ஊராட்சி தலைவரான துப்புரவு பணியாளர் சரஸ்வதி: 'எங்களுக்குனு எந்த கட்சி இருக்குது?'

- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
படிக்க வைக்க வசதி இல்லாத ஏழைப்பெற்றோரின் கடைசி மகள் சரஸ்வதி. கல்வித்தகுதி என்று எதுவும் இல்லை என்றாலும் 'கு.சரசு' என்று கையெழுத்திட மட்டுமே தெரியும்.
பான்கார்டு இல்லை. வருமான வரிக்கணக்கை இதுவரை தாக்கல் செய்தது இல்லை. வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை. மிகச்சமீப காலம் வரை துப்புரவுப் பணியாளராக இருந்தவர் சரஸ்வதி.
சுமார் 20 ஆண்டுகள் தாம் துப்புரவுப் பணியாளராக இருந்த அதே ஊராட்சிக்கு, தற்போது தலைவர் ஆகியுள்ளார் 49 வயதாகும் சரஸ்வதி.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கான்சாபுரம் ஊராட்சியின் தலைவர் சரஸ்வதியிடம் பேசியது பிபிசி தமிழ்.
இந்தத் தேர்தலில் தலித் வேட்பாளர்களுக்கு கான்சாபுரம் ஊராட்சித் தலைவர் பதவி இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
போட்டியிட்ட எட்டு வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர் சரஸ்வதி. அவருடனான உரையாடலில் இருந்து..
தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது ஏன்?
2016இல் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபோதே அதில் நான் போட்டியிட வேண்டும் என எங்கள் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். அப்போதே துப்புரவுப் பணியில் இருந்து விலகிவிட்டேன்.
அப்போது தேர்தல் நின்று போனதே? பின்பு என்ன செய்தீர்கள்?
நான் பணியில் இருந்து விலகியபின்புதான் தேர்தல் ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானது. அதன்பின்னும் தற்காலிக ஊழியராக நான் வேலை செய்தேன். ஆனால் சம்பளம் கிடைக்கவில்லை. பினாயில் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் பஞ்சாயத்தில் இருந்து வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
உங்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு கிடைத்ததா?
எங்களுக்குனு எந்த கட்சி இருக்குது? நானாகவேதான் தேர்தலில் போட்டியிட்டேன். தனிப்பட்ட முறையில்தான் தேர்தல் பணிகளைச் செய்தேன். ஊர் மக்கள் வாக்களித்துதான் தேர்தலில் வென்றேன்.
சம்பளம் வாங்க எதாவது முயற்சி செய்தீர்களா?
வேலையில் இருந்து விலகி விட்டதால் சம்பளம் கிடைக்காது என்று பஞ்சாயத்தில் கூறிவிட்டார்கள். யூனியன் ஆபிசில் போய் கேட்கச் சொன்னார்கள். அங்கும் அதையே சொன்னார்கள். இருந்த பொருட்களை வைத்துக்கொண்டு நானே சுத்தம் செய்து வந்தேன்.
உங்கள் குடும்பம் பற்றி..
எனக்கு சொந்த ஊர் இதுதான். என் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். நான் கடைசி குழந்தை. என் கணவர் குருசாமியும் இதே பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக உள்ளார்.

இரு மகன்கள் திருப்பூர் 'பனியன் கம்பெனியில்' வேலை பார்க்கிறார்கள். மகளை கட்டிக்கொடுத்துவிட்டேன். ஒரு மகனுக்கும் திருமணம் முடிந்து பேரன் இருக்கிறான்.
உங்கள் ஊரில் சாதி ரீதியான பிரச்சனைகளை சந்தித்துள்ளீர்களா?
நான் பிறந்தது முதல் அப்படி எதுவும் இங்கு இல்லை. எல்லோரும் ஒன்றாக வாழும் ஊர் இது.
'நேத்துகூட நெம்பருங்களுக்கு நான் துண்டு போட்டேன்.' (பதவியேற்பின்போது புதிய ஊராட்சி உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தியதை வெட்கச் சிரிப்புடன் கூறுகிறார்.)
உங்கள் பதவிக்காலத்தில் என்னென்னெ செய்யத் திட்டமிட்டு உள்ளீர்கள்?
இப்போதே தெருக்களில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை கூறத் தொடங்கிவிட்டனர். தண்ணீர், கழிவறை, தெருவிளக்கு என்று எங்களுக்கு ஏற்கனவே பல கஷ்டங்கள் உள்ளன. உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும்.
துப்புரவு பணியாளராக இருந்த ஊராட்சிக்கே தலைவர் ஆக்கியுள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
ரொம்ப சந்தோசமா இருக்குது. பஞ்சாயத்து ஆபீஸ், யூனியன் ஆபீஸ் பத்தி ஏற்கனவே கொஞ்சம் தெரியும். தலைவரா வேலை செய்ய அது உதவியா இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












