ஜே.என்.யு. பல்கலையில் தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.

ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்துப் பேசினார் திமுக எம்.பி. கனிமொழி.
தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கும், கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கும் தமது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அவர் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று மாலை சந்திக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி
"கனிமொழி சந்தித்த மாணவர்கள், எப்படி துணைவேந்தர் இதுவரை தாக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவில்லை, தாக்குதலுக்கு அவர் எப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்று விளக்கினார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக கனிமொழி உறுதி அளித்தார். அவரை நீக்கவேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைக்கு அழுத்தம் தருவதாகவும் அவர் கூறினார்.

காஷ்மீர் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் மோசமாக தாக்கப்பட்டிருப்பதையும் கனிமொழி நேரில் சென்று பார்த்தார். எந்த நேரத்திலும், எவ்வித உதவிக்காகவும் தம்மைத் தொடர்புகொள்ளும்படி அவர் காஷ்மீர் மாணவர்களிடம் தெரிவித்தார்" என்று தெரிவித்தார் அருண்குமார் என்ற மாணவர்.
கனிமொழி வருகையின்போது அவர் உடன் இருந்தார்.
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குததல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் உட்பட 34 பேர் காயமடைந்தனர். பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஜே.என்.யு சம்பவம் தொடர்பாக ஒய்ஷி கோஷ் மற்றும் பிற மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஞாயிறன்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












