உள்ளாட்சி பதவிகள் ஒதுக்கீடு: `கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை` - கே.எஸ் அழகிரி

பட மூலாதாரம், DMK
தமிழக உள்ளாட்சி பதவிகளில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக காங்கிரஸ் கட்சியிடம் திமுக நடந்து கொண்டுள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.எஸ். அழகிரி மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், `303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு இடம் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை` என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுத்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் தி.மு.க தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா,`` எங்கள் தரப்பு கருத்துகளை தெளிவாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அதற்கு மேல் கருத்து தெரிவிக்க எதுவுமில்லை`` என கூறினார்.
திமுக சார்பாக நம்மிடையே பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், ``விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்தமான் தீவுகளுக்கு சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை மதியம் சென்னை திரும்ப உள்ளார். பின்னர் இது குறித்து அவர் தலைமையில் விவாதிக்கப்படும். அதன் பிறகே இது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியும்`` என கூறினார்.

பட மூலாதாரம், TNCC
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பெருவாரியான இடங்களை கைப்பற்றின. ஆனால் அவற்றின் கூட்டணி கட்சிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றன. கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்பட்டது.
அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாக, `அதிமுக கூட்டணியில் போட்டியிடாமல், தனித்து போட்டியிட்டு இருந்தால் பாஜக அதிக இடங்களை வென்றிருக்கும்` என அக்கட்சியின் தேசிய செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், `பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து, கூட்டணி தர்மத்திற்கு எதிரான நிலைப்பாடு`` என பதிலளித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












