"நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ. 20 லட்சம்" - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

நீட்

பட மூலாதாரம், Getty Images

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்த மாணவரின் தந்தை பயிற்சி மையத்திற்கு 20 லட்ச ரூபாய் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மேலும் சில ஆள்மாறட்டப் புகார்கள் எழுந்துள்ளன.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா, இந்த ஆண்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் இளங்கலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடமிருந்து ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அஷோக் என்பவர் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், உதித் சூர்யா நீட் தேர்வை எழுதவில்லையென்றும் அவருக்குப் பதிலாக வேறொருவர் அந்தத் தேர்வை எழுதியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் இருப்பவரின் படமும் தம்மோடு தற்போது படிக்கும் உதித் சூர்யாவின் படமும் ஒன்றாக இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். நீட் மதிப்பெண் பட்டியலிலும் உதித் சூர்யாவின் படம் இல்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தத் தகவலை அவர் முன்னதாக தேனி மருத்துவக் கல்லூரியின் டீனிற்கும் அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் செப்டம்பர் 18ஆம் தேதியன்று ஊடகங்களில் வெளியானது. அன்று இது தொடர்பாக விளக்கமளித்த தேனி மருத்துவக் கல்லூரியின் டீன் ராஜேந்திரன், ஆள் மாறாட்டம் உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அன்று பிற்பகலுக்குப் பிறகு, தன்னுடைய தண்டையார் பேட்டை வீட்டிலிருந்து வெங்கடேசன் குடும்பத்தினருடன் தலைமறைவானார். இந்த வழக்கை முதலில் தேனி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் விசாரித்து வந்தார்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உதித் சூர்யா

செப்டம்பர் 23ஆம் தேதியன்று இந்த விவகாரம் மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை - சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. வெங்கடேசனையும் உதித் சூர்யாவையும் காவல்துறையினர் தேடிவந்த நிலையி்ல, புதன்கிழமையன்று பிற்பகல் திருப்பதி மலை அடிவாரத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அங்கிருந்து அனைவரும் தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் காலை முதல் விசாரணை நடத்திவந்தனர்.

அவர்களிடம் தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றனர். பயிற்சி மையத்திற்கு 20 லட்ச ரூபாய் கொடுத்து இந்த ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்த உதித் சூர்யா, அந்தத் தேர்வில் 916 மதிப்பெண்களைப் பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக உதித் சூர்யா இரண்டு முறை நீட் தேர்வை எழுதியும் தேர்ச்சிபெறவில்லை. இதையடுத்து மும்பையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சிபெற்ற உதித் சூர்யா, கடந்த மே 5ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு எழுதினார்.

இந்தத் தேர்வில் அவர் 385 மதிப்பெண்களைப் பெற்றார். இதையடுத்து அவருக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த நிலையில்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அவர் தேர்ச்சியடைந்த தகவல் வெளியானது.

மும்பையில் எந்த மையம் இதில் சம்பந்தப்பட்டது, உதித் சூர்யாவுக்குப் பதிலாக இந்தத் தேர்வை எழுதியது யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

neet exam

பட மூலாதாரம், Intellistudies

இந்த விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி வட்டாரங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் புகைப்படமும் அவரது நீட் தேர்வு புகைப்படமும் ஒன்றாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, தருமபுரியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் புகைப்படமும் மாறி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம், "எங்களுக்கு எந்த மாணவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் வரும். அந்தப் பட்டியலில் உள்ள புகைப்படமும் மாணவரிடம் அளிக்கப்பட்ட அலாட்மென்ட் கடிதத்தில் உள்ள புகைப்படமுமே ஒப்பிடப்படும். நீட் தேர்வின் ஹால் டிக்கெட்டையெல்லாம் அவர்கள் பரிசோதிக்கச் சொல்வதில்லை. தற்போது இந்த விவகாரம் வெடித்திருப்பதால் சோதிக்கச் சொன்னார்கள். அதில் சிலரது படங்கள் பொருத்தமில்லை" என்று மட்டும் தெரிவித்தார்.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதில் தவறு நடந்திருக்கிறதா என்பதை தேர்வுக் குழுதான் முடிவுசெய்ய வேண்டுமென்றும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :