500 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் 2 நட்சத்திரங்கள் மோதல்: ஈர்ப்பலை மூலம் கண்டுபிடிப்பு

பைனரி நியூட்ரான் நட்சத்திய இணைப்பு குறித்த ஒரு கலைஞரின் கற்பனை ஓவியம்

பட மூலாதாரம், NSF/LIGO

படக்குறிப்பு, பைனரி நியூட்ரான் நட்சத்திய இணைப்பு குறித்த ஒரு கலைஞரின் கற்பனை ஓவியம்
    • எழுதியவர், ஜோனாதன் அமோஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

புவியில் இருந்து 500 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இறந்து போன இரண்டு அடர் நட்சத்திரங்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பேரதிர்வை, அந்த நிகழ்வில் இருந்து வெளியான ஈர்ப்பு அலைகளைக் கொண்டு விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.

அதாவது விநாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் ஒளி, 500 மில்லியன் ஆண்டுகளுக்கு பயணம் செய்தால் அடைகிற தூரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இணைந்த இந்த இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் மொத்த நிறை சூரியனைப் போல மூன்றரை மடங்கு அதிகம் என்பதும், இந்த மோதலுக்குப் பிறகு அவை அனேகமாக கருந்துளையாக மாறியிருக்கும் என்பது இதில் சுவாரசியம்.

லிகோ-விர்கோ கூட்டமைப்பின் சர்வதேச லேசர் ஆய்வகம், நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் வெளியாகும் ஈர்ப்பு அலைகளை இரண்டாவது முறையாக உணர்ந்துள்ளது.

ஈர்ப்பு அலைகளால் விண்வெளி நேரத்தில் குளத்தில் கல்லெறிவதால் ஏற்படும் அலைகளைப் போல அலைவுகள் ஏற்படும் என்ற கணிப்பை ஐன்ஸ்டீன் தமது சார்பியல் கோட்பாட்டில் வெளியிட்டார்.

இதற்கு முன் ரேடியோ நுண்ணோக்கிகளினால் கண்டறியப்பட்ட, பைனரி நியூட்ரான் நட்சத்திரங்கள் என அழைக்கப்படும் இவை, சூரியனின் நிறையை விட 2.7 மடங்குக்கு மேல் பெரிதாக இருந்ததில்லை.

இந்த இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் இணைந்ததால் கிட்டத்தட்ட நிச்சயமாக ஒரு கருந்துளை உருவாகியிருக்கும்.

அமெரிக்காவின் லூசியானா, வாஷிங்டன் மாகாணங்கள் மற்றும் இத்தாலியின் பைசா நகருக்கு அருகில் என மூன்று இடங்களில் நிறுவப்பட்டுள்ள லேசர் தலையீட்டுமானிகள் இது குறித்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லூசியானாவில் உள்ள லேசர் ஆய்வகம்

பட மூலாதாரம், NSF

படக்குறிப்பு, லூசியானாவில் உள்ள லேசர் ஆய்வகம்

இந்த அமைப்புகள் விண்ணில் நிகழும் பெரும் பிரளயங்களில் இருந்து வரும் அதிர்வுகளை எதிர்நோக்கி பிரபஞ்சத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட இந்த அமைப்புகளின் முந்தைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் கருந்துளை மோதலின் விளைவுகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உணரப்பட்ட ஒரு, ஒரு நியூட்ரான் நட்சத்திர இணைப்பு இவற்றில் விதிவிலக்காக அறியப்படுகிறது.

மூன்று ஆய்வகங்களில் ஒரு ஆய்வகத்தால் மட்டுமே இந்த நிகழ்வை கண்டறிய முடிந்தது. எனவே வானில் எந்த பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பட்டது என துல்லியமாக கூறுவது கடினமாக உள்ளது.

இதற்கு முன்னர் உணரப்பட்டதை விட, தற்போது இணைந்த்து உணரப்பட்ட நட்சத்திரங்களின் மொத்த நிறை அதிகமாக உள்ளது என்பதற்கான யோசனைகளை ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த யோசனைகளில் பெரும்பாலானவை மிக முக்கியமான உருவாக்க சூழல்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஆனால், இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ குறைந்த எடையுள்ள கருந்துளையாக இருப்பதற்கான சாத்தியத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த லேசர் தலையீட்டுமானிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது.

2015-2017 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 11 ஈர்ப்பு அலை நிகழ்வுகள் உணரப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடியவுள்ள தற்போதைய ஆய்வுச்சுற்றில், 40-க்கும் அதிகமான முறை இந்த அலைகள் கண்டறியப்பட்டிருக்கலாம்.

ஈர்ப்பு அலைகள்: விண்வெளி நேரத்தில் ஏற்படும் அதிர்வு

  • ஐன்ஸ்டீன் உருவாக்கிய பொது சார்பியல் கோட்பாட்டின் கணிப்பே ஈர்ப்பு அலைகள்.
  • இவற்றை நேரடியாக கண்டறிவதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியுள்ளது.
  • முடுக்கம் பெற்ற நட்சத்திரங்கள், கருந்துளைகள் போன்றவை ஒளியின் வேகத்தில் பரவும் அலைகளை உருவாக்கும்.
  • இந்த அலைகளின் கண்டுபிடிப்பு, பேரண்டம் குறித்த முற்றிலும் புதிய ஆய்வுகளுக்கு வழிவகுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: