'சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்கிறோம்' - இஸ்லாமிய அரசு அமைப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், IS PROPAGANDA
இரான் புரட்சிகர ராணுவ படையின் தலைமை தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்பதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். குழு அறிவித்துள்ளது.
"சுலேமானீயின் மரணம் ஆயுதமேந்திய ஜிகாதிய போராளிகளுக்கு நன்மை அளிப்பதற்காக கடவுள் செய்த குறுக்கீடு," என்று ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கடந்த 3ஆம் தேதி இராக் தலைநகர் பாக்தாத்தில் காசெம் சுலேமானீயை திட்டமிடப்பட்ட ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்ற அமெரிக்கா குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதாவது, சுலேமானீ கொல்லப்பட்டது முதல் அதன் காரணமாக அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற இராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான தொடர் நிகழ்வுகள் தங்களது இயக்கத்தின் செயல்பாட்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அதிகரிப்பதற்கு உதவும் என்பதன் அடிப்படையிலேயே ஐ.எஸ். இயக்கம் இவ்வாறாக கருத்துத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
சுலேமானீயை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று நேற்று (வெள்ளிக்கிழமை) இரான் மற்றும் இரானால் நிதியுதவி அளிக்கப்பட்டு வரும் இராக்கில் இருக்கும் ஆயுத போராளிகள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மத்திய கிழக்கு நெருக்கடிக்கும், தங்கத்தின் விலை உயர்வுக்கும் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் நெருக்கடிக்கும், அதிகரித்து வரும் தங்கம் விலைக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ அதற்கான விளக்கம்.
இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி சுலேமானீயை கொன்றதிலிருந்து தங்கம் விலை கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவில், 1600 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது.

மலேசியாவுக்கு இந்தியா பதிலடி

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்த்துக்கொள்ளாதது ஆகியவற்றை மலேசிய பிரதமர் மகாதீர் மொகமத் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாலமோலின் (திரவ நிலையில் இருக்கும் பாமாயில்) ஆகியவற்றை கட்டுப்பாடுகளின்றி இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் இருந்து கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலுக்கு மாற்றியுள்ளது.

இரான் - அமெரிக்கா மோதல்: யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு?

பட மூலாதாரம், Getty Images
இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டார், இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், இந்த சூழல் போருக்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இவ்வாறான தாக்குதலால் யார் லாபம் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள்? அடுத்து இரானும் அமெரிக்காவும் என்ன செய்ய போகின்றன?
விரிவாக படிக்க: இரான் - அமெரிக்கா மோதல்: யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு?

`கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை`

பட மூலாதாரம், TNCC
தமிழக உள்ளாட்சி பதவிகளில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக காங்கிரஸ் கட்சியிடம் திமுக நடந்து கொண்டுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.எஸ். அழகிரி மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், `303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு இடம் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை` என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க: `கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை` - கே.எஸ் அழகிரி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












