குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளின் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்த கிரிஸ்டோபர் அல்போன்ஸ் என்ற இந்த நபர், இணையத்திலிருந்து குழந்தைகளின் ஆபாசப் படங்களை டவுன்லோடு செய்வது, அப்லோடு செய்வது தனது சமூகவலைத் தள பக்கங்களில் உள்ள நண்பர்களுக்குப் பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நபரைக் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தவுடன் அவர் தன்னிடம் இருந்த ஆபாசப் படங்களை அழித்துவிட்டதாகவும் இருந்தபோதும், அவர் தன் ஃபேஸ்புக் மெஸஞ்சரில் அனுப்பியிருந்த படங்களை எடுத்து காவல்துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர்.
ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றிவந்த கிரிஸ்டோபர் யார் யாருக்கு இந்தப் படங்களை அனுப்பினாரோ அவர்களைப் பற்றியும் காவல்துறை விசாரித்து வருகிறது.
நிலவன் நிலவன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் இந்த படங்களை அவர் பகிர்ந்துவந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று கைது செய்யப்பட்ட அவர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 26ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் சென்னை முதலிடமும் வகிப்பதாகவும் தகவல் ஒன்று கடந்த வாரம் ஊடகங்களில் பரவியது.
இந்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்கும், மேலதிக தகவல்களை பெறுவதற்கும் தமிழக காவல்துறையின் கூடுதல் காவல்துறை இயக்குனர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) மு. ரவியை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது.
அப்போது பேசிய அவர், "இந்த தகவலுக்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. எனினும், இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து ஒரு அறிக்கை மத்திய உள்துறைக்கு வந்தது என்பது உண்மைதான். அதை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் குழந்தை ஆபாசப்படம் பார்ப்பவர்களின் பட்டியல் மத்திய உள்துறையிடமிருந்து எங்களுக்கு கிடைத்துள்ளது" என்று கூறினார்.
தமிழகத்தில் குழந்தை ஆபாசப் படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறைக்கு அனுப்பியுள்ளதாகவும், அதை முதலாக கொண்டு கைது நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் அப்போது கூடுதல் காவல்துறை இயக்குனர் ரவி கூறியிருந்தார்.
இதுகுறித்த கட்டுரையை முழுமையாகபடிக்க: "தமிழகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார்" - கைது நடவடிக்கை தொடங்கும்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












