ஆஸ்திரேலியா காட்டுத்தீ - நிம்மதி தந்த மழை, ஆனால் பெருந்தீ பரவும் அபாயம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Darrian Traynor / Getty Images
கடந்த சில மாதங்களாக காட்டுத்தீயினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஆஸ்திரேலியாவில் தற்போது மழை பெய்துள்ளதால் சற்று வெப்பம் தணிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள சிட்னியில் இருந்து மெல்பர்ன் வரை மிதமான மழையும், நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் கன மழையும் பெய்துள்ளது.
ஆனால், வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, விக்டோரியா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ ஒன்றாக சேர்ந்து பெருந்தீயாக உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மழை பெய்து சற்று வெப்பம் தணிந்துள்ள போதிலும், காற்று மாசு அபாயகர நிலையில்தான் உள்ளது.
தொடர்புடைய செய்தி: ஆஸ்திரேலிய காட்டுத்தீ: 50 கோடி விலங்குகள் உயிரிழந்ததா? உண்மை என்ன?

டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images
இராக்கில் இருந்து அன்னியப் படைகள் வெளியேறவேண்டும் என்று இராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டால், அவர்கள் பார்த்திராத வகையில் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இராக் தலைநகர் பாக்தாத்தில், அண்டை நாடான இரான் புரட்சிகர ராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது. பழிவாங்கப் போவதாக இராணுவம் சபதம் செய்துள்ளது.
இந்நிலையில், இரானில் இருந்து அன்னியப் படைகள் வெளியேற வேண்டும் என்று இராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

JNU வன்முறை: ஒரு பக்கம் ஜெய் ஸ்ரீராம், மற்றொரு பக்கம் இன்குலாப் ஜிந்தாபாத்

பட மூலாதாரம், Getty Images
நூற்றுக்கணக்கான போலீஸார் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் உரக்க கேட்கிறது, இன்னொரு பக்கம் இன்குலாப் ஜிந்தாபாத் கோஷம். இப்படியாகத்தான் இருந்தது மாலையில் நாங்கள் சென்றபோது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.
ஒரு கல்வி நிறுவனம் போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.

10 வாக்குகளே பெற்று வென்ற தலித் பெண் பதவியில் நீடிப்பாரா?

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சியில் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற தலித் பெண் ஊராட்சி மன்றத்தின் தலைவரானது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
பிச்சிவிளை கிராம ஊராட்சியின் தலைவராக, ராஜேஸ்வரி எனும் தலித் பெண்ணுக்கு வெறும் 10 வாக்குகளால் கிடைத்த வெற்றி என்பது மட்டும் இதற்கு காரணமல்ல.
தங்கள் ஊராட்சியின் தலைவர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து ஊரில் உள்ள பெரும்பான்மை சாதியினர் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர் என்பதே இந்த விவகாரம் பேசப்பட முக்கியக் காரணம்.
விரிவாக படிக்க: 10 வாக்குகளே பெற்று வென்ற தலித் பெண் பதவியில் நீடிப்பாரா?

நாளை மறுநாள் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images
தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளுடன் செயல்படுவதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து வரும் ஜனவரி 8ஆம் தேதி (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன,
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்க கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












