இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றினால் கடும் தடைகள்: டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images
இராக்கில் இருந்து அன்னியப் படைகள் வெளியேறவேண்டும் என்று இராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டால், அவர்கள் பார்த்திராத வகையில் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இராக் தலைநகர் பாக்தாத்தில், அண்டை நாடான இரான் புரட்சிகர ராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது. பழிவாங்கப் போவதாக ராணுவம் சபதம் செய்துள்ளது.
இந்நிலையில், இராக்கில் இருந்து அன்னியப் படைகள் வெளியேற வேண்டும் என்று இராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "எங்களுக்கு அங்கு (இராக்கில்) அசாதாரணமான, விலை மதிப்பு மிக்க விமான தளம் உள்ளது. அதைக் கட்டுவதற்கு பல நூறு கோடி டாலர்கள் செலவு பிடித்தது. எங்களுக்கு அந்தப் பணத்தை திருப்பித் தந்தால் ஒழிய நாங்கள் வெளியேறமாட்டோம்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபருக்கான விமானத்தில் இருந்து பேசிய டிரம்ப், "நட்பற்ற முறையில் அமெரிக்கப் படைகளை வெளியேறும்படி இராக் கூறுமானால், அவர்கள் முன்பு பார்த்திராத வகையில் தடைகளை விதிப்போம். இரான் மீது விதிக்கப்பட்ட தடைகளே சாதாரணம் என்று தோன்றும்படி அது இருக்கும்" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். குழுவுக்கு எதிரான சர்வதேச கூட்டணியில் அமெரிக்கா உறுப்பு வகிப்பதால், 5,000 அமெரிக்கப் படையினர் இராக்கில் நிலை கொண்டுள்ளனர்.
இராக்கில் ஐ.எஸ். குழுவுக்கு எதிரான நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைத்தது இந்தக் கூட்டணி. இராக் எம்.பி.க்கள், வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்று கோரி, கட்டுப்படுத்தாத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள இரானுக்கு நெருக்கமான ஷியா முஸ்லிம் பிரிவினர் அழுத்தத்தினால் இந்தத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட 62 வயதான சுலேமானீ, மத்தியக் கிழக்கு நாடுகளில் இரான் ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். இவரை பயங்கரவாதி என்று அறிவித்திருந்தது அமெரிக்கா.
இரான் கொண்டு செல்லப்பட்ட சுலேமானீயின் உடலுக்கு, பல்லாயிரம் மக்கள் வீதிகள் முழுவதும் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர். சுலேமானீ தலைமை வகித்து வழிநடத்திய குத்ஸ் ஃபோர்ஸ் என்ற படையின் புதிய தலைவரான இஸ்மாயில் கானி, மத்தியக் கிழக்கில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது என்று சபதம் செய்துள்ளார்.
"தியாகி சுலேமானீயின் பாதையில் அதே வேகத்தில் செல்வோம். அமெரிக்காவை இந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவதே எங்களுக்கு இழப்பீடாக இருக்கும்" என்று அவர் அரசு வானொலியில் பேசினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












