' என்று சொல்லியிருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். அந்த வீடியோவை செல்போனில் வைத்து இருந்தால் உடனே அழித்துவிடவேண்டும். இனிமேல் பார்க்கக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம்.
இதுவரை குழந்தை ஆபாச படங்கள் வீடியோ பார்த்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் சென்னை, திருச்சியில் தலா ஒருவர், கோவையில் 2 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கள்." - இவ்வாறு அவர் கூறினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள்'

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அடுத்த ஓரிரு நாள்களில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிா்வாகக் குழுவின் பரிசீலனைக்கு இந்த விவகாரம் அனுப்பப்பட உள்ளது. அதற்கு அக்குழு இறுதி அனுமதி அளிக்கும்பட்சத்தில், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி: 'பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தமிழக தலைவர் '

பட மூலாதாரம், Getty Images
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான கட்சி நிா்வாகிகளின் கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். அதனையடுத்து கடந்த 4 மாதங்களாக தமிழக பாஜக தலைவா் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில், புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான கருத்து கேட்புக் கூட்டம் தமிழக பாஜக தலைமை அலுவலகமாக தியாகராயநகா் கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் மற்றும் கருத்து கேட்பு பொறுப்பாளா் நரசிம்மராவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கட்சி நிர்வாகிகள் குப்புராமு, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பின்னா் நரசிம்மராவ் கூறுகையில், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான கருத்துகள் கட்சி நிா்வாகிகளிடம் பெறப்பட்டது. இந்தக் கருத்துகள் கட்சியின் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்படும். தலைவா்கள் இந்தக் கருத்துகளைப் பரிசீலித்து, அதன் பின்னா் புதிய தலைவா் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஒருசில வாரங்களில் வெளியாகும் என்றார் அவா். இதில், நிர்வாகி குப்புராமுவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












