தமிழ்நாடு அரசியல்: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி?

''உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு மோதியே காரணம்''

பட மூலாதாரம், Facebook

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற அக்கட்சிக்கு இது பின்னடைவு என்று ஒரு தரப்பும் ஆளும் கட்சியான அ.தி.மு.கவுக்குத்தான் பின்னடைவு என்று ஒருதரப்பும் விவாதிக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

சமீபத்தில் நடந்து முடிந்த கிராமப் புறங்களுக்கு மட்டுமான உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் மாவட்ட வார்டு கவுன்சிலர்களுக்கான பதவியிடங்களில் 242 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2195 இடங்களையும் பிடித்தன.

ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணி, இதைவிட அதிக இடங்களைக் கைப்பற்றியது. மாவட்ட வார்டு கவுன்சிலர் இடங்களில் 270 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2,362 இடங்களையும் அக்கட்சி கைப்பற்றியது. சதவீத அடிப்படையிலும் தி.மு.க.வே அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது.

மாவட்ட வார்டு கவுன்சிலருக்கான வாக்குகளில் 47.18 சதவீத வாக்குகளை தி.மு.க பெற்றது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 41.55 சதவீத வாக்குகளையே பெற்றது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க. 34.99 சதவீத வாக்குகளையே பெற்ற நிலையில், தி.மு.க. 41.24 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களையும் வாக்குகளையும் கைப்பற்றியிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த முறை சரிபாதி இடங்களைவிட சற்று கூடுதல் இடங்களையே தி.மு.கவால் பெற முடிந்திருக்கிறது; ஆகவே இது ஒரு பின்னடைவு என்ற வாதத்தை வைப்பவர்களும் இருக்கிறார்கள்.

மே மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றியது. இதில், தி.மு.க. 24 இடங்களில் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றிபெற்றது. ஒட்டுமொத்த வாக்குகளில் அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 32.76ஆக இருந்தது. ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்ற அ.தி.மு.க. 18.48 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.

ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதோடு, கிட்டத்தட்ட சரிபாதிக்கு சற்றே குறைவான இடங்களை பெற்றிருப்பதால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால், அக்கட்சியின் நிலை மேம்பட்டிருப்பதாகவும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை அப்படிப் பார்க்கக்கூடாது என்கிறார் உள்ளாட்சித் தேர்தல் முறை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ள பேராசிரியர் பழனித்துரை.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

"உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் உள்ளூர் பிரச்சனைகள், உள்ளூர் மக்கள் தொகை அமைப்பு ஆகியவைதான் ஆதிக்கம் செலுத்தும். 1996லிருந்து நடந்த தேர்தல்களில் பொதுவாக ஆளும்கட்சியே அதிக இடங்களைப் பெற்றுவந்த நிலையில் இந்த முறை எதிர்க்கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்திருக்கிறது. உள்ளூர் பிரச்சனைகளையும் தாண்டி மக்களின் மனதில் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை ஆதிக்கம் செலுத்தியிருப்பதையே இது காட்டுகிறது" என்கிறார் பழனித்துரை.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் என்பது பல ஆண்டுகளாகவே மாநில அரசு விரும்பினால் நடத்தப்படும் ஒரு தேர்தலாகவே இருந்துவந்தது. 1986ல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளுக்கு நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெற்ற பிறகு, மாநகராட்சிப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவே இல்லை.

இதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலே தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் இருந்தது. பஞ்சாயத்து நகர்பாலிகா சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அந்தச் சட்டப்படி 1996ல் முதன் முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் துவங்கி, அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் எல்லாமே, புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே நடத்தப்பட்டுவிடும். அப்படி நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றுவது வழக்கமாக இருந்தது. 1996, 2001, 2006, 2011 வரை இப்படியே நடந்தது.

2011ம் ஆண்டில் ஜெயலிலதா முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 602 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளையும் 3,893 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் பிடித்தது. தி.மு.கவைப் பொறுத்தவரை, 30 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளையும் 1007 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையுமே பிடிக்க முடிந்தது.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

2016ல் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவது தள்ளிப்போனது. அதன் பிறகு, பல வழக்குகள், சர்ச்சைகளுக்கு நடுவில் 2019ஆம் ஆண்டின் இறுதியில்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவிகளை ஏலம் விடுவது, குலுக்கல் முறையில் தலைவர்களைத் தேர்வுசெய்வது, மது விநியோகம், பண விநியோகம் ஆகியவை நடந்தேறின; இந்த நடவடிக்கைகள் உள்ளாட்சி மட்டத்தில் ஜனநாயகத்தை சீர்குலைத்திருக்கின்றன என்கிறார் பழனித்துரை.

ஒரு பஞ்சாயத்தில் ஓர் ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு கோடி ரூபாய் நேரடியாகவும் அரசுத் துறைகளின் மூலமாகவும் புழங்கும் என்பதால், இந்தப் பதவிகள் மீதான ஈர்ப்பு அதிகரித்திருப்பதோடு, பல இடங்களில் ஜாதி ரீதியாகவும் பலத்தை காட்டும் முயற்சிகளும் நடந்திருக்கின்றன என்கிறார் அவர்.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவை வைத்து சட்டமன்றத் தேர்தல் முடிவை கணிக்க முடியாது என்கிறார் பழனித்துரை.

"உள்ளூரில் யார் செல்வாக்கானவர்களோ அவர்களையே இரண்டு கட்சிகளுமே தேர்தலில் நிறுத்தின. இம்மாதிரியான உள்ளூராட்சித் தேர்தலில் ஒருவருக்கு உள்ளூரில் இருக்கும் செல்வாக்கை, அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன. எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலில் கட்சி செல்வாக்கை வேட்பாளர் பயன்படுத்திக்கொள்கிறார். இந்த நிலையில், எந்தக் கட்சி வெற்றிபெற்றது என்று விவாதிக்க முடியாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். இளங்கோவன்.

தி.மு.கவின் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரும் இதே கருத்தையே எதிரொலிக்கிறார்.

"உள்ளாட்சித் தேர்தல் வேறு, இடைத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு. உள்ளூராட்சித் தேர்தலில் ஒவ்வொருவரும் தனக்கென வேலை பார்ப்பார்கள். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காக வேலை பார்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பணம் செலவழித்தாலும் தனக்கென செலழிப்பதாகவே அவர்கள் கருதுவார்கள். ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிதான் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆகவே, இது முழுக்க முழுக்க அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்து நடக்கும் தேர்தல். இதை வைத்து எதையும் ஆராய முடியாது" என்கிறார் சிவசங்கர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தி.மு.க. இந்தத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை இதை வைத்துக் கணிக்க முடியாது என்கிறார் அவர். "அந்தத் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவது, பொதுப் பிரச்சனைகளை வைத்து பிரசாரம் செய்வது, மக்களின் மனப்போக்கு என எல்லாமே வேறுபட்டதாக இருக்கும். இந்த முடிவை வைத்து அதைக் கணிக்க முடியாது" என்கிறார் அவர்.

ஆனால், அ.தி.மு.கவினர் இந்தத் தேர்தலை வேறுவிதமாகப் பார்க்கிறார்கள். "இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 2,800 இடங்களிலேயே போட்டியிட்டது. தி.மு.க. சுமார் 3,500 இடங்களில் போட்டியிட்டது. ஆகவே சதவீத அடிப்படையில் அ.தி.மு.கவுக்குத்தான் வெற்றி" என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன்.

அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் குறைவான இடங்களைப் பிடித்திருப்பதற்குக் காரணம், "தேர்தல் சுதந்திரமாக நடந்திருக்கிறது என்பதுதான். முதல்வர் தொகுதியில்கூட சிலர் தோற்றிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தேர்தல் சுதந்திரமாக நடந்திருக்கிறது" என்கிறார் அவர்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் படுதோல்வியைடந்த டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் 66 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இது அக்கட்சியினருக்கு சிறிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்

ஆனால், நாம் தமிழர் கட்சியினர் ஒட்டுமொத்தமாகவே ஒரே ஒரு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடத்தை மட்டுமே பிடித்திருப்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்களைக் குறிவைத்து நடத்தப்படும்; கட்சிகள் பெருந்தொகையான பணத்தைச் செலவழிக்கும் என்பதால்தான் நாம் தமிழர் கட்சியால் அம்மாதிரி தேர்தல்களில் வெல்ல முடியவில்லை.

மாறாக, கிராமப்புறங்களில் உள்ளூர் பிரச்சனைகளே தாக்கம் செலுத்தும்; ஆங்காங்கே பல இடங்களை நாம் தமிழர் கட்சியால் கைப்பற்ற முடியுமென அக்கட்சியினர் கருதியிருந்த நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன.

தற்போது கிராமப்புற ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 1986ல் எதிர்க்கட்சி வெற்றிபெற்றவுடன் மாநகராட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தாமல் விடப்பட்டதைப்போல இப்போதும் நடக்க வாய்ப்பிருக்கிறதா?

"இல்லை. அப்போது உள்ளாட்சித் தேர்தல் கட்டாயமல்ல. ஆனால், இப்போது அரசியல் சாசன ரீதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடத்தாமல்விட்டால் சட்டவிரோதம். ஆகவே நடத்தியே ஆகவேண்டும்" என்கிறார் பேராசிரியர் பழனித்துரை. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமும் விரைவில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுமென தெரிவித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: